புது வருடம் பிறந்துவிட்டது. இந்தியாவைப் பொருத்த வரையில் இது தேர்தல் வருடம். கனவு காலம் என்றும் கூறலாம். ஆட்சி மாற்றம் வரும் என்று கனவு காண்பவர்கள் ஒரு புறம்; “இல்லை... மீண்டும் நாங்களே!” என்று சொல்பவர்கள் மறு புறம். “நானே பிரதமர்” என்று சொல்பவர் ஒருவர்; “நானும் ஆவேன்” என்பவரும், “எங்களுக்கும் வாய்ப்புண்டு” என்று கூறுபவர்களும் உண்டு. மொத்தத்தில் எல்லோரும் கனவு காண்கிறார்கள். பிரதமர் கனவு!
முதலாவதாக, பாரதீய ஜனதாவின் கனவு என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம். அவர்கள் கனவு. "+ 272" என்பதாகும். அதாவது, 545 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், தங்கள் கட்சி மட்டும் சரிபாதியான 272 ஆசனங்களைப் பிடிக்கும் என்றும், கூட்டணிக் கட்சிகளின் ஆசனங்களையும் சேர்த்து, பெரும்பான்மையான ஆட்சியமைப்போம், என்பதுவும் அவர்களின் கனவு - பிரச்சாரம். இது சாத்தியமா இல்லை சறுக்குமா?
பாரதீய ஜனதா கட்சியின் அசுர - அவசர வளர்ச்சியை வாசகர்கள் அறிவார்கள். அதன் ஊற்றுக்கண் - 1951இல் சியாமா பிரசாத் முகர்ஜியால் துவக்கப்பட்ட பாரதீய ஜனசங். இதிலிருந்து ஆர்.எஸ்.எஸ். - அதாவது, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் என்ற முஸ்லிம் எதிர்ப்பு - ஹிந்துத்துவ அமைப்பின் வெளிமுகமாக, 1980 டிசம்பரில் பாரதீய ஜனதா கட்சி (பீ.ஜே.பி.) என்று ஒன்று வாஜ்பாய் - அத்வானி குழுவினால் பெயர் மாற்றம் பெற்றது.
1984 நாடாளுமன்றத் தேர்தலில் பீ. ஜே.பி. இரண்டு ஆசனங்களை மட்டுமே வென்றது. ஒன்று ஆந்திராவிலும், மற்றொன்று குஜராத்திலும். 1989இல் நடந்த பொதுத் தேர்தலில் பீ.ஜே.பி. 88 ஆசனங்களைப் பெற்றது. 1996இல் பீ.ஜே.பி. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டதாக இருந்தாலும், ஆட்சியமைக்குமளவுக்கு பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் அரசு அமைத்தனர். இந்த முதல் பாரதீய ஜனதா அரசு 13 நாட்களில் கவிழ்ந்தது.
மீண்டும் வந்த மார்ச் 1998 தேர்தலில், பா.ஜ.க. பரந்த கூட்டணி அமைத்து, 188 ஆசனங்களை வென்றது. தமிழகத்தின் அ.தி.மு.க.வும் அதில் அடக்கம். 14 மாதங்கள் நீடித்த அந்த ஆட்சி, மே 1999 இல் தமிழக அம்மையார் (அன்று அவர் ‘அம்மா’ அல்ல; ‘மேடம்’) முரண் பட்டதால் கவிழ்ந்தது. அடுத்து 13 அக்டோபர் 1999இல் பா.ஜ.க. கூட்டணி 303 ஆசனங்களைப் பெற்றது. பா.ஜ.க. மட்டும் 183 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. 13 மே 2004 வரை சென்று இந்த அரசு தனது காலத்தை முழுமைப்படுத்தியது.
ஐந்து ஆண்டுகள் நீடித்த வாஜ்பாய் அரசு, நரசிம்மராவிற்குப் பிற்பட்ட காலத்தில் இருந்த தளும்பல் நிலையை உறுதிப்படுத்தி, வெளிநாட்டுக் கொள்கையிலும் - உள்நாட்டிலும் ஓரளவுக்குத் தரமான ஆட்சியைத் தந்தது. சில குறைகள் இல்லாமலில்லை.
நெடுஞ்சாலை அமைப்பு, அரசு ஊடகங்களின் கட்டுப்பாடு தளர்வு, அணு பரிசோதனை போன்று குறிப்பிடத்தக்க சில விடயங்களை சிறப்பாகவே செய்ததால், 2004 தேர்தலில் ‘INDIA SHINING’ - ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷத்தோடு களமிறங்கி, அது 116 ஆசனங்களை மட்டுமே பெற்று, ஒளியிழந்து அமாவாசையில் சிக்கிக் கொண்டது. இன்று வரை மீளவே இல்லை. மீளத் துடிக்கிறது.
2004 தோல்வியின் முக்கிய காரணம் என்ன என்று அவர்கள் வெளிப்படையாக ஆராய்ந்து கூறவில்லை. ஆனால், ஆய்வாளர்கள் - குஜராத்தை மத்திய அரசு அடக்கவில்லை; மெத்தனமாக விட்டுவிட்டது என்பதே பிரதான காரணம் என்றும், அதனால், சிறுபான்மையினரும், நடுநிலையாளர்களும் ஆதரிக்கவில்லை என்றும் கூறினர்.
பாபர் மஸ்ஜித் இடிப்பை மெத்தனமாக விட்டு, முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்து, எப்படி நரசிம்மராவ், காங்கிரஸ் கட்சியை படுகுழியில் தள்ளினாரோ அதே காரியத்தை - மோடியை அடக்கி வைக்காது வாஜ்பாய் செய்தார் என்பதே பலரின் குற்றச்சாட்டு. ஆனால் மோடிக்கு ஆதரவாக அன்று வாஜ்பாயைத் தடுத்தது ஆத்வானிதன் என்பது பலர் அறியாதது.
அவ்வாறு அன்று பா.ஜ.க.வின் தோல்விக்குக் காரணமானவர் என்று அறியப்பட்டவர், இன்று “பா.ஜ.க.வை ஆட்சி பீடத்தில் ஏற்றுவேன்” என்று அறைகூவுகிறார். இது எவ்வளவு சாத்தியம்? நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். உண்மைதான்!
அரியலூரில் அதிகாலையில் ரெயில் ஆற்றில் விழுந்ததற்கு, டெல்லியில் தூங்கிக் கொண்டிருந்த ரெயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி எந்த வகையில் பொறுப்பாளியாவார்? அவர் ஏன் ராஜினாமா செய்தார்? தார்மீகப் பொறுப்பு என்று ஒன்று உண்டு. இன்று இந்திய அரசியலில் அது இல்லை.
188 இல் இருந்து இறங்கி, இன்று 116 ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சி “272 ஆசனங்கள் பெறுவோம்” என்கிறது. இரண்டு மடங்கிற்கு மேல் அதிகம். பா.ஜ.க. இப்போது 450 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. குறைந்தபட்சம் இரண்டில் ஒரு வேட்பாளர் கட்டாயம் வென்றாக வேண்டும்.
அதிக எண்ணிக்கை கொண்ட உத்திரபிரதேசத்தில் 80 ஆசனங்களும், பீஹாரில் 40 ஆசனங்களுமாக 120 தொகுதிகள் உள்ளன. தற்சமயம் உ.பி.யில் 10 ஆசனங்களும், பீஹாரில் 12 ஆசனங்களும் உண்டு. இந்த 12 நிதீஷ்குமார் ஆதரவில் வந்தது. இப்போது அவர் ஆதரவு இல்லை.
எது எப்படியிருந்தாலும், பிற மாநில கூட்டணிகள் எப்படி அமைந்தாலும், உ.பி. மற்றும் பீஹாரில் தனித்தே போட்டியிட வேண்டிய நிலையில்,120இல் 80 ஆசனங்களை வென்றால்தான் பா.ஜ.க.வின் குதிரை வெற்றிக் கம்பத்தை நெருங்கும். இது சாத்தியமா இல்லை சறுக்குமா?
இதுபோக, சுமார் ஐந்து மாநிலங்களில் பா.ஜ.க. இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறது. இங்கு 170 ஆசனங்கள் இருக்கின்றன. மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஒடிசா, கேரளா, ஆந்திரம் அவை. இங்கு பா.ஜ.க. எத்தனை ஆசனங்களைத்தான் பிடிக்கப் போகிறது? மேலும், இன்னும் ஏழு வட மாநிலங்களில் பலமான மாநில கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது.
மோடி அலை எப்படி வீசினாலும் வடக்கே இன்னும் பெரிய அளவில் கூட்டணி அமையவில்லை. அதேவேளை, மகராஷ்டிராவில் தேய்மானம் தெரிகிறது. பால் தக்கரேக்குப் பிறகு சிவசேனா அப்படி பலமாக இல்லை. மேலும், ராஜ் தக்கரே வேறு மோடியோடு முரண்படுவது போல் பேசுகிறார். கூட்டணியில் இவரது கட்சி இணையாவிட்டால், அதன் பாதிப்பு தெரியவே செய்யும்.
சிவசேனாவின் அதிரடி அரசியல்தான் முதலீட்டாளர்களை மகராஷ்டிராவை விட்டு விட்டு குஜராத்தை விரும்ப வைத்தது என்பதையும், அதனால் அம்மாநிலமும், மோடியும் பலன் பெற்றார்கள் என்பதையும் ஊடகங்கள் எடுத்துச் சொல்வதில்லை.
இது இப்படியிருக்க, புதிதாகத் தோன்றிய ஆம் ஆத்மி கட்சி வடக்கே காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளைப் பங்கு போடும் என்பது தெளிவு. அவர்கள் 50 - 60 ஆசனங்களைப் பிடிப்பார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறியதை, பா.ஜ.க. அசட்டை பண்ணினாலும், அவர்களது வாக்கு வங்கியில் இந்தப் புதிய கட்சி ஒரு சரிவை உண்டாக்கும் என்பது நிச்சயம். குஜராத்தின் 26 தொகுதிகள் உட்பட 400 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிடலாம்.
இந்தத் தேர்தலில், ராம் ஜென்ம பூமி - பாபர் மஸ்ஜித் போன்ற உணர்ச்சிகளை உசுப்பி விடும் விடயங்கள் இப்போது பிரதான பங்கு வகிக்கவில்லை. ராமரை முன்வைத்து முன்பு வென்றது போல, மோடியை இப்போது முன்வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். ஆகவே, இங்கு பா.ஜ.க.வின் கொள்கைகள், சாதனைகள் என்பன பின்தள்ளப்பட்டு, ஓர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல், மோடி என்ற தனி மனிதரின் சாதனை, அவரது கொள்கை என்று அவரைச் சுற்றியே தேர்தல் பிரச்சாரம் செல்கிறது.
ஆனால் அமெரிக்கா- இலங்கை - பிரான்ஸ் ஜனாதிபதிக்குரிய அதிகாரம் இந்திய பிரதமருக்கு கிடையாது.மேலும் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் பெருமைகளைப் பற்றி மோடி எதுவும் கூறுவதில்லை - தொடுவதில்லை. இது மூத்தவர்கள் பலரைக் கவலையடைய வைத்துள்ளது.
இவர் தலைமையில் ஆட்சி அமைந்தால் அது மோடியின் வெற்றியாகவே இருக்கும். பாரதீய ஜனதாவின் வெற்றியாக அல்ல. ஆகவே, இவர் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை வரும். இது இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், இரண்டாம் கட்ட தலைவர்களையும் அச்சமடைய வைத்துள்ளது.
காரணம், மோடி பழகுவதற்கு இனியவர் அல்ல. இலகுவில் அனுகக் கூடியவரும் அல்ல. கண்டிப்பானவர். தனது பாதையில் வராதவர்களை - எதிர்பாதையில் மோதுபவர்களை அவர் சகிப்பதில்லை. ஆகவே, கட்சியில் அடக்குமுறை - சர்வாதிகார ஆட்சி வரும் என ஒரு குழு நினைப்பது தவறு அல்ல.
மேலும், டெல்லி அரசியல் மோடி அறியாதது. பா.ஜ.க.வின் 116 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேரை - எத்தனை பெயர்களை அவர் அறிவார் என்று சொல்ல முடியாது. மிக மிகக் குறைவே. அதே வேளை, மூத்தவர் அத்வானியை அவர்கள் அனைவரும் அறிவர். அவருக்கும் இவர்கள் ஒவ்வொருவரின் பெயரும், விபரங்களும் தெரியும்.
மேலும், பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டுமென மோடி விரும்புகிறார். இது எந்தப் பலனைத் தரும் என்பதை தேர்தல் முடிவே சொல்லும். அனுபவம் ஓர் ஆற்றல். அது இல்லாத அமைச்சரவையில் குறை காணும் வாய்ப்பும் அதிகம்.
மோடி அலை இயற்கையா அல்லது செயற்கையா என்று கூற முடியாது. ஆனால் ஊடகங்களின் பங்கீடு இதில் பெரிய அளவு இருப்பது உண்மை. மோடியின் வெற்றிக்காக அமெரிக்கா வாழ் குஜராத்தியர் பிரம்மாண்டமான அளவில் பங்களிப்பு செய்கிறார்கள். குஜராத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அமெரிக்க ஜனத்தொகையில் ஒன்று கூடும் என்று கேலியாக சொல்வர். அந்த அளவு அவர்கள் செல்வாக்கு அங்கு அதிகம்.
அவர்களது முயற்சியில் பராக் ஒபாமா பாணி தேர்தல் பிரச்சாரம் முற்றும் முழுதுமாகப் பின்பற்றப்படுகிறது. கணனியில் காணும் இடமெல்லாம் மோடியே என்பதும் அவற்றில் ஒன்று. இதற்காக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் 5,000 இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், பெரும் பணம் செலவிடப்படுவதாகவும் கூறுகிறார்கள். கணனி வழி பத்திரிக்கை செய்திகளில் கருத்தாளர்களின் விமர்சனங்களைப் பார்க்கும்போது, அங்கு ஒரு செயற்கையான பிரச்சார நெடி இருப்பதை அறியலாம்.
பத்து கோடி அளவில் இருக்கும் புதிய வேட்பாளர்கள் - இளைஞர்களைக் கவர்வதே மோடியின் முக்கிய இலக்கு. கணனிக்கு பரிச்சியமான இளவல் கூட்டத்திடம் மோடி மோகம் இருப்பது வுண்மை. ஆனால் புதிதாக வந்த ஆம் ஆத்மி கட்சி, டெல்லி வெற்றியின் பின் மோடிக்கு வேகத் தடையை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது. வடக்கே மோடி அலை அடங்கி, கெஜ்ரிவாலின் சுனாமி அடித்துக் கொண்டிருப்பதுதான் உண்மை.
நகர்ப்புற, கிராமப்புற இளைஞர்கள் இலட்சக் கணக்கில் அக்கட்சியில் சேர்கின்றார்கள். சில இடங்களில் விண்ணப்பப் படிவங்கள் தீர்ந்து போய்விட்டன. ஏன், காங்கிரசின் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும் இதே நிலைமைதான். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சமீபத்தில் “இக்கட்சியை அலட்சியம் செய்யாதீர்” என்று பா.ஜ.க.வினருககு அறிவுறுத்தல் செய்ததையும் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.
பாரதீய ஜனதா, 1998 தேர்தலில், 25.59 % வாக்குகளையும், 188 ஆசனங்களையும் பெற்றது.
1999 தேர்தலில், 23.75 % வாக்குகளையும், 183 ஆசனங்களையும் பெற்றது. அது 2004இல் ஆட்சியில் இருந்து சந்தித்த தேர்தலின்போது 22.16 % வாக்குகளையும், 144 ஆசனங்களையும் பெற்றது. ஆனால், 2009 தேர்தலில் 18.80 % வாக்குகளையும், 116 ஆசனங்களையும் பெற்று தேய்பிறையாகவே காட்சி தந்தது ஏன்? இந்த 5 ஆண்டுகளில் நாட்டில் பா.ஜ.க.வின் நிலை எங்கு, எப்படி அதிகரித்திருக்கிறது? தமிழ்நாட்டில் 2 % வாக்கு வங்கியையே அது கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் சூழலைத் தனியாகப் பிறகு பார்க்கலாம்.
மோடியின் பிரச்சாரம், காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதாக மட்டுமே இருக்கிறது. அதனைக் கேட்கவும், அவரைப் பார்க்கவுமே கூட்டம் கூடுகிறது. தேர்தல் நெருங்கும்போது எல்லா கட்சிகளுமே காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தில்தான் ஈடுபடும். ஆம் ஆத்மி கட்சியும் அதனையே செய்யும். அப்போது மோடியின் பேச்சிற்கு மதிப்பு இருக்காது. அவரது சரக்கும் தீர்ந்து போயிருக்கும்.
மன்மோகன் சிங் செயல்படும் பிரதமரோ, செயல்படா பிரதமரோ - அவர் போன்று பரந்த அறிவு கொண்டவராக மோடி தோன்றவில்லை. மோடியை விட அறிவுசால் தலைவர்கள் பா.ஜ.க.வில் உள்ளனர். தனது தாழ்குடிப் பிறப்பை எடுத்துப் பேசி, சாமானியர்களைக் கவர அவர் முயல்கிறார். காரணம், பா.ஜ.க.வின் முதுகெலும்பு, உயர்ஜாதி ஹிந்துக்கள்தான்.
இறுதியாக, எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், பாரதீய ஜனதாவின் “+272” கனவு நனவாக வாய்ப்பு இல்லை. நரேந்திர மோடி ஒரு பரக் ஒபாமாவோ, எம். ஜி. ஆரோ அல்ல. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். வரக்கூடிய 16ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தலை முடியைப் பிய்க்க வைக்கும்!
|