| 
 தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு ஆதரவு 
தெரிவித்திருப்பது - இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த  சர்ச்சையினை கிளப்பியுள்ளது. 
  
ஜனவரி மாதம் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறை செல்லும் போராட்டத்தில் மாநில 
அளவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்போதைய 3.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதத்திற்கு உயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கை முன் 
வைக்கப்பட்டது. அவ்வாறு உயர்த்தும் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இடம் உயர்த்தப்பட்டு 
அறிவிப்பு ஏதும் தமிழக அரசிடம் இருந்து வராத நிலையில்  தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது விமர்சனத்திற்கு 
உள்ளாகியுள்ளது.
  
மார்ச் 3 அன்று காஞ்சிபுரத்தில் தனது பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 
குறித்து பேசுகையில் -
  
தற்போது, தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தித் தர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் 
கோரிக்கை விடுத்துள்ளன. இவர்களது கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரை 
கிடைக்கப் பெற்றவுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
  
என்று தெரிவித்திருந்தார்.
  
அக்கூட்டத்தில் ஜெயலலிதா குறிப்பிட்ட - ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட - கடிதம் கீழே:
  
 
  
 
  
இக்கடிதம் பிப்ரவரி 28 அன்று - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மை அரசு 
செயலாளர்  டாக்டர் கே.அருள்மொழி IAS - மூலம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் - செயலாளருக்கு அனுப்பப்பட்டது 
ஆகும். 
  
அக்கடிதத்தில்  - தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரின் பிப்ரவரி 25 தேதிய கடிதமும், இந்திய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் 
தலைவரின் பிப்ரவரி 26 தேதிய கடிதமும் மேற்கோள் காட்டப்பட்டு, இரு இஸ்லாமிய அமைப்புகளின்  தலைவர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து, 
அரசுக்கு உரிய  பரிந்துரைகளை வழங்கும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 அன்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
  
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் மார்ச் 7 பதிப்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி - இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு 
குறித்து  ஆணையத்திடம் இருந்து பரிந்துரைக்கோரும் முதல்வர் ஜெயலலிதாவின்  நடவடிக்கையை  முதலவர்  வழக்கம்போல் முஸ்லிம்களை 
ஏமாற்றப்பார்க்கிறார்  என விமர்சித்திருந்தார். 
  
 
  
கருணாநிதியின் இந்த விமர்சனத்திற்கு பதில் கூறும் விதமாக ஜெயலலிதா - மார்ச் 9 அன்று  
நாகர்கோவிலில் ஆற்றிய பிரச்சார உரையில் விளக்கம் அளித்தார்.
  
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் 
கோரிக்கை விடுத்துள்ளன. இவர்களது கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து தனக்குத் தானே 
ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு அதற்கு பதில் அளித்து அறிக்கை விடுத்திருக்கிறார் திரு. கருணாநிதி. அந்த அறிக்கையில், “… வழக்கம்
போல முஸ்லீம்களை ஏமாற்றப் பார்க்கிறார். முஸ்லீம்களுக்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு அளித்ததே தி.மு.க. ஆட்சி தான். அந்த சதவிகிதத்தை 
அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால் அந்தக் கோப்பினை 
உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம். தற்போது அவர்களை ஏமாற்றுவதற்காக கோரிக்கையை மாநில பிற்படுத்தப்பட்டோர்
ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளிக்கப் பார்க்கிறார் ...” என்று திரு. கருணாநிதி கூறியிருக்கிறார். 
  
முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்ற உண்மையைத் தான் நான் 
சொன்னேன். இதில் ஏமாற்றுவதற்கு ஒன்றுமில்லை. தான் திருடி பிறரை திருடி என்று கூறுவாள் என்று ஒரு பழமொழி உள்ளது. அது போன்று 
ஏமாற்றியே பழக்கப்பட்ட திரு. கருணாநிதி நான் ஏமாற்ற பார்ப்பதாக குற்றம் சுமத்துகிறார்.
  
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க. தான் என்று திரு. கருணாநிதி கூறி இருக்கிறார். 2006-ஆம் ஆண்டு மாநில பிற்படுத்தப்பட்டோர் 
ஆணையத்தை திருத்தி அமைத்து அதில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ளதை அடிப்படையாக வைத்து இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் 
மற்றும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அம்சத்தை முதன் முதலாக
சேர்த்ததே எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். இது தான் முஸ்லீம்கள் இட ஒதுக்கீட்டிற்கு 
அடித்தளமாக, வித்தாக அமைந்தது. இதை முற்றிலும் மறைத்து முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க. தான் என்று
கூறுவது தான் ஏமாற்று வேலை.
  
திரு. கருணாநிதி தனது கேள்வி-பதில் அறிக்கையில், இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை 
வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால் அந்தக் கோப்பினை உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம் 
என்று கூறியிருக்கிறார். 
  
இப்படித் தான் திரு. கருணாநிதி ஆணை பிறப்பித்தாரா? நீதியரசர் திரு. எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் திருத்தி அமைக்கப்பட்ட மாநில 
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட ஆய்வு எல்லையில் எனது தலைமையிலான அரசு 2006-ல் தெரிவித்த முஸ்லீம்கள் கிறித்துவர்கள் 
உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்த ஷரத்தை திரு. கருணாநிதி ஏன் வார்த்தை மாறாமல் சேர்த்தார்?
  
2006-ல் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டதைப் போல, உடனேயே அதற்குரிய சட்டத்தை திரு. கருணாநிதி 
இயற்ற வேண்டியது தானே! அதை ஏன் செய்யவில்லை? எதற்காக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை அவர் கேட்டார்? 
ஏனெனில் சட்டப்படி அவ்வாறு தான் செய்ய முடியும்.
  
மண்டல் கமிஷன் வழக்கில் 1990-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எந்த இட ஒதுக்கீடு குறித்தும் எந்த அரசும் 
தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இட ஒதுக்கீடு குறித்து மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை பெற்ற பின்னரே அதை 
நடைமுறைப்படுத்த முடியும் என்று தெளிவாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் வளமான பிரிவினரை நீக்கம் 
செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டது. அதே அடிப்படையில் தான் தற்போதும் இட 
ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற முஸ்லீம் அமைப்புகளின் கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. 
  
ஏமாற்றுவது வஞ்சிப்பது துரோகம் இழைப்பது என்பதெல்லாம் திரு. கருணாநிதிக்கு தான் கைவந்த கலை என்பது நாடறிந்த உண்மை. திரு. 
கருணாநிதியின் பேச்சை இன்னமும் கேட்டு ஏமாறுவதற்கு தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
  
இந்தியாவின் எஞ்சிய மாநிலங்களில் பிரச்சனைக்குரிய விஷயமாக இருந்தாலும், தமிழகத்தில் - இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி 
சமீப காலங்களில் பெரிய அளவில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவில்லை. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தில் நிலவிய சமூக 
நீதிக்கான பிரச்சாரங்களே  இதற்கு முக்கிய காரணம். 
  
இட ஒதுக்கீடு - மதம் அடிப்படையில் இல்லாமல், ஜாதிகள் அடிப்படையிலேயே காலம்காலமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு என 
ஜாதி இல்லையென்றாலும் - லெப்பை, தெக்கனி முஸ்லிம், அன்சர், செய்யத், மரக்காயர் போன்ற பெயர்களில் அவர்கள் கணக்கிடப்பட்டு 
வருகிறார்கள். இட ஒதுக்கீடுக்கான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அவர்கள் இணைக்கப்பட்டு, இட ஒதுக்கீட்டினை அனுபவித்து வந்தார்கள்.
  
இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகள் பலமாக 1990 களில் இருந்து எழுப்பப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தின் 
இட ஒதுக்கீடு கொள்கை மிகவும் பழமை வாய்ந்தது.
  
1950 களில் தமிழகத்தில் இட ஒதுக்கீடு 41 சதவீத அளவில் இருந்தது. இது 16 சதவீதம் - ஆதி திராவிடர்/பழங்குடியினர் சமுதாயங்களுக்கு என்றும், 
25 சதவீதம் - (இஸ்லாமியர்கள் உட்பட) இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு என்றும் பிரித்து வழங்கப்பட்டு வந்தது.
  
 
  
1969 இல் - அப்போதைய தி.மு.க. அரசு - முதல் முறையாக, குறுகிய கால - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்  (TAMILNADU BACKWARD 
CLASSES COMMISSION) ஒன்றினை அமைத்தது. அந்த ஆணையத்தின் ஆயுட்காலம் ஓர் ஆண்டு என்ற அடிப்படையில், சில குறிப்பு விதிமுறைகள் 
(TERMS OF REFERENCE) வழங்கி, அறிக்கை சமர்ப்பிக்க அப்போதைய அரசினால் கோரப்பட்டது. ஏ.என். சட்டநாதன் தலைமையிலான அந்த குழு - 
இரு முக்கிய பரிந்துரைகளை - ஓர் ஆண்டின் இறுதியில் - வழங்கியது. 
  
ஒன்று - பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் (CREAMY LAYER) என்ற பிரிவினை உருவாக்குவது. இரண்டு - இதர பிற்படுத்தப்பட்ட 
வகுப்பினருக்கான (OBC) இட ஒதுக்கீட்டை - 25 சதவீதத்தில் இருந்து 33 சதவீதம் என உயர்த்தி, அதில் 16 சதவீத இடத்தினை பிற்படுத்தப்பட்ட 
சமூகத்திற்கும் (BC), 17 சதவீதத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு (MBC) ஒதுக்க பரிந்துரை செய்தது. 
  
இருப்பினும் - CREAMY LAYER பரிந்துரையை தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட 
ஒதுக்கீட்டை - 25 சதவீதத்தில் இருந்து 31 சதவீதம் என உயர்த்தியது. ஆனால் - அதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவினை 
உருவாக்கவில்லை.
  
மேலும் ஆதி திராவிடர்/பழங்குடியினர் சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு 18 சதவீதம் என அதிகரிக்கப்பட்டது. மொத்த ஒதுக்கீடு - 41 சதவீதத்தில் 
இருந்து 49 சதவீதம் என உயர்ந்தது. 
  
1971 இல் தி.மு.க. நிராகரித்த பரிந்துரையை - தி.மு.க.வை விட்டு விலகி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய 
கட்சியினை துவங்கி ஆட்சியினை கைப்பற்றியிருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசு, 1979 இல்  பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் 
(CREAMY LAYER) என்ற பிரிவினை ஏற்றுக்கொண்டு, ஆண்டு வருமானம் 9000 ரூபாய்க்கும் கீழ் உள்ள குடும்பத்தினர் தான் இட ஒதுக்கீடுக்கு 
தகுதியானவர்கள் என அறிவித்தது. இதனை எதிர்த்து மாநிலம் முழுவதும் கண்டனம் தெரிவித்து எதிர்கட்சிகள் ஆர்பாட்டங்கள் நடத்தின. 
  
தொடர்ந்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய அ.தி.மு.க., மத்தியில் வந்த புதிய அரசாங்கம் தன்னை டிஸ்மிஸ் செய்யும் முன் - 
தனது முடிவை வாபஸ் வாங்கி, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான (OBC) ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக 
உயர்த்தியது. இதனால் மொத்த  ஒதுக்கீடு - 49 சதவீதத்தில் இருந்து 68 சதவீதம் என உயர்ந்தது.
  
இட ஒதுக்கீட்டு அளவினை 68 சதவீதம் அளவிற்கு உயர்த்திய அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. 
அவ்வழக்குகளில்  தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இரு மாதங்களில் ஒரு குழு அமைக்கப்பட்டு, மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோரின் உண்மை 
நிலை குறித்து - அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்தது.
  
அதனை தொடர்ந்து உருவானது - இரண்டாம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் - 3 ஆண்டுகள் ஆயுட்காலத்துடன். இக்குழுவிற்கு ஜே.ஏ. 
அம்பாசங்கர் தலைமை தாங்கினார்.
  
 
  
அக்குழுவில் இடம்பெற்றிருந்த பலர் அதன் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அம்பாசங்கர் பரிந்துரைகளை உடனடியாக 
எம்.ஜி.ஆர். சட்டசபையில் வெளியிடவில்லை.  அம்பாசங்கர் - அதுவரை உயர்ந்த ஜாதிகளாக கருதப்பட்ட சில பிரிவுகளை, பிற்படுத்தப்பட்டோர் 
பட்டியலில் இணைக்க பரிந்துரைத்திருந்தார். மேலும் - அதுவரை, பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக கருதப்பட்ட ஜாதிகளை, அந்த பட்டியலில் இருந்து 
நீக்க  பரிந்துரைத்தார். அந்த குழுவின் மதிப்பீட்டின்படி - இந்த பரிந்துரைகளுக்கு முன், மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 
தமிழகத்தில் 67 சதவீதம் ஆகும். 
  
அரசு முழுமையாக இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அம்பாசங்கர் பரிந்துரைத்தப்படி - அதுவரை உயர்ந்த சமுதாயங்களாக கருதப்பட்ட 
29 பிரிவுகள், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டார்கள். ஆனால் எந்த சமுதாயமும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. 
  
 
  
அம்பாசங்கரின் முடிவுகளின் முக்கியமான ஒன்று - நூற்றுக்கணக்கான சமுதாயங்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றாலும், இட 
ஒதுக்கீடு பலனை - அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட சில சமுதாயங்கள் தான் அனுபவித்து வருகின்றன என்பதாகும்.
  
அம்பாசங்கர் ஆவணங்களே - 2007 இல், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டப்போது பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
  
[தொடரும் ...]  |