சிங்கப்பூரில் நடைபெற்ற கியாமுல் லைல், தஸ்பீஹ் தொழுகை மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் திரளான காயலர்கள் கலந்துகொண்டனர்.
நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, வழமை போல சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் ஏற்பாட்டில், அவரது இல்லத்தில் 21.08.2011 அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு கியாமுல் லைல் எனும் இரவில் நெடுநேரம் நின்று தொழும் தொழுகை நடத்தப்பட்டது.
துவக்கமாக, கடையநல்லூர் மவ்லவீ ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் அன்வாரீ தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. துவக்கமாக, சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பென்கூலன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் கைய்யூம் பாக்கவீ, மஸ்ஜித் அப்துல் கஃபூர் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் மஹ்ழரீ ஜமாலீ, அதே பள்ளியின் தராவீஹ் இமாம்களுள் ஒருவரும், ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாமுமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ ஆகியோர் உரையாற்றினர்.


ரமழான் மாதத்தின் சிறப்புகள், ரமழானில் நோன்பு நோற்பதன் சிறப்புகள், இரவில் நின்று வணங்குவதன் மகத்துவம், உளத்தூய்மையுடன் அமல்களை நிறைவேற்றல் என பல்வேறு அம்சங்களைத் தாங்கி அவர்களின் உரைகள் அமைந்திருந்தன.
பின்னர் கியாமுல் லைல் எனும் நீனிலைத் தொழுகை நடைபெற்றது. துவக்கமாக மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தினார். அவரைத் தொடர்ந்து இளவல் பாளையம் முஹம்மத் அப்துல் காதிர், தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ், செய்யித் முஹ்யித்தீன் ஆகியோர் தொழுகையை வழிநடத்தினர்.
பின்னர் தஸ்பீஹ் தொழுகை நடைபெற்றது. ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அத்தொழுகையை வழிநடத்த, இறுதியாக ஹாஃபிழ் அஹ்மத் வித்ர் தொழுகையை வழிநடத்தினார்.

பின்னர் அனைவருக்கும் காயல்பட்டினம் களறி சாப்பாடு ஸஹன் முறையில் ஸஹர் உணவாகப் பரிமாறப்பட்டது.



ஹாஜி “அமைப்பு” ஷம்சுத்தீன் தலைமையில், ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், எஸ்.ஐ.பாக்கர் ஸாஹிப் ஆகியோர் உணவுப் பதார்த்தங்களை ஆயத்தம் செய்திருந்தனர்.

அனைத்து நிகழ்வுகளிலும், கீழக்கரை ஹஸன் அத்னான், சிங்கை கா.ந.மன்ற ஆலோசகர் முனைவர் முஹம்மத் லெப்பை, ஹாஜி வாவு ஷாஹுல் ஹமீத், காயல் முஹம்மத் அப்துல் காதிர் மற்றும் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நள்ளிரவு 04.15 மணிக்கு அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்றன.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், சிங்கை காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத், செயற்குழு உறுப்பினர் ஹரீஸ், ரப்பானீ உள்ளிட்டோர் செய்திருந்தனர். பெண்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
படங்கள்:
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத்,
சிங்கப்பூர். |