| 
 காயல்பட்டினம் நகராட்சியின் 13வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது பப்பரப்பள்ளி பகுதி. இங்குள்ள நகராட்சிக்கு பாத்தியப்பட்ட சர்வே எண் 43/1 
இடத்தில், பல ஆண்டுகளாக நகராட்சி திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
  
 
  
 
  
ஆள் நடமாட்டமற்ற பகுதியாக குப்பைகள் கொட்ட துவங்கும்  போது இருந்த இப்பகுதியில், கால போக்கில் - 
 சிறப்பு குழந்தைகள் பள்ளி, மின்வாரிய துணை மின் நிலையம், நகராட்சியின் ஆடு, மாடு அறுப்பு இடம், குடித்தனங்கள் ஆகியவை வர துவங்கின. 
  
MUNICIPAL SOLID WASTE (M&H) RULES 2000 விதிமுறைப்படி எந்த பாதுகாப்பு வசதிகளும் செய்யாமல் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு 
வந்த காரணத்தால்  - இப்பகுதியின் நிலத்து நீர் உட்பட சுற்றுச்சூழலுக்கு கடுமையான  மாசு ஏற்பட்டுள்ளது.
  
சில  விஷமிகளால் அங்குள்ள குப்பைகள் எரிக்கப்படுவதால், காற்று மாசுப் படுவதாக அவ்வப்போது புகார்களும் எழுந்துள்ளது.
  
இதற்கிடையே, பப்பரப்பள்ளி பகுதியில் இனி குப்பைகள் கொட்டக்கூடாது என வலியுறுத்தி குழு ஒன்று ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது. அதனை 
தொடர்ந்து - அப்பகுதி மக்கள் சார்பாகவும், அப்பகுதியில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் சார்பாகவும்   - ஆகஸ்ட் 26 அன்று ஆணையரிடம் 
மனு அளிக்கப்பட்டது. அதில் - உடனடியாக, பப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு அந்த 
மனு மேல் செப்டம்பர் 3 தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் 
இறங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
   
ஆணையருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிந்த நிலையில், செப்டம்பர் முதல் வாரம் ஆணையரை சந்தித்த போராட்ட குழுவினரிடம் - ஆணையர், 
மேலும் கால அவகாசம் கோரியதாக தெரிகிறது.
  
இதற்கிடையே - நேற்று காலை, பப்பரப்பள்ளி அருகில், சாலையை மறித்து,  ஷாமியான பந்தல் அமைத்து  ஒரு சிலர் அமர்ந்திருந்தனர். இப்பகுதி 
வழியாக - நகராட்சியின் குப்பைகள் வாகனத்தை, தாங்கள் செல்ல அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர்கள்  தெரிவித்தனர்.
  
 
  
தகவல் அறிந்த ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியம் - அங்கு அமர்ந்திருந்தவர்களிடம், குப்பைகள் வாகனத்தை தடுத்து 
நிறுத்துவது, சட்ட பிரச்சனையை உருவாக்கும் என தெரிவித்தார். அங்கு வந்த, திருச்செந்தூர் தாலுகாவின் துணை வட்டாச்சியர் ராஜ், சாலையை 
மறித்து அமர்ந்திருந்தவர்களை - வட்டாசியரை சந்திக்க திருச்செந்தூருக்கு வர அழைதததன் பெயரில், அவர்கள் மதியம் 12 மணியளவில் - 
திருச்செந்தூர் சென்றனர்.
  
 
  
அங்கு - வட்டாச்சியர் வெங்கடாசலம் தலைமையில்  நடந்த பேச்சு வார்த்தையில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் - இன்னும் ஒரு 
மாதத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் குப்பைகள் கொட்ட, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி 
கூறினார். 
  
 
  
படங்களில் உதவி: 
எம்.ஜஹாங்கிர்  |