Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:19:05 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12028
#KOTW12028
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 8, 2013
பயோகாஸ் திட்டத்திற்கான இடம், குப்பைகள் கொட்ட இடம் ஆகியவற்றை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் காயல்பட்டினம் விஜயம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5950 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசு - காயல்பட்டினம் நகராட்சியில் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) - அமல்படுத்த, கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா - சட்டப்பேரவையிலும் இவ்வாண்டு இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டார். 90 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் மூலம் மக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, அதன் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தெருவிளக்குகளை இயக்கலாம்.

இத்திட்டத்திற்கு தேவைப்படும் சுமார் 20 சென்ட் நிலமும், 2006 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருக்கும் - நகரில் அன்றாடும் உருவாகும் குப்பைகளை கொட்டுவதற்கான இடத்திற்கு தேவைப்படும் சுமார் 5 ஏக்கர் நிலமும் கோரி - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொதுமக்களிடமும், அமைப்புகளிடமும் கோரிக்கை வைத்தார்.

தேவைப்படும் இடம் வழங்குவதாக எவரும் முன் வராத காரணத்தால், வருவாய் அதிகாரிகளால் அடையாளம் காட்டப்பட்ட 4 இடங்கள் - நவம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்றக்கூட்டத்தில் பரிசீலனைக்கு வைக்கப்பட்டது. அவை காயல்பட்டினம் வட பாகம் சர்வே எண் 8 (24 ஏக்கர்), காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 524/1 (8.5 ஏக்கர்) (தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனம் இடம்), காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 237BB/1 (22 ஏக்கர்) (மத்திய அரசின் உப்பு இலாக்கா இடம்), காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 46 (13 ஏக்கர்) ஆகும்.



கூட்டத்தின் போது உறுப்பினர்கள் சிலர் - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையிடம் இடம் கோரலாம் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து - டிசம்பர் 19, 2012 அன்று - ஐக்கிய பேரவை சார்பாக, தேவைப்படும் 5 ஏக்கர் நிலத்தினை, கடையக்குடி (கொம்புத்துறை) பகுதியில் உள்ள தனது இடத்தில இருந்து தர முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜ் வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் முன் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 1, 2013 அன்று பயோ காஸ் திட்டத்திற்கான இடங்களை தேர்வு செய்ய அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார் IAS காயல்பட்டினம் வந்திருந்தார். நெடுஞ்சாலை அருகில் அமைந்திருக்கும் தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனத்தின் வசம் உள்ள - காயல்பட்டினம் தென்பாகம் சர்வே எண் 524/1 இடத்தை சென்று பார்த்தார். அவ்விடம் குறித்த விபரங்களை ஒரு வார காலத்திற்குள் தனக்கு அளிக்கும்படி தாசில்தாரிடம் மாவட்ட ஆட்சியர் கூறினார்.



ஐக்கிய பேரவை மூலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன் வந்த ஐந்து ஏக்கர் நிலத்தை - நேரமின்மை காரணமாக நேரடியாக பார்க்க முடியாததால், அந்நிலம் குறித்த விளக்கங்களை தயார் செய்து தனக்கு தரும்படி அங்கிருந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார்.

அதனை தொடர்ந்து முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன் வந்த இடத்தை நேரடியாக பார்வையிட வரக்கோரி உறுப்பினர்கள் சிலர் - பிப்ரவரி 4 அன்று மாவட்ட ஆட்சியரிடம் கடிதமும் வழங்கினர்.

நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனத்தின் வசம் உள்ள காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 524/1 (8.5 ஏக்கர்) இடத்தினை சந்தை விலையில் நகராட்சிக்கு தர தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனம் இசைவு தெரிவித்தது. நகராட்சி ஒரு அரசு ஸ்தாபனம் என்பதால், முழு சந்தை விலைக்கு நிலம் வாங்க முடியாது என்றும், அரசு மதிப்பீட்டு தொகைக்கே நிலத்தினை தரும்படியும் நகர்மன்றத் தலைவர் - தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்த முடிவு சம்மேளனத்திடம் இருந்து இதுவரை வரவில்லை என தெரிகிறது.

பயோகாஸ் திட்டம் - ஒதுக்குப்புறமாக இல்லாத இடத்தில் அமையவேண்டும் என்பதால், இத்திட்டத்திற்கு மட்டும் தேவையான சுமார் 20 சென்ட் நிலத்தை முதலில் அடையாளம் காண, நகரில் உள்ள சில புறம்போக்கு இடங்களை பரிசீலிக்குமாறு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக - கிராம அதிகாரி அலுவலகம் அருகில் உள்ள இடம் (சர்வே எண் 625/2) உட்பட சில இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வந்தது.



அரசு ஆவணங்கள்படி புறம்போக்கு இடங்களான சர்வே எண் 334/1&2 (34 சென்ட்), 392/5 (7.54 ஏக்கர்) ஆகியவற்றை - பயோ காஸ் திட்டம் அமைத்திட பரிசீலனை செய்ய நகர்மன்றத் தலைவர், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து இன்று காலை 9:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் IAS - காயல்பட்டினத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள், நகர ஊரமைப்பு இயக்கக துணை இயக்குனர் உட்பட பலர் வந்திருந்தனர்.

பின்னர் மாவட்ட மற்றும் இதர அதிகாரிகளுடன், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற அதிகாரிகள் இடங்களை பார்வையிட புறப்பட்டனர்.

சர்வே எண் 392/5 ஆய்வு



துவக்கமாக 18ஆம் வார்டிலுள்ள 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவுடைய நிலப்பகுதியை, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.



அப்பகுதியில், பல்வேறு சமூகத்தினர் இறந்தவர்களை அடக்கம் செய்தும், எரித்தும் வருவதாகவும், அதற்காக அங்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என அம்மக்கள் கோரி வருவதாகவும், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி மாவட்ட ஆட்சியரிடம் கூறினார். இறந்தவர்களை அடக்கவோ, எரிக்கவோ தேவையான இடங்களை அனைத்து மதத்தினருக்கும் ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று அவரிடம் கூறிய மாவட்ட ஆட்சியர், அதே நேரத்தில் ஜாதிவாரியாக ஒவ்வொரு சமூகத்தினருக்கும் இடம் ஒதுக்குவது சாத்தியமற்றது என்றும் கூறினார்.



உயிரி எரிவாயு மையம் அமைக்க இவ்விடம் சிறந்த இடமாக இருக்கலாம் என தான் கருதுவதாலும், அரசுக்குச் சொந்தமான நிலம் இருக்கும்போது அதைப் பயன்படுத்திட முதலில் பரிசீலிக்கலாம் என்றும் கூறிய மாவட்ட ஆட்சியர், இதற்கான உத்தரவை தான் அனுப்பி வைப்பதாக கூறினார்.

சர்வே எண் 334 ஆய்வு



தொடர்ந்து அருணாச்சலபுரத்திலுள்ள 334/1, 334/2 ஆகிய சர்வே எண்களைக் கொண்ட நிலப்பரப்பை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். இப்பகுதி அரசு புறம்போக்கு இடம் என்பதை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாக தாங்கள் அறிந்துகொண்டதாகவும், தம் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அவ்விடத்தை தாங்கள் அரசிடம் கேட்டுக்கொண்டிருக்க, தனியார் ஒருவர் அவ்விடத்திற்கு உரிமை கொண்டாடி வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.





அது அரசு புறம்போக்கு இடம் என்பதற்காகக் காண்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், அரசுக்குச் சொந்தமான இடத்தை தனியார் உரிமை கொண்டாட இயலாது என்று கூறினார்.



சர்வே எண் 278 ஆய்வு



பின்னர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் - 2009 ஆம் ஆண்டு காயல்பட்டினம் நகராட்சிக்கு தருவதாக கூறிய சர்வே எண் 278 இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட சென்றார்.

அக்டோபர் 2009 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


இந்த சர்வே எண் CRZ பகுதிக்குள் வருவதாக முந்தைய நகர்மன்ற காலத்திலேயே நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் (DTCP) அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.



இதே சர்வே எண் இடத்தை மீண்டும் தருவதாக ஐக்கிய பேரவை மூலம் கடந்த டிசம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது.



CRZ பகுதியில் இருந்து ஒதுங்கி (இதே சர்வே எண்ணில்) வேறு இடத்தை தருவதாக முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் மாவட்ட ஆட்சியரிடம் இன்று தெரிவித்தார். இந்த பகுதியில் குப்பைக்கொட்டும் இடம் அமைந்தால் - நீண்ட தூரத்திற்கு புதிய சாலை அமைக்கவேண்டி இருக்கும் என்றும், அவ்வாறு அமைக்கப்படும் சாலை சர்வே எண் 278 தவிர, பிற தனியார் சர்வே எண்களையும் தாண்டி வரும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பிற உரிமையாளர்களிடமும் பேசி இது குறித்து முடிவு தெரிவிப்பதாக - மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் நகர்மன்றத் தலைவரால் தெரிவிக்கப்பட்டது.



கோட்டாட்சியர் தமிழ்ராஜன், திருச்செந்தூர் வட்டாட்சியர் (தாசில்தார்) நல்லசிவன், காயல்பட்டினம் தென்பாக கிராம நிர்வாக அலுவலர் எம்.வைரமுத்து, ஆணையர் ஜி.அசோக் குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஏ.ஹைரிய்யா, ரெங்கநாதன் என்ற சுகு, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி உள்ளிட்டோர் இந்நிகழ்வுகளின்போது உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அரசு புறம்போக்கு (80 ஏக்கருக்கு மேல் உள்ள) நிலமெல்லாம் தற்போது எங்கே... !
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [08 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30590

CRZ பகுதியில் இருந்து ஒதுங்கி (இதே சர்வே எண்ணில்) வேறு இடத்தை தருவதாக முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் மாவட்ட ஆட்சியரிடம் இன்று தெரிவித்தார். CP

நகரின் தேவைக்கு உதவி செய்ய முன் வந்து பெருந்தகைக்கு வாழ்த்துக்கள்... அதே நேரத்தில் நாம் இதையும் கவனிக்க வேண்டும்...!

1976ஆம் ஆண்டு காயல்பட்டினம் பஞ்சாயத்திற்கு அப்போது திருச்செந்தூர் தாசில்தாராக இருந்த வேலாயுதம் என்பவர் நம் நகர் பஞ்சாயத்திற்கு ஒப்படைக்கப்பட்ட காயல்பட்டினம் தென் பாக - வட பாக கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு (80 ஏக்கருக்கு மேல் உள்ள) நிலமெல்லாம் தற்போது எங்கே... ! மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்த வேண்டும்...!

அருணாச்சலபுரத்திலுள்ள 334/1, 334/2 ஆகிய சர்வே எண்களைக் கொண்ட நிலப்பரப்பை அப்பகுதி மக்கள் அரசு புறம்போக்கு இடம் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொண்டது போல் ஏன் (இந்த இணையத்தில் குறிபிடப்பட்டுள்ள) பிற சர்வே எண்களைக் கொண்ட நிலப்பரப்பை தெரிந்து கொள்ள முயற்சிக்க கூடாது...?

அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் ஒருவர் அவ்விடத்திற்கு உரிமை கொண்டாடி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக செய்தியில் அறியமுடிகிறது... இது போல் எத்தனை எத்தனை அரசு நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதோ... !

அதை தீவிரமாக ஆராய்ந்தாலே பயோகாஸ் திட்டத்திற்கான இடம் அமைந்து விடும் என்பதில் சந்தேகம் அல்ல...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஒன்னுமே புரியல்லே உலகத்திலே....!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [08 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30592

ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்கிறது. நகர்மன்ற முன்னாள் தலைவர் அவர்கள் நிலத்தை நம் நகராட்சிக்கு விலைக்கு தருவதாக கூறியுள்ளார். அதையே வாங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் காட்ட வேண்டும் என பெரும்பாண்மை உறுப்பினர்களும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் அடம்பிடிப்பது எதனால்? நூற்றுக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலமாக நகராட்சிக்கு உட்பட்டு கிடக்கும் போது விலை கொடுத்து வாங்குவது எதற்கு?

தலைவிக்கு வாகனம் வாங்கினால் மக்கள் பணம், பற்றக்குறை என வாய்கிழிய பேசும் உறுப்பினர்கள் இந்த நில விஷயத்தில் அடம்பிடிப்பது எதற்கு?

அப்படியே ஹாஜியாரின் நிலத்தை வாங்கினால் நீண்ட தூரத்திற்கு சாலை அமைக்க வேண்டும் சில தனியார் நில உரிமையாளர்கள் அதற்கு சம்மதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியது சிந்திக்க வேண்டிய விஷயம். இனி நிலத்திற்கு ஒரு செலவு, சாலை அமைக்க ஒரு செலவு? இது தேவைதானா?

சுனாமி எல்லைக்கு உட்பட்ட நிலமாக இருந்தாலும் பெருங்கொண்ட தனவந்தரான முன்னாள் சேர்மன் நம் ஊர் நலனுக்காக சுமார் 20 செண்ட் நிலத்தை இலவசமாகத் தரலாமே? அதை விடுத்து நகராட்சிக்கு விற்பனை செய்ய முன் வருவது எதனால்?

நகராட்சிக்கு உட்பட்ட புறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்தி வரும் பலதரப்பட்ட சமூகங்களுக்கு இத்தனை ஏக்கர் நிலம் தேவைதானா?

மயான பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் 20 செண்ட் நிலத்தை பயோ கேஸ் திட்டத்திற்காக பயன்படுத்தலாமே என நகர் மன்ற கூட்டத்தில் தலைவி கூறியபோது உடனே மறுப்பு தெரிவித்த வார்டு 18 உறுப்பினர் திரு சாமி அவர்கள், இல்லை இல்லை அது மயானத்திற்குரியது. அங்கு குப்பை கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது எதனால்?

இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். எது எப்படியோ? இத்தளத்தில் சமீபகாலமாக புறம்போக்கு நிலங்களைப் பற்றிய புள்ளி விபரங்கள் புட்டுப்புட்டு வைக்கப்பட்டு வருகின்றன. எந்த புள்ளி மாட்டப் போறாரோ...? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. விடை தெரியாமல் போன நகர்மன்றத்தின் அரசு நிலம்.
posted by syed ahamed (chennai ) [09 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30595

சில கேள்விளை கருத்தாக பதியும் சகோதரர் ரபீக் மற்றும் தமிழன் முத்துவின் கேள்விகள் நம்மை சிந்திக்கத்தான் தூண்டுகின்றன.

அணைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கேள்வியோடு 1976ஆம் ஆண்டு திருச்செந்தூர் தாசில்தாராக இருந்த வேலாயுதம் என்பவர் நம் நகர்மன்றதிற்க்கு ஒப்படைக்கப்பட்ட சுமார் 80 ஏக்கர் நிலங்கள் தற்போது எங்கே என்ற கேள்விகளை நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் எழுப்பலாமே.

இதற்கு தீர்வு வரும் வரை உறுப்பினார்கள் நாங்கள் இனி கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என கூறி வெளிநடப்புகள் செய்ய வேண்டும். மக்கள் கண்டிப்பாக உங்களின் நியாயத்தை ஏற்று கொள்வார்கள்.

இது விசியத்தில் மக்கள் விழிபுணர்வு பெற்று விட்டால் விடை தெரியாமல் போன நகர்மன்றத்தின் அரசு நிலம். என்ற வாசகத்தோடு விரைவில் நகர் முழுதும் போஸ்டர்கள் தென்படலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [09 October 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 30599

=========மாவட்ட ஆட்சியர் காயல்பட்டினம் விஜயம்!============

எந்தகாலத்து சொற்கள்? அந்தகாலத்து தினமணி உபயோகிக்கும் சொற்கள்.

விஜயம் என்பதைவிட "வருகை" என்று போடலாமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Rights of Right Person
posted by Jahir Hussain VENA (Bahrain) [09 October 2013]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 30601

"சுனாமி எல்லைக்கு உட்பட்ட நிலமாக இருந்தாலும் பெருங்கொண்ட தனவந்தரான முன்னாள் சேர்மன் நம் ஊர் நலனுக்காக சுமார் 20 செண்ட் நிலத்தை இலவசமாகத் தரலாமே? அதை விடுத்து நகராட்சிக்கு விற்பனை செய்ய முன் வருவது எதனால்?"
Copy and paste

I thing here no one has the right to interfer Mr.WSAR personal rights...

Dear Admin,
Hope you will post ours comments without any alterations.. to stablize my rights


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஹராம்! ஹராம்!!ஹராம்!!!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU) [09 October 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30603

ஐயோ என் கிணத்தை காணோம் சார்!
ஐயோ என் கிணறு!!!!
ஐயோ என் கிணறு!!!!
என்று கூப்பாடு போடும் வசனம் மிகவும் பிரசித்திப்பெற்றது என்பது பெரும்பாலோருக்கு தெரிந்த சிரிப்பு வசனம்!

ஆனால் தற்போது நம்மூர் நிலைமை சிரிப்பு வசனம் இல்லை, சிந்திக்க வேண்டிய, வேதனையான விஷியம், 80ஏக்கர் நிலம் எங்கே? எங்கே? ஹராம்! ஹராம்!!ஹராம்!!!

அன்புத் தலைவி அவர்களே. அருமை அனைத்து உறுப்பினர்களே ஒட்டு மொத்தமாக களத்தில் இறங்குகள். கள்வர்களை காயல் மக்களுக்கு அடையாளம் காட்ட அல்லும், பகலும் உண்மையாக உழைத்து வெற்றியை அடையுங்கள் உங்களை நம்புகிறோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மறைத்தது ஏன்???
posted by Hameed Rifai (Kayalpatnam) [09 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30605

இச்செய்தி குறித்த எனது பின்வரும் சந்தேகங்களுக்கு தங்களிடம் விடை உள்ளதா?

கேள்வி 1:

மாவட்ட ஆட்சியர் 18ஆவது வார்டிலுள்ள மயான புறம்போக்கு நிலத்தைப் பார்வையிட்டபோது, அந்த இடத்தில் பயோகேஸ் திட்டம் வந்துவிடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டிய நகர்மன்ற உறுப்பினர்கள் - குறிப்பாக 18ஆவது வார்டு உறுப்பினர் திரு. இ.எம்.சாமி அவர்கள், “பல்வேறு சாதி மதத்தினர் பயன்படுத்தும் இந்த மயானப் பகுதியில் அனைவருக்கும் தனித்தனி மயானம் அமைத்துக் கொடுக்க நகர்மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக் கூறியிருக்கிறார்.

“சடங்குகளால் வேறுபட்டுள்ளதற்காக, மத ரீதியாக அனைவருக்கும் இடம் அளிக்கலாம்” என்றும், “ஜாதி ரீதியாக இடம் ஒதுக்குவது நடைமுறை சாத்தியமற்றது” என்றும் கூறி, “அவ்வாறு செய்வதானால், தமிழ்நாட்டையே சுடுகாடாகத்தான் ஆக்கனும்” என்று சொன்னாராமே மாவட்ட ஆட்சியர்?

அதற்குப் பிறகும் மல்லுக்கட்டிய சாமி அவர்கள், பயோகேஸ் இங்கு வந்தால் வாசம் வரும், வீச்சம் வரும் என்றெல்லாம் சொன்னபோது, “இதுதான் பொருத்தமான இடம்! நான் உத்தரவை அனுப்புகிறேன்.... அதற்குப் பிறகு நீங்க விவாதித்துக்கொள்ளுங்க! சரி வரலைன்னா திட்டத்தை திருப்பி அனுப்ப வேண்டியதுதான் என்றும் சொன்னாராமே?

கேள்வி 2:

அருணாச்சலபுரத்திலுள்ள நிலம் அரசு புறம்போக்கு என்பதை ஆவணங்களைக் கொண்டு மாவட்ட ஆட்சியர் உறுதி செய்த பின்பும், காயல்பட்டினம் தென்பாக வி.ஏ.ஓ. திரு வைரமுத்து அவர்கள், “அவங்க பத்திரம் வச்சிருக்காங்க...” என்று சொன்னதற்கு, “நீர்தான் பத்திரம் போட்டு கொடுத்தீரா?” என்று கேட்டாராமே மாவட்ட ஆட்சியர்?

“அவங்க பணக்காரங்க” என்று காயல்பட்டினம் வடபாக வி.ஏ.ஓ. சொன்னதற்கு, “நீ அரசாங்கத்துக்கு வேலை செய்யறியா அல்லது பணக்காரனுக்கு வேலை செய்யறியா?” என்று கேட்டாராமே?

கேள்வி 3:

காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனத்திற்குச் சொந்தமான இடத்தை சந்தை விலைக்கே வாங்க முடிவெடுத்தால், அதற்கு ஆகும் செலவோ மிகக் குறைவு! நகராட்சியின் சார்பில் புதிய சாலையும் அமைக்க வேண்டியதில்லை. தெரு விளக்கும் தேவையில்லை.

அந்த இடம் மட்டும்தானா உள்ளது. பயோகேஸ் பிளாண்டுக்கு 25 சென்ட் அளவுள்ள புறம்போக்கு நிலமும் உள்ளது. குப்பைக்கொட்ட 5 ஏக்கருக்கு மேலேயும் புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த விபரம் இந்த இணையதளத்தில செய்தியா வரத்தானே செய்துச்சு.

இவ்வளவு சாதகமான சூழ்நிலை இருக்கும்போது, முன்னாள் நகர்மன்றத் தலைவர் வாவு செய்யது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள், ஏக்கர் 1 லட்சம் ரூபாய்க்குத் தருவதாகக் கூறினார் என்பதற்காக, அதை வாங்குவதற்கு நகர்மன்ற துணைத்தலைவர் தலைமையில் தொடர்முயற்சி மேற்கொள்ளப்படுவதன் மர்மமென்ன?

இந்த இடத்தை வாங்க முடிவெடுத்தால், சுமார் 2-3 கிலோ மீட்டருக்கு 5 மீட்டர் அகலத்தில் புதிய சாலை அமைக்க வேண்டும். தெரு விளக்குகள் புதிதாக அமைத்துக்கொடுக்க வேண்டும். இந்த அனைத்தையும் செய்வதற்கு நகராட்சியின் மக்கள் வரிப்பணம் சுமார் 1 கோடி ரூபாய் வரை செலவாகும்.

இவ்வளவு இருந்தும் அந்த இடத்தை வாங்க பெரும்பான்மை நகர்மன்ற உறுப்பினர்கள் துடிப்பது ஏன்? அப்படி ரோடு போடப்பட்டால், இன்று சல்லிக் காசு பெறாத அவர்களின் இதர நிலங்கள் பல லட்சங்களுக்கு விலை மதிப்பைப் பெறும். இதனால் நில உடமையாளருக்கு பல லட்சங்கள் லாபம் என்ற சாதாரண உண்மை, மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரியாமல் போய்விட்டதா?

அவங்கவங்க வீட்டுக் காசை எடுத்துக் கொடுக்கட்டும். நாங்க யாரும் கேட்க மாட்டோம். மக்கள் வரிப்பணம் - இப்படி வீணடிக்கப்பட, சிலரின் தொழில் வளர்ச்சிக்கு பயன்பெற - பொது மக்கள் ஒருகாலமும் அனுமதிக்கூடாது.

சப் ஸ்டேஷன் விசயத்தில் என்ன நடந்தது? இதேதானே நடந்தது?? எத்தனையோ ஏக்கர் புறம்போக்கு நிலம் இருக்க (தேவையான 1 ஏக்கர் உட்பட) - மக்களிடம் வசூல் செய்து 20 லட்ச ரூபாய்க்கு தனியாரிடம் நிலம் வாங்கி, இன்னும் 20 லட்சத்துக்கு மக்கள் வரிப்பணத்தில் ரோடு போட்டு ... என்ன ஆச்சு? அந்த ரோட சுத்தி நிலம் விலை உயர்த்தி யாருக்கு லாபம்? தேவையா இது? காயல்பட்டினத்தில புறம்போக்கு நிலம் எல்லா பகுதியிலும் இருக்குதுனு ஊருல இருக்குற எந்த பெரிய மனுசனுக்கும் தெரியாதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. புறம்போக்கு நிலமும் குப்பை கொட்டும் மற்றும் பயோகேஸ் நிலங்களும்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [09 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30606

நம் நகராட்சிக்கு (பஞ்சாயத்து) தமிழக அரசால் வழங்கப்பட்ட புறம்போக்கு நிலங்கள் பற்றி, இந்த இணையதளத்தால் news# 11855 & 11994 மற்றும் 11995 ஆகியவற்றில் சர்வே என்னுடன் விபரமாக வெளியிடப்பட்டது. இதில் news# 11855 & 11994 ஆகியவை (மொத்தம் 71.81 ஏக்கர்) 1976-ம் ஆண்டு வழங்கப்பட்டது. news# 11995 தகவலில் நூற்றுக்கும் மேலான புறம்போக்கு நிலங்கள் உள்ளதாக தெரிகிறது.

அரசு புறம்போக்கு நிலங்களை தற்போது யார், யார் ஹராமான முறையில் ஆண்டு, அனுபவித்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த புறம்போக்கு நிலங்களை நம் நகராட்சி சார்பில் மீட்பதற்கு, தலைவி மற்றும் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் யாராவது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக இருந்தால், ஆதாரத்துடன் அவர்களின் (ஆக்கிரமித்தவர் & துணை போனவர்) பெயர்களை வெளியிடுங்கள். புறம்போக்கு நிலத்தை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும், மக்களின் துணையோடு அப்புறபடுத்துங்கள்.

தற்போது மாவட்ட ஆட்சியர் வந்து பார்வையிட்டது, 2 தனித்தனியான திட்டங்களுக்காக. 1. குப்பை கொட்டுவதற்காக 2. பயோகாஸ் திட்டம். இதில் குப்பை கொட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியேயும் பயோகாஸ் திட்டத்திற்கு 20 சென்ட் மட்டும் ஒதுக்குபுறமாக இல்லாமலும் வேண்டும்.

இதில் குப்பை கொட்டுவதற்கு சென்ற நகர்மன்ற பதவி காலத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடமும் அடையாளம் காணப்பட்டது.

'ஐக்கிய பேரவை மூலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன் வந்த ஐந்து ஏக்கர் நிலத்தை - நேரமின்மை காரணமாக நேரடியாக பார்க்க முடியாததால், அந்நிலம் குறித்த விளக்கங்களை தயார் செய்து தனக்கு தரும்படி அங்கிருந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார். -(C&P)

நேரமின்மை காரணமாக நேரடியாக பார்க்க முடியாததால் அல்ல, மாறாக தலைவி அவர்கள் அந்த இடம் CRZ-க்கு உள்ளே வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் சொன்னதால்.

'(ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்கிறது. நகர்மன்ற முன்னாள் தலைவர் அவர்கள் நிலத்தை நம் நகராட்சிக்கு விலைக்கு தருவதாக கூறியுள்ளார். அதையே வாங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் காட்ட வேண்டும் என பெரும்பாண்மை உறுப்பினர்களும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் அடம்பிடிப்பது எதனால்? நூற்றுக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலமாக நகராட்சிக்கு உட்பட்டு கிடக்கும் போது விலை கொடுத்து வாங்குவது எதற்கு?

அப்படியே ஹாஜியாரின் நிலத்தை வாங்கினால் நீண்ட தூரத்திற்கு சாலை அமைக்க வேண்டும் சில தனியார் நில உரிமையாளர்கள் அதற்கு சம்மதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியது சிந்திக்க வேண்டிய விஷயம். இனி நிலத்திற்கு ஒரு செலவு, சாலை அமைக்க ஒரு செலவு? இது தேவைதானா? சுனாமி எல்லைக்கு உட்பட்ட நிலமாக இருந்தாலும் பெருங்கொண்ட தனவந்தரான முன்னாள் சேர்மன் நம் ஊர் நலனுக்காக சுமார் 20 செண்ட் நிலத்தை இலவசமாகத் தரலாமே? அதை விடுத்து நகராட்சிக்கு விற்பனை செய்ய முன் வருவது எதனால்?')- (C&P) இது சகோதரர் ரபீக் உடைய பதிவு.

எனக்கும் ஒன்று புரியவே மாட்டேங்குது. நீங்கள் தெளிவு படுத்தினால் புரியும்.

1. குப்பை கொட்டும் இடமும் Bio-Gas plant -ம் ஒரே இடத்தில் இருக்க வேண்டுமா? அல்லது வெவ்வேறு இடத்தில் இருந்தால் பரவாயில்லையா?

2. வெவ்வேறு இடத்தில இருந்தால், bio-gas -க்கான மூல பொருள் என்ன? குப்பை கழிவிலிருந்து எரிவாயு தயார் செய்யும் பிளான்ட், குப்பை கொட்டும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்தால் அதன் உற்பத்தி செலவு (Operation cost) என்ன?

3. சகோதரர் ரபீக் அவர்களே, ஹாஜியார் விற்க இருக்கும் 5 ஏக்கர் நிலத்திற்கு போக மற்ற நில உரிமையாளர்களிடம் சம்மதம் வாங்க வேண்டும், பின்னர் சாலை அமைக்க வேண்டும் அந்த செலவு தேவையா? என்று கேட்கும் நீங்கள், அவரிடம் 20 சென்ட் நிலத்தை மட்டும் CRZ- க்கு உள்ளே இருந்தாலும் இலவசமாக பெற்றால் மட்டும் அந்த செலவு வராதா? அப்போது அனுமதியும் கிடைத்து விடுமா?

4. நகராட்சிக்கு அரசு புறம்போக்கு நிலம் கிடைக்காத பட்சத்தில் ஹாஜியாரின் நிலத்தை வாங்குவதற்கு, தலைவியும் அவரின் தீவிர ஆதரவாளர்களும் எதிர்ப்பது ஏன்?

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. புறம்போக்கு நிலமும் குப்பை கொட்டும் மற்றும் பயோகேஸ் நிலங்களும்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [09 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30607

சென்ற பதிவின் தொடர்ச்சி...

(மயான பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் 20 செண்ட் நிலத்தை பயோ கேஸ் திட்டத்திற்காக பயன்படுத்தலாமே என நகர் மன்ற கூட்டத்தில் தலைவி கூறியபோது உடனே மறுப்பு தெரிவித்த வார்டு 18 உறுப்பினர் திரு சாமி அவர்கள், இல்லை இல்லை அது மயானத்திற்குரியது. அங்கு குப்பை கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது எதனால்? )- C&P சகோதரர் ரபீக் அவர்களின் பதிவு.

அது நகராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் தான். அது மயானமாக பல்வேறு சமூகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக திரு. சாமி அவர்கள் தான் ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்து, இந்த மாத கூட்டத்தில், (பொருள் எண்#10) விவாதிக்கப்பட்டது. அப்போது தலைவி அவர்கள் bio-gas plant அங்கு அமைக்கலாமே என்று சொன்னதற்கு, மயானமாக இருப்பதால், அருவருப்பாக இருக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவாதம் நடைபெற்ற பொது நானும் நகர்மன்ற கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்டவன்.

நாம் ஒன்று கூடி, புறம்போக்கு நிலங்களை மீட்டு, அதில் Bio-gas plant அமைக்க முயற்சி செய்வோம். அதை விட்டுவிட்டு வேண்டாத உள்அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ஊர் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. பச்சப்புள்ள இல்ல காக்கா.....
posted by Hameed Rifai (Kayalpatnam) [09 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30614

சகோதரர் லுக்மான் அவர்கள் கவனத்திற்கு:

முந்தைய போர்டு பதவியில் இருந்தபோதே (அதாவது அக்டோபர் 2010) அப்போதைய நகர்மன்றத் தலைவர் வாவு செய்யது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் அளிக்க முன்வந்த இந்த இடம் CRZ பகுதி என்று அரசு சொல்லிவிட்டது. செய்தியில் உள்ள கடிதத்தை நன்றாகப் படிக்கவும்.

எனது கேள்விகள்:-

(1)
CRZ சர்ச்சையை சரிசெய்ய அப்போதே வேலை பார்த்திருக்கலாமே “நிர்வாகத் திறமை மிக்க” அப்போதைய தலைவர் அவர்கள்? இலகுவாக தீர்வு காணப்பட்டிருக்க வேண்டிய விஷயம் இது என்றால், அந்த வாய்ப்பையெல்லாம் அப்போது பயன்படுத்தத் தவறியது யார்?

(2)
(அ) CRZ விதிகள் சொல்வதென்ன?
(ஆ) பல சர்வே எண் நிலங்களைத் தாண்டி புதிய சாலை அமைக்கப்பட வேண்டியுள்ளதே? அதற்கான செலவுகள் என்ன? அந்த நிலங்களின் உரிமையாளர்கள் இடம் தருவார்களா?
(இ) CRZ விதிப்படி போடப்படவேண்டிய சாலை கடலில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும்?
(ஈ) தெரு விளக்கு போட வேண்டி இருக்குமே...?
(உ) சுற்றியுள்ள நிலங்களின் ரேட்டுகள் பன்மடங்கு அதிகரிக்குமே? அதன் பலன் யாருக்கு? வரிப்பணத்தை செலவிட்ட மக்களுக்கா அல்லது நில உடமையாளருக்கா?

இத்தனை கேள்விகள் இருக்க, எந்த அடிப்படைத் தகவல் சேகரிப்போ, தயாரிப்போ இல்லாமல், “நிலத்தை எழுதித் தந்துட்டாங்க... அந்த இடத்தைத்தான் பயன்படுத்தனும்னு ஒற்றைக்காலில் நின்று சட்டம் பேசினால் என்ன நியாயம்?

(3) அதே நிலம், அதே CRZ சிக்கல்! அன்று இப்பிரச்சினையைத் தீர்க்கத் தவறியவர் நிர்வாகத்திறன் மிக்க தலைவராம்... அதே சிக்கலைக் கருத்தில் கொண்டு, அந்த நிலத்தைப் பெறுவதில் அக்கறை காட்டாத இப்போதைய தலைவி நிர்வாகத் திறமையற்றவராம்? இக்குற்றச்சாட்டு மனசாட்சியுள்ள யாருக்காவது நியாயமென்று படுமா?

(4) நல்ல நிர்வாகத் திறமை உள்ள அப்போதைய தலைவர் அவர்கள், நிலத்தைக் கொடுக்கும்போது, அதில் உள்ள சட்டச் சிக்கல்களை அறிந்திருக்க வேண்டாமா?

(5) இடியாப்ப சிக்கல் உள்ள இந்த இடம் கிடைக்க, “இடத்தைத் தாங்க, தாங்கன்னு தலைவி ஏன் கெஞ்ச வேண்டும்? அதற்கான எந்த அவசியமும் இல்லை.

ஊருக்கு நன்மை என்றெல்லாம் கதை சொல்லி, அதைச் சுற்றியுள்ள நிலத்தின் ரேட்டை கன்னாபின்னாவென்று உயர்த்தி, மக்கள் பணத்தைக் கொண்டு பிறர் சம்பாதிக்கத் துணை போவதற்கு இந்தத் தலைவி ஒன்றும் பச்சப்புள்ள இல்ல!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...ராபியா மணாளனை கேட்கிறேன்.
posted by SHAIK ABBAS FAISAL D (kayalpatnam) [09 October 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 30615

ராபியா மணாளன் அவர்களே நீங்கள் கூறுவது போல் அரசு புறம்போக்கு நிலங்களை இந்த திட்டத்திற்காக நகராட்சி சும்மா பயன்படுத்த முடியாது,அதை கிரயம் கொடுத்து வாங்க வேண்டும்,அப்படி வாங்குவதென்றால் அரசு இந்த திட்டத்திற்காக நிர்ணயித்துள்ளா 1 ஏக்கர் நிலம் 1 லட்சம் ரூபாய்க்கு அரசு புறம்போக்கு நிலங்களை அரசே தர தயார் இல்லை, அரசு பனை ஆராய்ச்சி அமைப்பிற்கு சொந்தமான நிலத்தை தற்போதைய நில மதிப்பிற்கே தர அந்த சம்மேளம் நகராட்சிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக இதே இணையதளத்தில் படித்த ஞாபகம்,

இப்படி அரசே அரசு சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு அரசு நிர்ணயித்த விலைக்கு நிலத்தை தர சம்மதிக்காத போது,ஊரின் மீதும் நம் மக்களின் மீதும் அக்கறை கொண்ட முன்னாள் தலைவர் தன்னுடைய நிலத்தில்,அதுவும் தனது 26 ஏக்கர் நிலத்தில் எதை வேண்டுமானாலும் அரசு நிர்ணயித்த விலைக்கே தர சம்மதித்திருப்பது அவரின் பெருந்த்தன்மையையே காட்டுகிறது,

அவரை பாராட்டுவதை விட்டு விட்டு அவர் சும்மா தந்தா என்னா?நகரமன்ற உறுப்பினர்கள் இந்த இடத்தை ஏன் பிடித்து தொங்க வேண்டும் என்று கேட்பதெல்லாம் உங்களை போன்ற விவரம் தெரிந்தவர்களுக்கு நல்லதாக தெரிய வில்லை ரபீக் பாய். தலைவி ஏன் இந்த இடத்தை தட்டிக்கழிப்பதில் குறியாக இருக்கிறார் என்று அவரை கேட்கும் தைரியம் உங்களிடம் உள்ளதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Hameed Rifai (Kayalpatnam) [10 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30618

சகோதரர் லுக்மான் அவர்களுக்கு,

பயோகேஸ் திட்டத்திற்கான இடமும், குப்பை கொட்டும் இடமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை.

பயோகேஸ் ப்ளாண்ட்டுக்குத் தேவை மக்கும் குப்பை. அதை தேக்கித்தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. லாரியில் கொண்டு வந்து, நேரடியாக அதற்குரிய மூடப்பட்ட தொட்டிக்குள் கொட்டி விட்டால் போதும். அன்றன்றைக்கே பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்திடுவாங்க.

இது இயற்கையான முறை என்பதால் Operation Cost பிரச்சினை எல்லாம் இதில் கிடையாது.

எனக்குத் தெரிந்த தகவலை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. விளக்கமா சொன்னா விளங்கிக்கொள்வீர்கள்...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [10 October 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30631

அருமை சகோதரர் ஃபைஸல் அவர்களே! என்னிடம் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் முடிந்த அளவிற்கு பதில் தந்துள்ளேன். இதைப் பார்த்த பின் தெளிவு பெறுவீர்கள் என நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்!

ராபியா மணாளன் அவர்களே நீங்கள் கூறுவது போல் அரசு புறம்போக்கு நிலங்களை இந்த திட்டத்திற்காக நகராட்சி சும்மா பயன்படுத்த முடியாது, அதை கிரயம் கொடுத்து வாங்க வேண்டும்,அப்படி வாங்குவதென்றால் அரசு இந்த திட்டத்திற்காக நிர்ணயித்துள்ளா 1 ஏக்கர் நிலம் 1 லட்சம் ரூபாய்க்கு அரசு புறம்போக்கு நிலங்களை அரசே தர தயார் இல்லை, (C&P)

ஃபைஸல் அவர்களே! இப்படி எல்லாம் காமடி பண்ணாதீங்க! டெத் சர்டிபிகேட் (இறப்புச் சான்றிதழ்) வாங்க போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கொடுக்கனும்ன்னு ஒருத்தர் கருத்தில் சொன்ன மாதிரி.

அரசு புறம்போக்கு நிலமாக இருந்தால், அரசு, மற்றொரு அரசு துறைக்கு இலவசமாகத்தான் கொடுக்கும். உதாரணமாக, பொன்னன்குறிச்சி இடத்தை எடுத்துக்குங்க. முன்னாள் தலைவர் இடம் வாங்கித் தரேன்னு சொன்னாங்க. தரல்லே. இப்போதைய தலைவி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வச்சாங்க. 50 சென்ட் நிலம் அரசு கொடுத்துச்சு. ஒரு பைசா நகராட்சிக்கு செலவு கிடையாது.

அரசு பனை வெல்ல ஆராய்ச்சி அமைப்பிற்குச் சொந்தமான நிலத்தை தற்போதைய நில மதிப்பிற்கே தர அந்த சம்மேளம் நகராட்சிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக இதே இணையதளத்தில் படித்த ஞாபகம், (C&P)

அரசு புறம்போக்கு இடத்திற்கும், கூட்டுறவு அமைப்புடைய சொத்துக்கும் வித்தியாசம் இருக்கு. 524/1 நிலம் கூட்டுறவு அமைப்புக்குச் சொந்தமான இடம். அரசு இலவசமாகத் தர அது புறம்போக்கு நிலம் இல்லை.

கூட்டுறவு அமைப்பு என்றால், அதற்கென உறுப்பினர்கள் இருப்பாங்க... தலைமைன்னு இருக்கும்... சொத்துன்னு இருக்கு... வருமானம்னு இருக்கும். சரியா.

தலைவி ஏன் இந்த இடத்தைத் தட்டிக்கழிப்பதில் குறியாக இருக்கிறார் என்று அவரை கேட்கும் தைரியம் உங்களிடம் உள்ளதா? (C&P)

தலைவி தட்டிக் கழிக்கிற மாதிரி தெரியல. ஆனா கண்டிப்பா தட்டிக் கழிக்கணும் என்றுதான் நான் வலியுறுத்துவேன். 5 ஏக்கர் அளவுக்கு மேலே நம் நகராட்சிக்குட்பட்ட புறம்போக்கு நிலம் நிறையவே உள்ளது. இந்த இணையதளத்தில வந்த புறம்போக்கு சர்வே நம்பரையும், சர்வே படத்தையும் பாருங்க. நால்லா புரியும். தலைவியை எதிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக எடுத்ததுக்கெல்லாம் குத்தம் சொல்கிற தவறான கண்னோட்டம் தவறானது என்பது எனது தாழ்மையான கருத்து. அவ்வளவுதான்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved