Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:40:35 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 101
#KOTWEM101
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013
மனதின் ஒலி...!

இந்த பக்கம் 4876 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2003 ஆம் ஆண்டு நான் ஹஜ்ஜுக்கு சென்ற சமயம்.

ஹரம் ஷரீஃபின் மாடியில் அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் இஷாத்தொழுகைக்கான அதான் ஒலிக்கத் தொடங்கியது. ஹரத்தில் அமைக்கப்பட்டிருந்த சீரான ஒலி வலை அமைப்பானது இனிய அதான் ஒலியை விண்ணுக்கும் மண்ணுக்கும் மென்மையாக பரவச் செய்தது. என் முன்னால் அமர்ந்திருந்த ஈரான் நாட்டு ஹாஜி அந்த முஅத்தினின் இராக இனிமையில் அப்படியே தலையையும் உடலையும் மெல்ல அசைத்து அசைத்து கரைந்து கொண்டிருந்தார்.

எங்களுக்கு முன்னே வீறுடன் எழுந்து நின்ற ஹரத்தினுடைய மினாராவின் பச்சை விளக்கின் பின்னணியில் இருண்ட வானம் படர்ந்திருந்தது . அதன் ஒரு மூலையில் பிறை ஒளிர்ந்து கொண்டிருந்தது. முஅத்தினின் அதான் நாதத்தின் ஒரு துளியில் மிதந்து அப்படியே மினாரா வழியே இருண்ட வானத்தினூடாக பிறையைக் கடந்து என் மனம் நீந்திக் கொண்டிருந்தது. உடல் மாடியில் இருக்க உள்ளம் அப்படியே வழுக்கி பல நூறாண்டுகள் கடந்த பொற்காலத்திற்குள் பயணித்தது. திரும்பி வந்த போது சிலிர்ப்பாகவும் ஏக்கமாகவும் இருந்தது.

அதே போல அரபு நாட்டு . பாக்கிஸ்தானி இளவல்கள் பாடும் லய ஒழுங்குடன் கூடிய கஸீதா , நஃத் களை கேட்கும்போது உடலும் மனமும் ஒரு புள்ளியில் நிறைந்து கண்களில் நீர் வழியும். மொழி புரியாவிட்டாலும் மனிதனை கட்டிப்போடவும் கட்டவிழ்க்கவுமான ஆற்றலை பெற்றது இசை. இசை என்பது உலக மொழி.

அதனால்தான் “சொற்களால் விவரிக்க முடியாத , மனத்தால் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு மொழிதான் இசை. அது கேட்பவர் மனதில் சீரான துடிப்பை ஏற்படுத்தக்கூடிய காலங்கடந்த ஆழம் காண முடியாத தீர்க்கமான கலையாகும் " என்றார் ஃப்ரெஞ்ச் நாட்டைச் சார்ந்த மானுடவியலாளரும் இனவியலாளருமான க்ளாடி லெவி ஸ்டிராஸ்.

இறைமறையை அழகிய முறையில் ஓதுதலை குர் ஆனிலும் ஹதீசிலும் சிலாகிக்கப்பட்டிருப்பதை நாம் காண முடியும் . இனிய தொனியில் ஓதப்படும் குர் ஆனை கேட்கும்போது அது உடலின் எல்லா அணுக்களிலும் புகுந்து பரவி வினைபுரிவதை பட்டறிய முடியும். தாவூது நபி தனக்கு அருளப்பட்ட வேத வசனங்களை இராகத்துடன் ஓதும் சமயத்தில் வானில் பறக்கும் பறவைகள் அப்படியே அங்கேயே உறைந்து விடும். அந்த பறவைகளும் மலைகளும் அந்த இனிய ராகத்தை எதிரொலித்திருக்கின்றன.

நவீன மருத்துவ முறையில் இசையை [MUSIC THERAPY] பயன்படுத்தி மனம் , உடல் சார்ந்த பல நோய்களுக்கு பரிகாரம் காணுகின்றனர். தீய உணர்வுகளைத் தூண்டாத இசை என்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதே என புறக்கணிக்க முடியாத சான்றுகளுடன் மார்க்க அறிஞர்களின் ஒரு சாரார் நிறுவுகின்றனர்.

இப்படியாக இஸ்லாமிய தொன்மங்கள் தொடங்கி வைத்த இந்த அழகுக் கோட்பாடு அல்லது அழகுணர்ச்சி புள்ளிகளிலிருந்துதான் இசை , இலக்கியம் , கைவினை , வரைகலை, கட்டடக்கலை என்ற நுண் கலைகள் {FINE ARTS} பல கிளை நதியாக முஸ்லிம் சமூகத்தினுள் பிரவாகப் பெருக்கெடுத்தது. உள்ளூர், உள் நாட்டு பண்பாட்டுக்கூறுகளுடன் உலகின் ஆதாரமான இஸ்லாமியப் பண்பாட்டு பெரு நெறியின் பல்வேறு கிளைகளை உள்ளடக்கியதுதான் முஸ்லிம் நாட்டாரியல் (MUSLIM FOLKLORE).

நாட்டாரியல் என்ற தலைப்பின் கீழ் பல கிளைப்பிரிவுகள் உள்ளன. அந்த பிரிவில் இசை , பாடல்கள் (FOLK MUSIC & SONGS) பற்றி மட்டும் கவனப்படுத்துவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

````````````````````````` ``````````````````````````

கிஸ்ஸா , முனாஜாத் , நாமா போன்றவை தமிழக முஸ்லிம்கள் நாட்டாரிசைக்கும் ,தமிழ் இலக்கியத்திற்கும் அளித்த பங்களிப்பு எனலாம். பல நூறு வருடங்கள் பாரம்பரியமிக்க நமதூரும் நாட்டார் இசையில் பின் தங்கியது இல்லை.

திருப்புகழ் , வேத புராணம் , மக்கா கலம்பகம் , நாகை அந்தாதி , பிள்ளைத் தமிழ் , திருமணி மாலை , மிகுராஜ் மாலை , அதபு மாலை , பெரிய ஹதீது மாணிக்க மாலை , சின்ன ஹதீது மாணிக்க மாலை , ஞானப்பாடல்கள் , படைப்போர் , நூறு நாமா , ஸக்ராத் நாமா , கதீஜா நாயகி மண வாழ்த்து அம்மானை , சிந்து , தாலாட்டு , கும்மி , கோவை , ஞான மணி மாலை , ஞான ரத்தினக் குறவஞ்சி , யூஸுஃப் நபி கிஸ்ஸா , வெள்ளாட்டி மஸாலா என விதம் விதமாக நம் முன்னோர்கள் படைத்தளித்தனர்.

வர கவி காஸிம் புலவர் , ஷாம் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ், பெரிய நூஹு வலிய்யுல்லாஹ் , புலவர் நாயகம் , ஆலிப்புலவர் , ஷைஹூ அப்துல் காதிறு லெப்பை ஆலிம் தொடங்கிய தனி மனிதர்கள் வரலாற்றில் அவர்களின் அழகிய இசை , பாடல் ஆக்கங்களால் இன்றளவும் நினைவு கூரப்படுகின்றனர்.

பாபர் மசூதி உன்னை... அதி விரைவாக நாங்கள் மீட்போம் என்ற வரிகள் மூலம் உடலிலும் மனதிலும் வீரத்தை விதைக்கும் பிறைக்கொடியான் கவிஞர் மஹ்மூது ஹுஸைனின் வரிகள். அவரின் குரலை முதுமை ஆக்கிரமித்த நிலையில் பாடிய எழுச்சிப் பாடல் அது.

யா ரஹ்மானே ! எங்களின் பாவம் நீங்கிடச்செய்வாயே ... “ என கர கரத்த குரலில் உரத்து முழங்கும் முஹிய்யித்தீன் அபூபக்ர் லெப்பை , “ ஈச்ச மரத்து இன்பச் சோலையில் ... “ என பாலை வன வசந்தத்தை நம் இல்லங்களுக்குள் தவழ விட்ட ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் , திங்க திங்க ஆசை வரிகள் மூலம் சுவை அரும்புகளைத் தூண்டிய ஸாலிஹ் காக்கா போன்றோர் வரை இந்த நூற்றாண்டின் இசைப்பாடல்களில் தனி ஆளுமைகளின் தொடர்ச்சி நீண்டது. அவர்கள் அனைவரையும் காலம் தன்னுள் இழுத்துக் கொண்டது.



கூட்டு முயற்சி என பார்க்கும்போது சிறு நெய்னார் பள்ளியில் இயங்கிய பைத்துஸ் ஸபா , கவ்திய்யா சங்க தாயிரா குழு , புதுப்பள்ளி வளாக மழ்ஹருல் ஆபீதீன் பாடல் குழு , ஹாமிதிய்யா பைதுஸ்ஸபா போன்றவைகளைக் கூறலாம்.

இளம் சிறார்களின் சீரான கை , கால் , உடல் அசைவுகளுடனும் நாவில் ஒலிக்கும் பைத்துக்களுடனும் ஒத்திசைந்து மிதமான அதிர்வுடன் புறாவின் இறக்கை போல சுழலும் தஃப்ஸ் ( சிறு பறை ) தாயிரா கலையை உயர்த்திப் பிடித்த கவ்திய்யா சங்க தாயிரா குழு 1980 களுக்குப்பிறகு மங்கி விட்டது. இன்று எஞ்சி இருப்பது மழ்ஹருல் ஆபீதீன் , ஹாமிதிய்யா பைத்துஸ்ஸபா மட்டுமே. இவற்றிலும் முன்னைப்போல் மாணவர்கள் சேர்க்கை இல்லை. தனி ஆட்களின் மனதிலும் நாவிலும் குடியிருந்த நாட்டாரிசைகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறைந்து விட்டன. இதற்கு காரணம் பாடகர்களின் மறைவு , தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு ஊடகங்களின் வருகை , புதிய தலைமுறையினருக்கு இவற்றில் நாட்டமின்மை என பல காரணிகளைக்கூறலாம்.

கிஸ்ஸா , முனாஜாத் , நாமா , பைத், பதம், மாலை , காரணம் போன்ற இசை வடிவங்களில் ஷரீஅத்துடன் மோதக்கூடிய இடங்களும் இருக்கின்றன. அதன் காரணமாகவும் இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமா ? வேண்டாமா ? என மக்களிடையே நிலவுகின்ற குழப்பங்களும் இந்த நாட்டாரிசை வடிவங்கள் மங்குவதற்கு காரணம்.

முஸ்லிம் நாட்டாரிசை வடிவங்களில் பிரச்னைகளுக்குரிய பகுதிகளை மட்டும் தவிர்த்து விட்டு கடந்து செல்லலாம் அல்லது மாற்று இசைப் பாடல்களை உருவாக்கலாம். இவை எவற்றையும் செய்யாமல் சில இடங்களில் உள்ள முரண்களுக்காக மொத்த இசை வடிவங்களையும் நிராகரிப்பது என்பது எலிக்கு அஞ்சி வீட்டை கட்டாமலிருப்பது போலாகும்.

___________________________ _________________________

20 – 30 வருடங்களுக்கு முன்பு வரை நமதூரில் ரமழான் காலங்களில் ஸஹர் நேர எழுப்புதலுக்காக ஃபக்கீர் அப்பாக்கள் என்ற இசை வாணர்கள் தஃப்ஸை ( சிறு பறை ) முழக்கி பாடி வரும் காட்சிகள் உங்களுக்கு நினைவிருக்கும். பச்சை தலைப்பாகை ,ஜுப்பா , சாரம் , கழுத்தில் பல நிறங்களுடைய மணி மாலைகள் , தொங்கு பை கோலமணிந்த ஃபக்கீர்களை வீடு தோறும் இரந்து உண்பவர்களாகவே நாம் புரிந்து வைத்திருப்பது மிகவும் வருந்துதற்குரிய நிலையாகும்.

ஃபக்கீர்கள் என்ற இசை வாணர்களின் வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. இந்திய விடுதலைப்போரில் அவர்கள் வெள்ளையர்களை எதிர்த்து களமாடியவர்கள். தங்களது பாடல்கள் , பொம்மலாட்டக் கலை மூலம் மக்களிடையேயும் படை வீரர்களிடையேயும் விடுதலை உணர்ச்சியை விதைத்தவர்கள். பகலிலே துறவிகளாகவும் இரவிலே படை வீரர்களாகவும் வாழ்ந்த மாமனிதர்கள்.

ஃபக்கீர் என்ற முஸ்லிம் இசை வாணர்கள் இந்தியா , இலங்கை , எகிப்து நாடுகளின் பண்பாட்டு வாழ்வில் ஒரு அம்சமாக திகழ்கின்றனர் . இதிலிருந்து நாட்டாரிசை என்பது உலகம் தழுவிய ஒரு அழகியல் நடைமுறை என்பதை அறிந்து கொள்ள இயலும். ஒரு பண்பாட்டை , நாகரீகத்தை , உயர்ந்த வாழ்க்கை நெறியை மனித குலத்திற்கு கொடையாக அளிக்கும் எந்த ஒரு சமூகமும் இது போன்ற அழகியல் அம்சங்களை தன்னகத்தே செழுமையாக போற்றி வரும். இத்தகைய பண்பாட்டுச் செழுமையை போற்றாததால் இந்த மண்ணின் மேல் பரப்பில் வாழ்ந்து மறைந்த சமூகங்கள் பல வரலாற்றின் வரிகளுக்குள் மூழ்கி காணாமல் போயிருக்கின்றனர்.



நாட்டார் இசை என்பது வெறுமனே அதன் அழகியலுக்காக மட்டும் போற்றப்படுவதில்லை. இது போன்ற நாட்டார் இசை வடிவங்களில் இருந்து இயற்கைப் பேரழிவு , பஞ்சம் , பிரிவுத்துயர் , ஆட்சியாளர்களின் கொடுங்கோல் & நல்லாட்சி , வாழ்வு முறை, கொண்டாட்டம் , உணவு பழக்க வழக்கங்கள் , மருத்துவக்குறிப்புகள் , மொழியியல் , ரசனை , மகிழ்ச்சி , இலக்கணம் , மொழியியல் , நீதி நிர்வாக முறைகள் , தாவரவியல் , விவசாயம் பற்றிய ஏராளமான குறிப்புகளை ,கண்டுபிடிப்புகளை , தடயங்களை பின் வரும் தலைமுறை அகழ்ந்தெடுக்க முடியும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது தமிழ் மொழியிலுள்ள சங்க இலக்கியங்களாகும்.

----------------------------------- --------------

கூரிய பண்பாட்டு முரண்களுள்ள நம் தாய் மண்ணில் கடல் கடந்து அறிமுகமான இஸ்லாமிய நெறியானது ஒத்துணர்வுடன் நிலை நின்றதற்கு பல காரணங்களுண்டு. அக்காரணிகளில் ஒன்றுதான் ஹிந்துஸ்தானி இசையாகும். இந்திய இசை மரபும் , அரபு பாரசீக இசை மரபுகளும் கலந்து பிறப்பெடுத்ததுதான் ஹிந்துஸ்தானி இசையாகும்.

ஹிந்துஸ்தானி இசை என்பது மனித தொனியும் கருவிகளின் நாதமும் கலக்கும் ரசனைகளின் மையம் மட்டுமில்லை. அது ஹிந்து மதம் , இஸ்லாம் என்ற இரு பெரும் எதிர் பண்பாடுகள் சந்தித்துக் கொண்ட அழகியல் புள்ளியும் கூடத்தான். ஹிந்துஸ்தானி இசை மரபில் உதித்ததுதான் கஸல் ,கவாலி இசை வடிவங்கள். கவாலி இசையில் ஹம்து = இறைத்துதி , நஃத் = நபி புகழ் அடங்கியுள்ளது. கஸலும் கவாலியும் எழுப்பும் இன்னிசையின் பேரலையில் இந்திய பாக்கிஸ்தான் எல்லைப்பிரிவினை , மதக் காழ்ப்புணர்வு , வெறுப்பு அரசியல் , பொய் பரப்புரை போன்றவை மூழ்கி மடிந்து விடுகின்றன.

கஸல் கவிதை ஒன்று வாசகர்களுக்காக :-

நன்மை தீமை என்பன எதுவோ?
அடியார்களின் மனதில் இருப்பதென்ன?

இந்த இடமும் காலமும் என்ன?
திரைகளில் மறைந்திருப்பது என்ன?

உலகை நீங்கிச் சென்றவர் எவரும்
மீண்டு இங்கு வராத அந்த இடம்
என்னவான இடமோ அது?

உன் நன்மை தீமைகளை
எத்தனைதான் நீ மறைத்த போதும்
அவனுக்குத் தெரியும்

இந்த வெயில் நிழலைப் பார்
இந்தக் காலை மாலையைப் பார்
இவையெல்லாம் ஏன் ஆகிக்கொண்டுள்ளன?

விதியின் பெயரை என்னவோ
அனைவரும் அறிந்துள்ளார்கள்
விதியில் எழுதியிருப்பது என்ன?

அல்லாஹ் அறிவான்.


--- இசைத்திரட்டு : ஸஜ்தா . பாடியவர் : காலஞ்சென்ற கஸல் பாடகர் ஜகஜ்ஜீத் சிங்

இறைவனிடம் கையேந்துங்கள், கப்பலுக்கு போன மச்சான்“ போன்ற பாடல் வரிகள் மதங்களை கடந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. மத வித்தியாசங்களைத் தாண்டி இதயங்களை பிணைக்கும் கலை உலகின் அழகிய பிணைப்புக் கண்ணிகள் அவை.

உலக அளவில் பார்க்கும் போது...

யூஸுஃப் இஸ்லாம் , ஸமி யூஸூஃப் , ஜைன் மாலிக் ,மாஹிர் ஜைன் , அஹமத் புகாதிர் , ஜைன் பிக்கா , தாவூத் வான்ஸ்பி போன்ற இளம் முஸ்லிம் பாடகர்கள் , Native Deen உள்ளிட்ட இசைக்குழுவினரின் மனங்கவர் இஸ்லாமிய பாடல்கள் இசைக் கோவையாக ( MUSIC ALBUM ) வலம் வருகின்றன . அவை இளைய முஸ்லிம் தலைமுறையினரின் இசைக்கேட்புக் கருவிகள் , கணிணி , ஐபாட் , டேப்லட் , செல்லிடபேசிகளில் மென்மையாக ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன.

`````````````````````````````````````````````````````````````

காவலாய் நிற்கும் வல்லோன்
கத்தனாய் ஜீவனல்லோன்
ஆவலாய் போற்றி வாழ்த்தி
அதற்கும் உணவளித்த கோமான் !

நாவினால் எளியோர் கேட்கும்
நாட்டத்தின்படியே தந்து
தாவிலா ரஹ்மத்தாலே
தற்காக்கும் பொருளதாமே !

கருவாய் கருவினுன் மணியாய்
காட்சியருளும் ரஹ்மானே
உருவாய் துலங்கும் மன்னானே
உனது கிருபை அருள்வாயே !

உள்ளங்கலங்கி தத்தளித்தே
உணர்வு மயங்கி நின் அடியார்
கொள்ளும் கிருபை மவ்லானா
ஹூதாயே வதூதே கஃப்ஃபாரே
கள்ள நோய்கள் தங்கடங்கள்
அணுகாமல்
காப்பாய் காப்பாய் ரஹ்மானே !!


       {அல்லாஹ் முனாஜாத்}

சிறு குழந்தைப் பருவத்தில் தொட்டிலில் நான் கிடந்தபோது இரவின் ஆழத்தில் நின்று என் உம்மா உறக்கத்திற்காக தாலாட்டிய இந்த இதமான வரிகளை மீண்டும் கேட்க மனம் துடியாய் துடிக்கின்றது.

நன்றியுடன்...

# அ.லெப்பை ஸாஹிப் ( ஏ.எல்.எஸ். மாமா )
# ஏ.ஆர். தாஹா காக்கா
# அன்பு நண்பர் முஹம்மத் ரஃபீக் ( ஹிஜாஸ் மைந்தன் )
# சாளை மறியம் ஜீனத்
# தஃப்ஸீர் இப்னு கதீர் – 5 ஆம் தொகுதி -- ரஹ்மத் டிரஸ்ட்
# முஸ்லிம் நாட்டாரியல், தேடலும் தேவையும் – எம்.எஸ்.எம்.அனஸ்
# அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவம்
# நோய் தீர்க்கும் இசை – டி.வி. சாய்ராம்
# சூஃபி இசை --- இதயத்திலிருந்து ஒரு செய்தி , ஹெச்.ஜி.ரஸூல்
# பிரபஞ்சக்குடில் வலைப்பூ – றமீஸ் பிலாலி
# விஜய ரகு நாத தொண்டைமான் கடிதம் - ராஜகிரி கஸ்ஸாலி ( கீற்று இணைய தளம் )

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Vilack SMA (Shijiazhuang , Hebei .) on 28 August 2013
IP: 222.*.*.* China | Comment Reference Number: 29755

தரமான ஆய்வு கட்டுரை .

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: K S Muhamed shuaip (Kayalpattinam ) on 28 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29780

தம்பி சாளை பஷீர் அவர்களின் இசைத் தாலாட்டு என்னையும் தாலாட்டியது. இஸ்லாத்தில் இசை கூடுமா ..? கூடாதா.. என்கிற வாதப் பிரதிவாதங்களைக் கடந்து, இசை மனிதனின் மெல்லுணர்வுகளைத் தூண்டி, அவனை நிஜ உலகிலினில் இருந்து வேறொரு உலகிற்கு அவனைக் கடத்தி செல்கிறது என்கிற உண்மை இன்றுவரை எவராலும் மறுக்கப்படாத உண்மை.

இசைக்கு மதமில்லை மொழியில்லை... ஆனால் அது நாம் அறிந்த மொழியோடு தவழ்ந்து வரும்போது அது கிளர்த்தும் உண்மை அளப்பரியது. அதையே தனது கட்டுரையில் அழகாக வடித்திருக்கிறார் தம்பி பஷீர்.

இசையை இசையாக மட்டுமே பார்க்கும்போது பிரச்சினை இல்லை. அதை வேறொன்றோடு சம்பந்தப்படுத்தி அதற்க்கு ஒரு புனித சாயம் ஏற்றும்போதுதான் எல்லா பிரச்சினைகளும் ஓடோடி வருகிறது. நிறைய இடங்களில் இசை மதத்தோடு தொடர்புடையது. சில மதங்களின் வழிபாட்டு நிகழ்வே கூட இசைவடிவமானதுதான். அது குறித்து நாம் எதுவும் சொல்வதற்கில்லை .

கண்ணியமான -அளவு மீறாத இசைவடிவங்களை இஸ்லாம் என்றுமே வெறுத்ததில்லை. மனித உணர்வுகளை அதன் அடிப்படையில் மதிப்பது இஸ்லாம். இசையும் மனித உணர்வுகளின் ஒரு அடிப்படை என்பதால் அதை இஸ்லாம் ஏற்றுக்கொண்டுள்ளது .

இறைமறையை ராகமிட்டு ஓதுவது, பாங்கொலியை இசை பொருந்த ஒலிப்பது இன்னோரன்ன உதாரணங்களை இங்கு பட்டியலிடலாம் .

இவைகளை தனது கட்டுரையில் பொருத்தமாக விளக்கியுள்ள தம்பி பஷீர் பாராட்டுக்குரியவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 28 August 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29783

அஸ்ஸலாமு அழைக்கும்

இறைவனுக்கு இணை வைக்காமல் நல்ல பயன் உள்ள கருத்துகளை கூரும் பாடல் வரிகள் என்றும் ஈடு இணை இல்லா வரிகள் தான் அதோடு சரியான இசை சாரும் போது அது மக்கள் மனதில் குடிபுகும் . நாட்டுப்புற இசை என்பது மகளுடைய பண்பாட்டை அவர்களுடைய வட்டார வழக்கு வார்த்தை கொண்டு இருபதால் அதில் ஈர்ப்பு இருக்கும்.

இவைகள் என்றும் நமக்கு கலாசாரத்தை, பண்பாட்டை கூறும் இஸ்லாம் நமக்கு கூறும் முறை படி இதில் நடைபோடநும் கட்டுரை பயன்நுடையது இஸ்லாமீய தமிழ் பாடல்களை நம் மக்கள் எழுத நாம் ஊகுவிட்கநும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இசை இல்லா பாடல்கள்தான் மனதின் ஒலி
posted by: NIZAR (KAYALPATNAM) on 28 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29786

சலிப்பு தட்டாத கட்டுரைகளை வழங்கிவரும் எழுத்தாளர் சாளை பசீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களுடைய கட்டுரையில் இசையுடன் கூடிய பாடல்களையும், இசையில்லாத வெறும் ராகத்துடன் படிக்கும் அரபி பைத்துகளையும் பிரித்து சொல்லாமல் மொத்தத்தில் இசையை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் மனதை கொள்ளை அடித்த குரான், பாங்கு, அரபி பைத்கள், நாத்கள், தப்சு போன்றவற்றையும் இசை என்று என்று சொல்லி உள்ளீர்கள். இதை எப்படி இசை என்ற வடிவத்தில் எடுக்க முடியும் என்று தெரியவில்லை. இசை இஸ்லாத்தில் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கும்பொழுது இரண்டையும் ஒன்றாக கலந்து மனதின் ஒலி எப்படி எடுத்து கொள்ள முடியும் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை.

இசையோடு கூடிய பாடல்கள் நிச்சயமாக இசை இல்லாத பாடல்களோடு ஒப்பிடும்பொழுது மனதை மயக்குவதிலும், இனிமையாக வருடுவதிலும் இசை பாடல்கல்தான் முன்னே இருக்கின்றன. அதே நேரத்தில் இசையில்லாத குரான், பாங்கு, மற்ற அரபி மற்றும் இஸ்லாமிய தமிழ் பாடல்களின் போக்கு மார்க்க அடிப்படையில் ஒரு டச்சிங் ஏற்பட்டு மனதை மயக்கும் அல்லது வருடும் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் நீங்கள் சொல்லிய அனைத்தும் மனதின் ஒலி என்றாலும் இசையோடு கூடிய பாடல்களோடு ஒரு போதும் இசை இல்லாதவற்றை இணைக்க முடியாது என்று என் சிறிய அறிவுக்கு உட்பட்டு சொல்கிறேன். தவறுகள் சுட்டிக்காட்ட பட்டால் திருத்தி கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அண்ணனும் தம்பியும் இரவல்!
posted by: kavimagan (doha..qatar.) on 28 August 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29787

அண்ணனும் தம்பியும் இரவல்.....

எனது ஆரம்ப பாடசாலை நாட்களில், நாடோடி ஒருவர் இரண்டு விரல்களில் மாட்டப்பட்ட கட்டைகளின் வழியாக ஒரு வினோத சப்தத்தை எழுப்பி, இந்தப் பாடலை, விவரிக்க முடியாத வித்தியாசமான குரலில் கணீரென்று தெரு வழியாகப் பாடி வருவார்....

யாரிடமும் வாய் திறந்து யாசகம் கேட்பதில்லை எனினும், கொடுப்பது எதுவானாலும் ஏற்றுக் கொள்வார்....

எனது குழந்தை மனதில் இனம் புரியாத ஒரு கேள்வி?
இரவல் என்றால் என்ன? மீண்டும் அவரது மந்திரக் குரலில் பாடல் தொடர்கிறது....

"கண்ணாலே கண்ட கருத்தக்
கோழியும் இரவல்...."

வாப்பா அவர்கள் வரும் வரைக் காத்திருந்து எனது சந்தேகத்தை எழுப்பினேன்.... இரவல் என்ற ஒரு வார்த்தைக்கு எனது வாப்பா தந்த விளக்கம் அரைமணி நேரத்திற்கும் மேலிருக்கும்... இன்றும் அந்தக் கந்தர்வக் குரல் எனது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

இதை நான் இங்கு குறிப்பிடக் காரணம், குரலும் இசையும் சேர்ந்த கம்பீரம், காதுக்குள் செல்லாமலேயே இதயத்தைத் தாக்கும் வலிமை கொண்டது.... அந்த வலிமையை, தனது எழுத்தின் ஆளுமையால், நமக்கு எளிமையாகத் தந்துள்ள பஷீர் பாராட்டுக்குரியவர்....

காயல் மாநகரம் கண்ட நல்ல பல எழுத்தாளர்களின் அணிவகுப்பில், நண்பர் பஷீருக்கு முன் வரிசையில் இடம் உண்டு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அருமையான ஆய்வுக் கட்டுரை!
posted by: M.S. அப்துல் ஹமீது (Dubai) on 28 August 2013
IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29801

உலகறிந்த மார்க்க அறிஞர் யூசுப் அல் கர்ழாவி அவர்களும் இறைநினைவைத் தூண்டுகின்ற நல்ல இசையைக் கூடும் என்கிறார்.

"ரூட்ஸ்" (வேர்கள்) என்ற ஆங்கில நாவலில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த கருப்பினத்தைச் சேர்ந்த அதன் ஆசிரியர் அலெக்ஸ் ஹேலி, ஆப்ரிக்காவில் முஸ்லிம்களாக இருந்த தன் மூல வேரை கண்டுபிடித்தார். அதற்கு அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தது அவருடைய குடும்பத்தவர்கள் வழி வழியாகப் பாடி வந்த குடும்ப வரலாற்றுப் பாடல்கள்தான்.

கேரள மாப்பிள்ளாமார்கள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும் சிந்தி வீர தீரத்துடன் போராடினார்கள். அவர்களின் தியாகங்கள் இன்றளவும் இன்றைய தலைமுறைகளுக்கு தெரிவது அவர்களின் மாப்பிள்ளா பாடல்கள் மூலம்தான். இன்று கேரள முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளைத் தாலாட்டுவது இந்த மாப்பிள்ளா பாடல்களை வைத்துதான்.

இந்தப் பாடல்கள் காலம் காலமாக நின்று நிலவ வேண்டும் என்றால் அதற்கு இசை (இராகம்) மிக அவசியம்.

ஆக, இறை நினைவைத் தூண்டும் எந்த இசையும் அனுமதிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். இறை நினைவை அகற்றுகின்ற, கீழான இச்சையைத் தூண்டுகின்ற, மதி மயக்குகின்ற இசை நிச்சயம் ஹராம் ஆகும்.

இப்படிப்பட்ட நல்ல பயனுள்ள கட்டுரைகளை மென்மேலும் தரும்படி என் அன்பு நண்பர் சாளையாரை கேட்டுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...விளக்கம்...
posted by: சாளை பஷீர் (மண்ணடி , சென்னை) on 28 August 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 29805

அன்பின் சகோதரர் நிஜார் அவர்களுக்கு ! தங்களின் வாழ்த்துக்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் ! நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். என்னால் இயன்ற அளவிற்கு விளக்க முயற்சிக்கின்றேன்.

இசை என்ற சொல்லுக்கு ஓசை ; சொல்; இசைப்பாட்டு ;நரம்பிற் பிறக்கும் ஓசை ; இசைக்கருவி வாசித்தல் ;இனிமை; ஏந்திசை; ஒழுகிசை சீர்; சுரம் என்பன போன்ற பொருள் உண்டு. ( சான்று :- தமிழ் இணைய கல்விக்கழக அகராதி , சென்னை பல்கலைக் கழக தமிழ் பேரகராதி )

எனவேதான் மனிதனின் குரல் வளை நாணிலிருந்து பிறக்கக் கூடிய இனிய ஓசைக்கும் , இசைக்கருவியிலிருந்து பிறக்கக்கூடிய இனிய ஓசைக்கும் மொத்தமாக இசை என குறிப்பிட்டேன்.

அடுத்ததாக இசைக் கருவி விஷயத்தில் மார்க்கத்தில் ஆட்சேபணை உள்ளது எனவும் கூறியிருந்தீர்கள்.

இததொடர்பாக மேல் வாசிப்பிற்காக இஸ்லாத்தில் இசை என்ற நூலை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இதன் ஆசிரியர் கலா நிதி முஹம்மது இமாரா. தமிழாக்கம்: அஷ்ஷைக் பி. தாரிக் அலீ நளீமி. வெளியீடு: நிகழ் பதிப்பகம் ,இலங்கை ( கை பேசி எண் :0094715171737 ).

இதில் இசைக்கருவி தொடர்பாக மார்க்க ரீதியாக எழுப்பப்படும் அனைத்து விதமான ஆட்சேபனைகளுக்கும் நூலாசிரியர் ஷரீஅத்தின் ஒளியில் நின்று உரிய விளக்கம் அளிக்கின்றார்.

இமாம் கஸ்ஸாலி { ரஹ் } அவர்களின் இஹ்யாவில் கிதாபுஸ்ஸமாஃ --- “ இசை கேட்பதில் இஸ்லாத்தின் ஒழுங்குகள் “ என்கின்ற அத்தியாயம் இசை பற்றிய சமனான பார்வையை முன்வைப்பதாக மவ்லவி அஷ்ஷேஹ் ஏ.பி.எம்.இத்ரீஸ் அவர்கள் கூறியுள்ளார்-- http://idrees.lk/?p=2072 .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இனி யார் வருவார்?
posted by: kavimagan.m.s.abdulkader (doha-qatar) on 28 August 2013
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 29813

எனது தந்தையார் மர்ஹூம்.சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்கள் (ஷாம் ஒலி ஊழியர்) தனது ஒவ்வொரு பயானிலும் நமது முன்னோர்களின், குறிப்பாக ஷாம் ஒலி நாயகத்தின் இசைப்பாக்களை பாடாத மேடைகளே இல்லை என்று சொல்லலாம்.

எப்படி மறக்க முடியும்? எனது குருநாதர் காயல்பிறைக் கொடியான் அவர்களது இசைப் பாடல்களை. அதிலும் குறிப்பாக எங்கள் கௌதியா இளைஞர் சங்க தாயிராக் குழுவினருக்காக அவர்கள் இயற்றியளித்த பாடல்கள் இறையருளால் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். திரைப் பட பாடல்களில் மயங்கிக் கிடந்த இளைஞர்களை, ஒலிமார்களின் புகழ் பாடும் புண்ணியத்தை சுமக்கச் செய்தவர்.

" துஞ்சாத ஏகன்இறை நேசம் இலங்க ...அவன்
தூதர் மஹ்மூது நபி தீனை வளர்க்க
எஞ்சான்றும் சேவை செய்து ஏற்றமடைந்த
எங்கள் ஏந்தல் செய்கு அப்துல்காதர் நாதர்தானுங்க "

இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் இனி யார் எழுதுவார்? சுகமான ஒரு கட்டுரையை வாசித்து முடித்ததும்,இழந்தவற்றை எண்ணி இருவிழியும் நீர்த் துளிகளில் நனைகிறது....

மீண்டும் ஒருமுறை.... வாழ்த்துக்கள் பஷீர்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மெல்ல தொட்டு உணர்த்திய மென்மைக்கு நன்றி...!
posted by: M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 28 August 2013
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29816

இடுப்பு உறைக்குள் சொறுகியிருந்த கத்தியை வெளியில் எடுத்து தம் விரல்களால் கூர் பார்த்திருக்கின்றார் கட்டுரை ஆசிரியர். முதலில் இதற்கு துனிவு வேண்டும். கூர் பார்க்கும் போது தம் கை விரல்களையும் சேர்த்து அது பதம் பார்த்து விடக்கூடும். எனவே கவனமாகவும் மிக லாவகமாகவும் கையாண்டிருக்கின்றார். பாராட்டுக்கள்.

மதி மயங்கச் செய்யும் அனைத்தையும் ஹராம் பட்டியிலில் சேர்த்து விட்ட காரணம், எந்நிலையிலும் மனிதன் தன் சுய நினைவுகளை இழக்கக்கூடாது எனும் முன் கருதலில்தான் இஸ்லாம் இசைக்கு வரையறை வகுத்துள்ளது. தீய உணர்வுகளைத் தூண்டாத இசை என்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதே! அதை நாசூக்காக எடுத்துக்காட்டியிருப்பது ஆசிரியரின் சிறப்பு.

கிஸ்ஸாக்கள், முனாஜாத்துக்கள், பாட்டு, பதம் காவிய காப்பியங்கள், காண்டங்கள் ஆகியவற்றில் நல்ல சொற்கள் பதித்திருப்பது போல் இணைவைப்பிற்கான ஏராளமான சொற்றுடர்களும் கையாளப்பட்டிருப்பதை எவராலும் மறுக்க இயலாது.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by: கத்தீபு (தோஹா) on 01 September 2013
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 29921

இதயத்தைத் தழுவிச் செல்லும் அழகிய பதிவு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by: T.S.A. Aboothahir (chennai) on 01 September 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29924

தரமான கட்டுரை தந்த சகோதரர் சாளை பஷீருக்கு வாழ்த்துக்கள்.

சீர் மக்காவில் துவங்கி சிறு மக்காவில் கொண்டு சேர்த்து விட்ட கட்டுரையாளரின் போங்கு பிரமாதம்.

தமிழுக்கு தொண்டு செய்த அறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் வாழ்ந்து மறைந்த பதி காயல்பட்டினம். இன்னும் அதன் கிரணங்கள் குறையவில்லை என்பதற்கு சாலை பஷீரின் கட்டுரை ஒரு சரியான சாட்சி.

ஒரு ஆய்வாளர் என்ற வகையில் விருப்பு வெறுப்பு இன்றி, காய்த்தல் உவத்தல் இன்றி எழுதப்பட்ட இக்கட்டுரையில் இசைக் கருவி பற்றிய விவாதத்தை உள் நுழைத்து கட்டுரையின் கருவை சிதைக்கும் வகையில் சில விமர்சகர்கள் விமர்சனம் எழுதி உள்ளனர்.

இசைக் கருவி, நிழல் படம் (photo) போன்றவற்றை தடை செய்யும் ஹதீஸ்களின் உண்மை விவரங்களை விளங்காமலே பலர் அது பற்றி தவறாக விவாதிக்கின்றனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved