| 
 பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 2.96 உயர்த்தி பாரத் பெட்ரோலியம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் விலை உயர்வை இன்று அறிவிக்கின்றன. அவை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும். 
  
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலராக உயர்ந்துள்ளது. எனவே, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலை மீது லிட்டருக்கு ரூபாய் 4.17  வரை நஷ்டத்தை சந்தித்தன. பெட்ரோல் விலையை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே மாற்றி அமைத்துக் கொள்ளும் வகையில் விலை மீதான கட்டுப்பாட்டை கடந்த ஜூன் மாதத்தில் மத்திய அரசு விலக்கிக் கொண்டது. 
  
எனினும், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் விலை நிர்ணயம் மீது அரசின் கட்டுப்பாடு நீடிக்கிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 2 வரை உயர்த்தப்படலாம் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. ஆனால், எதிர்பார்ப்பை விட அதிகமாக, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 2.96 உயர்த்தி பாரத் பெட்ரோலியம் நிறுவனம் நேற்று அறிவித்தது. விலை உயர்வு நேற்று நள்ளிரவே அமலுக்கு வந்தது. 
  
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் சில எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் விலை உயர்வை அறிவிக்க உள்ளன. அவை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. 
  
டீசல் விலையை பொருத்தவரை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சரவை குழு டிசம்பர் 22ல் கூடி முடிவு எடுக்கும். டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஸி5 இழப்பை சந்தித்து வருகின்றன. எனினும், டீசல் விலையை அதிகளவில் உயர்த்தினால் விலைவாசி மேலும் உயரும் என்பதால், எண்ணெய் நிறுவனங்கள் கேட்கும் அளவுக்கு விலை உயர்வை அனுமதிக்க அரசு தயக்கம் காட்டி வருகிறது. 
  
தகவல்: 
தினகரன்
  |