தமிழக அரசின் - ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (INTEGRATED URBAN DEVELOPMENT MISSION) 2012-2013இன் கீழ் ரூபாய் 1 கோடியே 95 லட்சம் தொகையும், நகராட்சி பொதுநிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் தொகையும் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 7 லட்சம் செலவு மதிப்பீட்டில், காயல்பட்டினத்தில் நலத்திட்டப் பணிகள் செய்வதற்கான தீர்மானம் கடந்த 2012 அக்டோபர் மாதம் 05ஆம் நாளன்று நடந்த நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அப்பணிகள் குறித்த விளம்பரம் அக்டோபர் 17, 2012 - நாளிதழ்களில் வெளியானது.
பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் குறித்து நவம்பர் 30, 2012 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நவம்பர் 30, 2012 அன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் - அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் ஒன்று - புதுப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரை மழை நீர் வடிகால் அமைக்கும் பணியாகும். 13 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இப்பணியை தளவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரர் மதிப்பீட்டு தொகைக்கே செய்திட சம்மதம் தெரிவித்து, பணி ஒப்பந்தம் பெற்றார். சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு இம்மழை நீர் வடிகால் அமைக்கப்படவேண்டும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இப்பணி அண்மையில் துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, காயல்பட்டினம் புதுப்பள்ளி முனையிலிருந்து ரிஸ்வான் சங்க முனை வரையிலும், அடுத்து ரிஸ்வான் சங்க முனையிலிருந்து ஐக்கிய விளையாட்டு சங்க வடகிழக்கு முனை வரையிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய விளையாட்டு சங்க வடகிழக்கு முனையிலிருந்து பேருந்து நிலையம் வரை வடிகால் அமைக்கும் பணிகள் இம்மாதம் 11ஆம் நாளன்று துவக்கப்பட்டு, இன்றளவும் நடைபெற்று வருகிறது. காட்சிகள் வருமாறு:-







 |