அமெரிக்க நாட்டில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் வசிக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 11 வயது மாணவி ரஹீஃபா ராபியா திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்து, ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ ஸனது - பட்டம் பெற்றுள்ளார்.
இவர், காயல்பட்டினம் எல்.கே.துவக்கப் பள்ளிகளின் முன்னாள் தாளாளரும், கே.ஏ.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைவருமான நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீமின் பேத்தி மகளும், ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் செயலாளர் ஹாஜி பாளையம் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஜி எம்.டீ.முத்து மொகுதூம் ஆகியோரின் பேத்தியும், அமெரிக்கா நியூஜெர்ஸி மாகாணத்தில் வசிக்கும் ஏ.எம்.தவ்ஃபீக் - எம்.எம்.முஃப்லிஹா தம்பதியின் மகளும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீயின் சகோதரி மகளுமாவார்.
கடந்த ஷஃபான் / ரமலான் மாதம் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்த மாணவிக்கு ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் வழங்கி, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இம்மாணவிக்கு நினைவு கேடயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
நியூஜெர்ஸி - பிஸ்காட்டவே (PISCATAWAY) நகரில் இயங்கி வரும் ‘அன்னூர் - தாருல் ஹுதா’ அகடமி எனும் இஸ்லாமிய பள்ளிக்கூடத்தில் கே.ஜி. வகுப்பிலிருந்தே படித்து வரும் மாணவி ரஹீஃபா ராபியா, நடப்பாண்டில் ஐந்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இம்மாணவி தனது 11வது வயதிலேயே முழு குர்ஆனையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளார். இப்போது இம்மாணவி ஹாஃபிழாவாக தேர்ச்சி பெற்று அவர்களின் குடும்பத்திற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், சொந்த ஊரான காயல்பட்டினத்திற்கும் அளவில்லா பெருமை சேர்த்துள்ளார்.

இப்பள்ளியில் வாரத்தில் ஐந்து நாட்களும் நடைபெற்று வரும் முழு நேர அகடமிக் படிப்பு, அரபி, இஸ்லாமிய பாடங்கள், குர்ஆன் மனனம் (ஹிஃப்ழ்) படிப்பு முழு நேரமாக மாணவ மாணவியருக்கு தனித்தனி பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஹிஃப்ழ் பிரிவு துவங்கப்பட்டது முதல் இதுவரை 70 மாணவ-மாணவியர் திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ் / ஹாஃபிழாவாக உருவாகியுள்ளனர்.
மூன்றாம் வகுப்பிலிருந்து துவங்கிய இம்மாணவியின் ஹிஃப்ழ் மனனம், மூன்று ஆண்டுகளில் நிறைவுற்றுள்ளது. இப்பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் கிராஅத் போட்டிகள் அனைத்திலும் தனது இனிமையான குரலால் தஜ்வீதுடன் ஓதி தொடர்ச்சியாக வெற்றி கண்டு, பரிசுகள் பல பெற்றுள்ளார்.
ரஹீஃபா ராபியா கடந்த ஆண்டு அமெரிக்காவில் வட கிழக்கு மாகாணங்கள் அளவில் நடைப்பெற்ற குர்ஆன் போட்டியில் முதல் பரிசை தட்டிசென்றார். இந்த வருடம் ரமலான் மாதம் மத்திய நியூஜெர்ஸி மாணவ/மாணவிகளுக்கு மத்தியில் நடைப்பெற்ற குர்ஆன் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றுள்ளார்.



இந்த மாணவியின் சகோதரி "ஹாஃபிழா ஷுரஃபா ஸாதிகா" ஏற்க்கெனவே 2015ம் ஆண்டு இதே பள்ளியில் பயின்று "ஹாஃபிழத்துல் குர்ஆன்’ ஸனது - பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹாஃபிழா ஷுரஃபா ஸாதிகா பத்து வகையான கிராஅத்தில் தேர்ச்சி பெற தலைசிறந்த பெண் குர்ஆன் ஆசிரியரிடம் இஜாஜா (certificate) பெற பயிற்சி பெற்று வருகிறார்.
மேலும் இந்த இரண்டு மாணவியரும் கடந்த மூன்று வருடமாக, இந்த பள்ளியின் சார்பாக ரமலானில் பெண்களுக்கு மட்டுமான பெண்கள் இமாமத் செய்யும் தராவீஹ் தொழுகையையும் மிகச்சிறப்புடன் இமாமத் செய்துள்ளார்கள்.
பட்டமளிப்பு விழாவின்போது, மாணவி ஹாஃபிழா ரஹீஃபா ராபியா ஓதிய குர்ஆன் வசனங்களின் ஒலிப்பதிவை, https://youtu.be/85KPuJjwLa0 மற்றும் https://youtu.be/N6Fg81I58io என்ற இணைப்பில் சொடுக்கிக் கேட்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
A.M.தவ்ஃபீக் B.E.,
நியூஜெர்ஸி, அமெரிக்கா.
|