| 
 அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  
துவக்கமாக, 01ஆவது வார்டு பொதுமக்களுக்காக, காயல்பட்டினம் நெய்னார் தெருவில் அமைந்துள்ள முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி (Primary Section) வளாகத்தில், இம்மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று (நேற்று) காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை, குடியிருப்போர் அடையாள அட்டைக்கான - பயோ மெட்ரிக் முறையில் விபரங்கள் சேகரிக்கும் முகாம் நடைபெற்றது. 
  
 
  
காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் மேற்பார்வையில் நடைபெற்ற இம்முகாமில், 10 கணனிகள் மற்றும் துணைக் கருவிகளைக் கொண்டு, காயல்பட்டினம் 01ஆவது வார்டுக்குட்பட்ட - கோமான் தெரு, கடையக்குடி (கொம்புத்துறை) பகுதிகளைச் சேர்ந்த 424 பேரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. 
  
குடும்ப உறுப்பினரின் நிழற்படம், கருவிழிகளின் படங்கள், 10 விரல்களின் ரேகைப் பதிவுகள் ஆகியன கணனி துணையுடன் படம் பிடிக்கப்பட்டு, அவர்களின் விபரங்களுடன் பதிவு செய்யப்பட்டது. 
  
 
  
முகாமின்போது விபரங்களைப் பதிவு செய்வதற்காக வந்த பொதுமக்களுக்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், 01ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருந்து, அண்மையில் பதவி விலகல் கடிதம் அளித்துள்ள ஏ.லுக்மான், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளர் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், அதன் துணைச் செயலாளர் வாவு ஷாஹுல் ஹமீத், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் உள்ளிட்டோரடங்கிய தன்னார்வலர்கள் வழிகாட்டல் பணிகளைச் செய்தனர். 
  
 
  
 
  
01ஆவது வார்டுக்கான இம்முகாம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  
இதர வார்டுகளுக்கான முகாம் நடைபெறும் நாட்கள் குறித்து அறிய, அந்தந்த வார்டு நகர்மன்ற உறுப்பினரைத் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  |