விசாலமான நிலப்பரப்பு, எல்லாத் திசைகளிலும் மரங்கள் என இயற்கைச் சூழலுடன் காணப்படும் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியை, அதன் இயல்பு மாறாமல் எல்லாக் காலங்களிலும் பாதுகாத்திட வேண்டும் என – பள்ளியின் பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். விரிவான விபரம்:-
நிகழாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் பயின்றோர் பேரவை சிறப்புக் கூட்டம், 04.09.2017. திங்கட்கிழமையன்று 11.00 மணிக்கு, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கிராஅத்துடன் துவங்கிய இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பள்ளியின் நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
செயலாளர் ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன் கூட்ட அறிமுகவுரையாற்றியதோடு, பள்ளியின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. பள்ளி நலனுக்காகவும், பயின்றோர் பேரவை செயல்பாடுகளில் இன்னும் முன்னேற்றம் காண்பதற்காகவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
விசாலமான நிலப்பரப்பு, எல்லாத் திசைகளிலும் மரங்கள் என இயற்கைச் சூழலுடன் காணப்படும் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியை, அதன் இயல்பு மாறாமல் எல்லாக் காலங்களிலும் பாதுகாத்திட வேண்டும் என இதன்போது முன்னாள் மாணவர்கள் பலர் வலியுறுத்தினர்.
தேவையானவற்றுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் பாளையம் முஹம்மத் ஹஸன் விளக்கமளித்துப் பேசினார்.
பள்ளி முதல்வர் ரத்தினசாமி, ஆசிரியர்களான அப்துர்ரவூஃப், சிரோன்மணி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் எளிதில் ஒருங்கிணைக்கும் வகையில், கைபேசி செயலி (Mobile Phone Application) ஒன்றை விரைவில் கட்டமைத்து அறிமுகப்படுத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
துணைச் செயலாளர் என்.எம்.அப்துல் காதிர் நன்றி கூற, துஆ – ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர். அனைவருக்கும் குளிர்பானம், சிற்றுண்டி வழங்கப்பட்டது.
|