| 
   காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் பல ஆண்டுகளாக 
நகராட்சியில் சேரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி, அப்பகுதி மக்களின் 
சார்பாக எஸ்.ஏ.கே. ஷேக் தாவூத் ("மாஷா அல்லாஹ்" தாவூத்) மற்றும் ஏ.பன்னீர்செல்வம் ஆகியோர் பெயரில் வழக்கு ஒன்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் - 
தொடரப்பட்டது (வழக்கு எண் 221/2016[SZ]).  
  
அந்த வழக்கு - மீண்டும் ஏப்ரல் 12 அன்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் - நீதிபதி எம்.எஸ். நம்பியார் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் முனைவர் 
நாகின் நந்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
  
இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வாதங்கள் அடிப்படையில் - நீதிபதி எம்.எஸ்.நம்பியார் தனது இறுதி உத்தரவினை அன்று பிறப்பித்தார். 
  
அன்று வெளியிடப்பட்ட ஆணையின் முழு விபரங்கள், தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
  
அதில் -
  
"...எதிர்மனுதார் எண் 4   க்கு (காயல்பட்டினம் நகராட்சி),  எல்.எப்.சாலை ஓரங்களிலோ அல்லது பப்பரப்பள்ளி மற்றும் இதர பகுதிகளில் உள்ள 
பொது மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக செல்லும் சாலைகளின் ஓரங்களிலோ - குப்பைகளை கொட்டக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  
  
மேலும் - எதிர்மனுதாரர் 1  (தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்) மற்றும் எதிர்மனுதாரர் 2 (மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தூத்துக்குடி) 
ஆகியோர் நடப்புகளை கண்காணித்து, சாலை ஓரங்களில் - குப்பைகளை நகராட்சி கொட்டாததை உறுதி செய்யவேண்டும் என்றும் உத்தரவு 
பிறப்பிக்கப்படுகிறது" 
  
என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  
 
  
 
  
 
  
 
  
 
  |