| |
செய்தி எண் (ID #) 12023 | | | திங்கள், அக்டோபர் 7, 2013 | குறுக்கு சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி! கம்பிவடம் துண்டிப்பால் தொலைதொடர்பு பாதிப்பு!! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2756 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான - பொன்னன்குறிச்சி குடிநீர் திட்டப்பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.
சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படவுள்ள இந்த திட்டத்திற்கான - நிதி உதவியை மத்திய அரசும் (80%), மாநில அரசும் (10%) வழங்குகின்றன. எஞ்சிய 10 சதவீத தொகையை (சுமார் 3 கோடி ரூபாய்) காயல்பட்டினம் நகராட்சி வழங்குகிறது.
பொன்னன்குறிச்சியிலிருந்து காயல்பட்டினம் வரை - சாலை ஓரமாக - குழாய்கள் ஜூலை மாதம் முதல் இறக்கப்பட்டு, தற்போது பூமிக்கடியில் பதிக்கப்பட்டு வருகிறது. 27 கிலோமீட்டர் நீள அளவைக் கொண்ட இந்த பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன.
இந்த குழாய்கள் மேற்கு வங்காளத்தில் உள்ள ராஷ்மி மெடாலிங்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. K9 Class- Ductile Iron ரக குழாய்களான இவை - 27 கிலோமீட்டர் தூரத்திற்கு 350 மி.மி. விட்டம் (diameter) அளவிலும், 0.88 கிலோமீட்டர் தூரத்திற்கு 300 மி.மி. விட்டம் (diameter) அளவிலும், 1.75 கிலோமீட்டர் தூரத்திற்கு 200 மி.மி. விட்டம் (diameter) அளவிலும், 1.33 கிலோமீட்டர் தூரத்திற்கு 150 மி.மி. விட்டம் (diameter) அளவிலும், 4.50 கிலோமீட்டர் தூரத்திற்கு 100 மி.மி. விட்டம் (diameter) அளவிலும் இருக்கும். இப்பணிகளுக்கான குழாய்கள் மட்டும் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலானவை.
குழாய்களை பூமியில் பதிக்கும் வேலை தற்போது காயல்பட்டினம் புறவழிச் (பைபாஸ்) சாலை அருகே நடைபெற்று வருகிறது.
இன்று காலை 11 மணியளவில் JCB வாகனம் கொண்டு சாலையை தோண்டியபோது, BSNL நிறுவனத்தின் கம்பி வடம் (cable) துண்டிக்கப்பட்டதில், இந்நிறுவனம் மூலமான இணைப்புகள் பல பாதிக்கப்பட்டன. இது குறித்து தகவல் அளித்த BSNL அலுவலர், துண்டிக்கப்பட்ட கம்பிவடத்தைப் பழுதுபார்க்கும் பணி சில மணி நேரங்களில் நிறைவுறும் என்றும், இயல்பான சேவை அதனை தொடர்ந்து திரும்பிவிடும் என்றும் தெரிவித்தார்.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
'தமிழன்' முத்து இஸ்மாயில்
மற்றும்
ஏ.எஸ்.புஹாரி
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 12:45 / 08.10.2013] |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|