| கத்தர் காயல் நல மன்றம் சார்பில், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் & இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட - நகர பள்ளிகளுக்கிடையிலான 7ஆம் ஆண்டு வினாடி-வினா போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடத்தை வென்றுள்ளது. 
 இதுகுறித்து, கத்தர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
 
 
  ஏழாமாண்டு வினாடி-வினா போட்டி: 
 கத்தர் காயல் நல மன்றம் சார்பில் - காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, ஆண்டுதோறும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
 
 ஏழாமாண்டு போட்டி, 04.09.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் நடைபெற்றது. இதில், எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து ஏழாவது ஆண்டாக - மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
 
 
  
 
  
 
  
 பங்கேற்ற மொத்த அணிகள்:
 
 சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 17 அணிகளும்,
 எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 50 அணிகளும்,
 முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 31 அணிகளும்,
 அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 42 அணிகளும்,
 சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 58 அணிகளும்,
 சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 18 அணிகளும்,
 எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 90 அணிகளும்
 என - காயல்பட்டினத்தின் 7 மேனிலைப் பள்ளிகளிலிருந்து, அணிக்கு 2 பேர் வீதம் 306 அணிகளில் 612 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.
 
 போட்டி நடத்துநர்:
 
 கோயமுத்தூர் Quiz Clubஇன் இயக்குநர்களும், புதுயுகம் தொலைக்காட்சியில், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை தயாரித்து நடத்தி வருவோருமான – கோவை செந்தில் குமார், கோவை நடராஜன் கிருஷ்ணசாமி ஆகியோர் இணைந்து இப்போட்டியை நடத்தினர்.
 
 நுழைவுப் போட்டி:
 
 முதற்கட்ட போட்டி எழுத்து முறையில் நடத்தப்பட்டது. போட்டி நடத்துநர் கோவை செந்தில் குமார் கேள்வித் தொகுப்பை இயக்க, நடராஜன் கிருஷ்ணசாமி அதை ஆங்கிலத்தில் வாசித்து, தமிழாக்கமும் செய்து விளக்க, மாணவ-மாணவியர் அவற்றுக்கான விடைகளை - கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் எழுதினர்.
 
 
  
 
  
 
  
 
  
 இறுதிப்போட்டியில் இடம்பெற்ற அணிகள்:
 
 பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட 26 வினாக்களில், அதிக வினாக்களுக்கு சரியான விடையளிக்கும் முதல் ஒரு பள்ளியிலிருந்து மட்டும் இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளுக்கும், இதர அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் தலா ஓர் அணிக்கும் என, 2 + 6 என்ற அடிப்படையில் 8 அணிகளுக்கு இடமளிக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
 
 அதனடிப்படையில், நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் விடைத்தாள்களை, கத்தர் காயல் நல மன்றத்துடன் இப்போட்டியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மதிப்பீடு செய்து, இறுதிப் போட்டிக்குரிய 8 அணிகளை முறைப்படி தேர்வு செய்தனர்.
 
 
  
 
  
 அதிகளவில் சரியான விடையளித்த எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்,
 சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
 முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
 அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
 சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
 சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
 எல்.கே. மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
 என மொத்தம் 8 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
 
 நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை நடத்துநர் மீண்டும் வாசித்து, பங்கேற்ற மாணவ-மாணவியரிடம் விடைகளைக் கேட்க, அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விடையளித்தனர். சில அரிதான கேள்விகளுக்கு ஓரிரு மாணவர்கள் விடையளித்தனர். அவர்களை நடத்துநர் அழைத்து, அந்த விடைக்கான விளக்கத்தைக் கேட்டபோதும், அவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்தனர். அவ்வாறான மாணவ-மாணவியருக்கு, நடத்துநர் இனிப்புப் பண்டங்களைப் பரிசாக வழங்கினார்.
 
 
  
 மதிப்பீட்டாளர்கள்:
 
 மஃரிப் தொழுகை இடைவேளைக்குப் பின் இறுதிப்போட்டி மேடையில் நடைபெற்றது. தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் இறுதிப்போட்டிக்கான மதிப்பீட்டாளர்களாகக் (Scorers) கடமையாற்றினர்.
 
 
  
 கேள்விச் சுற்று, விரைவுக் கேள்விச் சுற்று, அசைபட விரிதிரை மூலம் ஒலி - ஒளிச் சுற்று என பல விதங்களில் கேள்விகள் கேட்கப்பட, இறுதிப்போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவியர் ஆர்வமுடன் விடையளித்தனர்.
 
 
  
 
  
 
  
 
  
 
  
 பார்வையாளர்களுக்கும் பரிசுகள்:
 
 போட்டியில், 8 அணியினரும் விடையளிக்கத் தவறிய கேள்விகள் பார்வையாளர்களிடம் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோருக்கு அழகிய பரிசுகள் வழங்கப்பட்டன. கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்கள் சிலரும், போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் சிலரும் பரிசுப் பொருட்களை வழங்கினர்.
 
 
  
 
  
 எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பை:
 
 நிறைவில்,
 எல்.கே.மேனிலைப்பள்ளியின்
 எம்.என்.முஹம்மத் இப்றாஹீம்,
 எம்.யு.ஹம்மாத் ரிஃபான்
 ஆகியோரடங்கிய அணி முதலிடம் பெற்றது.
 
 இவ்வணிக்கு ரூபாய் 4 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும், அணி சார்ந்த எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பையையும், பரிசளிப்பு விழாவிவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், ஹாங்காங் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் (IMA) அமைப்பின் முன்னாள் தலைவருமான கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் வழங்கினார்.
 
 
  
 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 
 இரண்டாமிடம்:
 
 எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
 எஸ்.ஏ.சித்தி ஃபாத்திமா,
என்.செய்யிதா சுமய்யா
 ஆகியோரடங்கிய அணி இரண்டாமிடத்தைப் பெற்றது.
 
 இவ்வணிக்கு, ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 
 மூன்றாமிடம்:
 
 எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
 கே.ஃபரீதா,
 எம்.எஸ்.ஹபீபா
 ஆகியோரடங்கிய அணி மூன்றாமிடத்தைப் பெற்றது.
 
 இவ்வணிக்கு, ரூபாய் 2 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 
 
  
 இதர 5 அணிகள்:
 
 இறுதிப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் ரூபாய் 500 பணப்பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற இதர 5 அணிகள்:-
 
 சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின்
 எஸ்.டி.முஹம்மத் இஸ்ஹாக்,
 ஆர்.என்.எம்.ஷாஹுல் ஹமீத்
 
 முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
 எஸ்.ஜெ.ஷெய்குனா லெப்பை,
 எம்.ஏ.சி.மஹ்மூத் முன்ஸிஃப்
 
 அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின்
 என்.எச்.செய்யித் ராபியா நுஃபைலா,
 எஸ்.ஏ.எஃப்.ஃபரீதா ஜுல்ஃபிகா
 
 சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின்
 எம்.ஏ.ஸஃபீரா,
 டீ.யு.ஆமினா ஆஃபியா
 சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
 டபிள்யு.எஸ்.ஏ.கே.உம்முல் ஃகைரிய்யா,
 எச்.ஏ.ரபீனா
 
 
  
 
  
 
  
 நினைவுப் பரிசுகள்:
 
 சிறப்பு விருந்தினர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், வினாடி-வினா போட்டியை நடத்திய கோவை செந்தில் குமார், கோவை நடராஜன் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
 
 
  
 
  
 நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ, கத்தர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.
 
 ஏற்பாடு:
 
 போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில், பார்வையாளர்களாக பலர் கலந்துகொண்டனர், ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்கம், கத்தர் காயல் நல மன்றம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில், இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களான இசட்.எம்.டி.முஹ்யித்தீன் அப்துல் காதிர், டி.ஃபைஸல் ரஹ்மான், ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகளும் - செயற்குழு உறுப்பினர்களும், அங்கத்தினருமான ஏ.எஸ்.புகாரீ, எம்.எல்.ஹாரூன் ரஷீத், ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், எம்.சதக், எம்.என்.அஹ்மத் ஸாஹிப்,  உள்ளிட்டோரடங்கிய குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.
 
 இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 தகவல்களுள் உதவி:
 K.M.T.சுலைமான்
 (பொருளாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்)
 
 படங்கள்:
 வீனஸ் ஸ்டூடியோ
 |