காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவில் அமைந்துள்ளது மஹான் அஸ்ஸெய்ய்த் அஹ்மத் ஸாஹிப் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தலம். ஆண்டுதோறும் முஹர்ரம் முதல் நாள் முதல் 14ஆம் நாள் வரை இம்மஹான் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை.
அன்னாரின் 140ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 27.11.2011 அன்று துவங்கி, 09.12.2011 அன்று நிறைவுற்றது. அந்நாட்களில் தினமும் அதிகாலையில் கத்முல் குர்ஆன் ஓதி மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
நிறைவு நாள் நிகழ்ச்சிகள் முஹர்ரம் 12 முதல் 14ஆம் நாள் வரை நடைபெற்றது. முஹர்ரம் 12ஆம் நாளான 08.12.2011 அன்று மாலை 04.30 மணிக்கு இமாம் ஹஸன் - ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா மீதான மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. அன்றிரவு 07.00 மணிக்கு ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இமாம் ஹஸன் - ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ இந்த சொற்பொழிவை நிகழ்த்தினார்.
முஹர்ரம் 14ஆம் நாளான 09.12.2011 வெள்ளிக்கிழமையன்று மாலை 04.30 மணிக்கு மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்கள் மீதான மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. அன்றிரவு 07.00 மணிக்கு ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. பின்னர் மஹான் அவர்களின் வாழ்க்கை வரலாற்று சுருக்க உரையை, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ நிகழ்த்தினார்.
துஆ ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள் அனைத்திலும் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்க் அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ தலைமையில், அதன் செயலர்களான ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ், ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத் ஆகியோரும், ஏற்பாட்டுக் குழுவினரான ஹாஜி எம்.ஏ.அஹ்மத் லெப்பை, எஸ்.எம்.செய்யித் இப்றாஹீம், எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன், ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், ஏ.எம்.அஹ்மத் ஜியாத், எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம், நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் ஆகியோர் செய்திருந்தனர். |