Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:01:42 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 74
#KOTWEM74
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 31, 2013
ஒடுங்குவது தெருவா - இல்லை மனமா!!

இந்த பக்கம் 3346 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒவ்வொரு நாட்டுக்கும் , நகருக்கும் அதனதன் உரிமையை நிலைநாட்ட எல்லைகள் வகுத்திருப்பது போல் , தனிபட்ட மனிதர்களுக்கும் அவர்களின் நிலங்களை , வீடுகளை முழு சுதந்திரத்துடன் அனுபவிக்க அவர்களுடைய ஒவ்வொரு சொத்துக்கும் எல்லைகள் உண்டு. அந்த எல்லைகள் அரசாங்கத்தால் நிர்ணையிக்கப்பட்டு , அவைகள் பதிவு செய்யப்படுகின்றன.

இவ்விதமாக எல்லைகள் நிர்ணையிக்கப்படுவது நம் ஊரிலோ, நம் நாட்டிலோ மட்டும் அல்ல – உலகம் முழுமையிலும் நடைமுறையில் உள்ள பழக்க, வழக்கமாகும். இந்த அடிப்படையில் ஒருவருடைய நிலத்திற்கு அடுத்து இன்னொருவருடைய நிலம் வரலாம் அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான நிலமோ அல்லது பொதுவான பாதைகளோ, சாலைகளோ வரலாம்.

அடுத்தவருக்கு சொந்தமான அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான நிலம் இல்லாமல் எந்த ஒரு நிலமும் தனித்து நிற்காது. எனவே ஒவ்வொரு நிலமும் அடுத்தவரை சார்ந்தோ , அரசாங்கத்தை சார்ந்தோதான் எல்லைகள் வகுக்கப்பட்டதாக இருக்கும். இப்படி பிரிக்கப்படுகிற எல்லைகளை அமைப்பதில் / அளப்பதில் நாம் நீதமாக நடந்துக்கொள்ள வேண்டும். வல்ல அல்லாஹ்! திருமறையிலே கூறுகிறான், நிறுவையை நீதியாக நிலைபெறச் செய்யுங்கள் ; தராசைக் குறைத்து விடாதீர்கள் “ என்று.

ஆகையால் அளவுகளை அளப்பதிலே நீதியாக நடந்துக்கொள்ள வேண்டும் அது தங்கமாக இருந்தாலும், வேறு எந்த பொருளானாலும், நிலமாக இருந்தாலும் சரியே! அடுத்தவரின் நிலத்தில் அல்லது அரசாங்கத்தின் நிலத்தில் ஓர் அடிகூட முறையின்றி நம்முடன் இணைத்துவிடலாகாது – மேலும் பொது பாதைக்கு எந்த ஓர் இடைஞ்சலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் உணர வேண்டும். ஆனால் இன்று சொத்துக்களின் எல்லைகள் அளக்கப்படுவது பல இடங்களிலே முறை தவறி நடைபெறுகிறது என்பதை உணர முடிகிறது. அதிலும் பெரும்பாலும் தெருவின் பக்கம் உள்ள நிலங்கள் , கட்டிடங்களின் எல்லைகள் அத்துமீறுகின்றன – ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.

சமீப காலமாக நமது ஊர் தெருக்கள் பலவும் ஒடுங்கத்தொடங்கி விட்டன. முன்பெல்லாம் நமது தெருக்கள் நேர்த்தியாக இருந்தது. சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களில்கூட இல்லாத நேர்த்தி நமது சிரிய நகரில் இருந்தது. அன்று பெரிய, பெரிய அடுக்குமாடி வீடுகள் இல்லை என்றாலும்கூட , விரிவான தெருக்களிலும், குறுகிய தெருக்களிலும் அமைக்கப்பட்டிருந்த வீடுகள் எல்லாம் ஒரே சீராக இருந்தது.

வீட்டின் வெளிப்பக்கம் உள்ள சிறிய (ஜான்ஸ் வாயிற்படி) படிக்கட்டுகளும், மாடியில் அமைக்கப்பட்டிருக்கும் பால்கனியும் வெளியே தெருவில் இருந்தாலும், அது யாருக்கும் எந்ததொரு சிரமத்தையும் கொடுக்கவில்லை – பார்வைக்கும் சீராக அமைக்கப்பட்டு தெருக்கள் நேர்த்தியாக இருந்தது. ஆனால் இன்று அவைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு தெருக்கள் குறுகிவிட்டன. சில தெருக்கள் சந்துகள் போன்று காட்சியளிக்கின்றன. ஒரு கார் மட்டுமே செல்லும் அளவிற்கு ஒரு வழிப்பாதையாக மாறிவருகிறது.

முந்தையக் காலத்தில் ஒரு வீட்டின் சராசரி அளவு அகலம் 20 அடியும், நீளம் 40 அடியுமாக இருந்தது – இதில் கொஞ்சம் கூடுதல், குறைவு இருக்கலாம். இந்த அளவிற்கு அதிகமாக பெரும்பாலும் யாரும் வீடு கட்டுவதில்லை. பணம் வசதி படைத்தவர்கள் அல்லது இடம் வசதியாக வேண்டும் என்ற தேவை உள்ளவர்கள்கூட மாடி வைத்துக் கட்டினார்களே! தவிர வீட்டின் அளவைக் கூட்டவில்லை.

இன்றையக் காலத்தில் இடவசதி வேண்டும் என்ற தேவை உள்ளவர்கள் மட்டுமல்ல – பணவசதி படைத்தவர்களாக இருந்தாலே போதும், வீட்டை பெரிதாக கட்டிவிடுகிறார்கள். நான்கு வீட்டின் நிலத்தில் இரண்டு வீடு அல்லது மூன்று வீட்டின் நிலத்தில் இரண்டு வீடு என்றும், அதற்கு மேலும் மாடிகளை வைத்து பல வசதிகளுடன் கட்டுகிறார்கள். இப்படி அவர்கள் வீடுகளை விசாலமாக கட்டுவதில் எந்த தவறுமில்லை. இன்றையக் கால சூழலுக்கும் , அவர்களுடைய தேவைக்கும் , அவர்களுக்கு இருக்கும் பண வசதிக்கும் வீடுகளை பெரிதாக , பல வசதிகளுடன் கட்டிக்கொள்ளலாம் – அதை குறை கூற முடியாது, குறை கூறவும் கூடாது. ஆனால் அவர்கள் வசதியாக / விசாலமாக கட்டுவதன் மூலம் பிறருக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இடையூறு செய்தால் அது வருந்தத்தக்கது.

பெரிய, பெரிய வீடுகள் என்று அல்ல சிறிய வீடுகளை கட்டுகிறவர்கள் கூட இன்று தெருக்களை ஆக்கிரமிப்பு செய்து பொது மக்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு செய்கிறார்கள். வாகனங்களை நிறுத்துவதற்காக வீட்டின் முன்புறம் “ கார் ஷெட் “ ( கார் நிறுத்துமிடம் ) கட்டுகிறார்கள் – அந்த ஷெட்டுக்குள் கார் ஏற, இறங்க வேண்டும் என்பதற்காக தெருவின் நடைபாதையில் மூன்று அடி எடுத்து சரிவு (ஸ்லோப்) அமைக்கிறார்கள். இப்படி அமைப்பதினால் தெருவின் அகலம் சுருங்கி விடுகிறது - வாகனங்கள் செல்ல வசதிகள் குறைகிறது. அதுமட்டுமா எத்தனையோ பாதசாரிகள் அந்த சரிவில் தடுக்கி விழுகிறார்கள். இரவில் என்றல்ல பகலிலும்கூட தடுக்கி விழத்தான் செய்கிறார்கள். இப்படி தங்களுடைய சொந்த தேவைக்காக தெரு பாதையின் நிலத்தை எடுத்துக்கட்டி மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும்.

கார் ஷெட் அமையுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்றைய காலத்தில் கார் நிறுத்த இடம் கிடைக்காதுதான், கிடைப்பது மிக, மிக சிரமம் என்பதும் உண்மையே!. அதனால் வீட்டின் முன்னே கார் ஷெட் அமைத்துக் கொள்வது பல வகையிலும் உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதற்காக மூன்று, நான்கு அடி கூடுதலாக உள்ளுக்குள் இடம் எடுத்து கார் ஏறுவதற்குண்டான ஏற்றத்தை உங்கள் கட்டிடத்திற்குள்ளேயே அமைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து அந்த சரிவு நிலை (ஸ்லோப்) கட்டிடத்திற்கு வெளியே தெருவிற்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி செய்தீர்களானால் அது மக்களுக்கோ , வாகனங்களுக்கோ எந்த ஒர் இடையூறையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம்.

இன்று எங்கு பார்த்தாலும் ( மிகுதியான தெருக்களில் ) அந்த சரிவு நிலைகள் (ஸ்லோப்) தார் ரோடு / சிமெண்ட் ரோடுகளை தொட்ட வண்ணமே! , ஏன்! அந்த ரோட்டின் மேல் 1 அல்லது 2 அடிகளை தாண்டியும் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை கண்கூடாக பார்க்கலாம். இப்படி செய்வதற்கு வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும் – அல்லாஹ்வின் தண்டனையை மறந்துவிடக்கூடாது.

மேலும் இப்பொழுது புதிதாக வீடு கட்டுபவர்களும், பழைய வீட்டை புதுப்பிப்பவர்களும் ஏற்கனவே இருந்த அவர்களின் எல்லையைக் கடந்து வந்து தெருவில் அமைக்கப்பட்டிருக்கும் மின் கம்பம் / டெலிபோன் கம்பம் வரை இழுத்து தங்கள் வீட்டின் அளவை கூட்டிக்கொள்கிறார்கள் / விரிவுப்படுத்திக் கொள்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டினருகில் மரம் இருந்தால் அந்த மரம் வரையில் தங்கள் ஆக்கிரமிப்பை விரிவுப்படுத்திக் கொள்கிறார்கள் – இது மகாத் தவறு.

சில மக்கள் நினைக்கிறார்கள் மின் கம்பங்களையும், மரங்களையும் தாண்டிதானே தார் ரோடு, சிமெண்ட் ரோடு போட்டு இருக்கிறார்கள், எனவே அதுவரை நம் வீட்டை அமைத்துக்கொள்ளலாம் – அதனால் வாகனத்திற்கு இடையூறு ஒன்றுமில்லையே! என்று.

மின் கம்பம் அல்லது மரம் வரை உள்ள நிலம் உங்களுக்கு எவ்வகையில் சொந்தமாகும். உங்கள் எல்லைமால் என்ன என்பதை பாருங்கள் நான்கு முனையையும் அளந்தால் உங்கள் எல்லைகள் தெளிவாகும். உள்பக்கம் உள்ள இரண்டு முனையையும் பக்கத்து நிலங்களுடனும் , தெரு பக்கம் உள்ள இரண்டு முனைகளையும் தெருவின் ஆரம்பப்பகுதியுடன் ஒப்பிடுங்கள். அதல்லாமல் அங்குள்ள மின் கம்பத்தையோ அல்லது மரத்தையோ எல்லையாக மனதில் கொண்டு அளந்தால் இந்தமாதிரியான தவறுகள் / தப்புகள் வரத்தான் செய்யும். வீடுகளை அழகாக கட்ட வேண்டும் , விரிவாக , வசதியாக கட்ட வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் நிலத்தை / நடை பாதையின் நிலத்தை எடுப்பது எப்படி முறையாகும்.

சில மக்கள் சொல்வார்கள் அந்த வீட்டைப் பார், இந்த வீட்டைப் பார் என்று அருகில் உள்ள வீடுகளை காண்பித்து, அவர்கள் வீடுகள் எல்லாம் எங்கள் வீட்டைவிட ரோட்டுப்பக்கம் கூடுதலாக வந்து இருக்கிறது என்று. அடுத்தவர்கள், ரோட்டை தவறுதலாக ஆக்கிரமிப்பு செய்ததை காரணம் காட்டி, நாமும் ஆக்கிரமிப்பு செய்வது எப்படி நியாயமாகும்?. இப்படி ஒருவரை ஒருவர் காரணம் காட்டினால் செய்கின்ற தவறுகள் எல்லாம் தவறில்லை என்று ஆகிவிடுமா. ஒக்க சிரித்தால் வெட்கமில்லை என்பது போல் ஒரு “ ஹராமை “ பல பேர்கள் செய்தால் அது “ ஹலால் “ ஆகிவிடாது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹீஹுல் புகாரியில் ஒரு ஹதீது வருகிறது “ பிறருடைய நிலத்தின் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டவரின் கழுத்தில் (மறுமையில்) ஏழு பூமிகளை தொங்கவிடப்படும் “ என்று . அறிவிப்பவர் : சயீத் பின் ஸைத் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள்.

இன்னும் மக்களில் சிலர் கூறுகிறார்கள், இது அடுத்தவர் நிலம் அல்ல – அரசாங்கத்தின் நிலம்தான் – இதில் நமக்கும் பங்கு உண்டு என்று. இப்படி கூறுவது எவ்வகையில் சாத்தியமாகும் – அரசாங்கத்தின் நிலமானாலும் , அடுத்தவர் நிலமானாலும் தவறு, தவறுதான் என்பதை மக்கள் உணர வேண்டும். “ நிலத்தில் (வைக்கப்படும்) அடையாளங்களை மாற்றி அமைப்பவனை அல்லாஹ் சபிக்கிறான் “ என்று, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்பதாக அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் ஸஹீஹுல் முஸ்லிமில் வரும் ஹதீதிலே அறிவிக்கிறார்கள். ஆகவே அல்லாஹ்வுடைய சாபம் கிடைக்குமே என்ற பயம் ஏற்பட வேண்டும் – அந்த பயத்தின் காரணமாக இப்படி அடுத்தவரின் நிலத்தை ஆக்கிரமிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

புதிதாக வீடு கட்டுவதற்கு முன்பு இருந்த, பழைய வீட்டின் அளவு சரியாகத்தான் இருந்திருக்கும். ரோட்டுப்பக்கம் உள்ள ஜான்ஸ் வாசலின் (வாயிற்படி) படிக்கட்டுகள் (பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு படிகள்) ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை தெருவில் இருக்கும் – இதற்கான வரியை வீட்டு தீர்வையுடன் சேர்த்து, நகராட்சிக்கு கட்டுவது வழக்கம் (இப்பொழுது அந்த வரி வசூலிப்பது நடை முறையில் உண்டா இல்லையா என்பது தெரியாது). இப்படி தெருவில் அமைக்கப்பட்டிருக்கும் வாயிற்படி படிக்கட்டுகளால் தெருவுக்கு எந்த இடையூறும் இருந்ததில்லை.

ஆனால் இன்று ரோட்டுக்கு மேல் ரோடு போட்டு எல்லா தெருக்களும் உயர்ந்து விட்டதால் வீடுகளின் வாயிற்படி படிக்கட்டுகளும் உயரமாக அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாக தெரு பக்கம் அமையக்கூடிய வாயிற்படி படிக்கட்டுகள் ஒன்று, இரண்டிலிருந்து ஐந்து, ஆறு என்ற எண்ணிக்கைக்கு ஏணிப்படியாக உயர்ந்த நிலையில் அந்த வாயிற்படி படிக்கட்டுகளை தெருவை முன்னோக்கி அமைக்காமல் , பக்கவாட்டில் அமைத்து ஏறி, இறங்குகிறோம். இப்படி வைப்பதில்கூட எவ்வளவுக்கு அவைகளை சுருக்க வேண்டுமோ, அவ்வளவுக்கு அவைகளின் அகலத்தை சுருக்கி தெருவின் நடைபாதைக்கு எந்த பாதகமும் ஏற்படாமல் அமைத்துக்கொள்ள வேண்டும் – அதுதான் முறை.

அப்படி முறையாக செய்கிறோமா என்றால் இல்லை எனலாம். அந்த படிக்கட்டுகளை கம்பீரமாக அமைத்து அவைகளுக்கு மார்பிள், கிரில் என்று பல விதத்திலும் அலங்கரித்து, அதன் அளவைக்கூட்டி மக்களுக்கு இடைஞ்சலைத்தான் உண்டுபண்ணுகிறோம் – இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

வீட்டு உரிமையாளரிடம், ஏன் படிக்கட்டுகள் ரோடுவரை வந்து இருக்கிறது என்று கேட்டால் அவர் சொல்வார், இது மேஸ்திரி செய்த வேலை, முதலில் நாங்கள் இப்படி வரும் என்று நினைக்கவில்லை, வீட்டு வேலைகள் முடியும்போதுதான் இது எங்களுக்கு தெரிய வந்தது என்று. அதுமட்டுமல்லாது இன்னொரு சூப்பர் சமாளித்தலும் அவர் வாயிலிருந்து வரும் ஹி…ஹி… வாயிற்படிக்கட்டு ரோட்டைத் தொடுதே! என்று அளந்துப்பார்த்தோம், எங்கள் நிலம் ரோடுவரை 4 அடி இருக்கத்தான் செய்கிறது ஆனால் நாங்கள் 3 அடிதான் அதில் (ரோட்டில்) எடுத்திருக்கிறோம் என்பார்.

ஏதோ, ஒரு, சில இடங்களில் இந்த மாதிரி 3 அடியோ, 4 அடியோ ரோட்டை தொடுகிறமாதிரி அவர்களுடைய பத்திரப்பதிவுப்படி இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை – சில நேரங்களில் பத்திரப்பதிவுகளில் தவறுகள் ஏற்படுவதும் உண்டு. ஆனால் இப்பொழுது நம் மக்கள் செய்கிறதைப்போல் எல்லோருக்கும் ரோடுவரை நிலம் இருக்காது – எல்லா பத்திரங்களிலும் தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் தெரு நடைப்பாதைக்காகவும் 4 அடி நிலம் விட்டுக்கட்டுவது உண்டு. அன்றைய நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, இறைவனுக்கு பயந்தவர்களாக அவைகளை முறைப்படுத்தி செய்தார்கள்.

இன்னும் சொல்வதென்றால் பழைய வீடு இருந்த அளவை கணக்கு வைத்துக் கட்டினால் இந்த நிலை வராது. இடிக்கப்பட்ட அந்த பழைய வீட்டில் அவர்களுடைய 3, 4 தலைமுறைகள் வாழ்ந்திருப்பார்கள் 70 , 80 வருடங்களாக குறைந்தது 50 வருடங்களுக்கும் மேலாக அந்த வீட்டில் பரம்பரையாக வாழ்ந்தபோது தெரியாத அந்த 4 அடி நிலம் புதிய வீட்டை கட்டும்போது புதிதாக முளைத்து விடுகிறதா?. உண்மையாகவே, உங்கள் நிலத்தில் சில அடிகள் ரோட்டிலே இருந்தாலும்கூட, நடை பாதைக்கு என்று சில அடிகள் விட வேண்டும் இன்னும் தெருக்களும் சீராக தெரிய வேண்டும் அல்லவா! இவைகளை எல்லாம் சிந்தித்து கட்டினால்தான் அந்த வீடு சீராகவும் அமையும், சிறப்பாகவும் இருக்கும்.

புதிதாக வீடுகளை கட்டுபவர்கள் முடுக்கு பகுதிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முடுக்குகளில் பெரிய அளவில் படிக்கட்டுகளை உயரமாக கட்டுகிறார்கள் – இதுவும் தவிர்க்கப்பட வேண்டும். இரு பக்கத்து வீட்டாரும் படிக்கட்டுகளை கட்டி அதில் கிரில் வைத்திருப்பதால், உள் வீட்டுக்காரர் சைக்கிளைக்கூட உள்ளே கொண்டுப்போக முடியவில்லை. அந்த வழியாக மாடு ஏதும் வந்தால்கூட அதை கடக்கவும் முடியாமல் வந்த வழியே திரும்பவும் முடியாமல் தவிக்கிறது. தெரு வீட்டுக்காரருக்கு சிரமம் இருக்காது. உள் வீட்டுக்காரர்தான் ரிப்பேருக்காக ஃப்ரிஜ் , மற்றும் ஃப்ர்னிச்சர்களை எடுத்துச் செல்ல மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகிறார். இதையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள் மரணித்தவருடைய “ மையத்தை “ கொண்டு செல்ல முடியவில்லை என்பதே மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. ஆகவே நடை பாதைக்கு நாசத்தை உண்டாக்குகிறவர்கள் – இறைவனால் நாசமாக ஆக்கப்படுவதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் கழிவுநீர் தொட்டிகளை (செப்டிக் டேங்க்) அமைப்பதை பற்றி பார்க்கும்பொழுது அதுவும் இன்று முறையற்றதாகவே இருக்கிறது - தெருக்களுக்கும் நடைபாதைகளுக்கும் இடையூறாகவே அமைந்துள்ளது. முன்பெல்லாம் பெரும்பாலான வீடுகளில் கழிவுநீர் தொட்டிகளை முடுக்குகளில்தான் அமைத்தார்கள். அன்று முடுக்குகள் விசாலமாகவும், காலிமனைகள் அதிகமாகவும் இருந்ததுடன் மக்களும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார்கள். ஆனால் இன்று அவைகள் எல்லாம் சுருங்கி விட்டதுடன் , வீடுகள் பெருகிவிட்ட காரணத்தால் தெருவின் பக்கமும் கழிவுநீர் தொட்டிகளை வைக்கவேண்டிய கட்டாயமாகிவிட்டது என்பது உண்மையே!

தெருக்களின் பக்கம் அவரவர்கள் வீட்டை ஒட்டியே கழிவுநீர் தொட்டியை அமையுங்கள் அதை தவிர்க்க இயலாது. ஆனால் அதை ஒரு கட்டுப்பாட்டுடன் அமையுங்கள். ஒன்றரை அடி அல்லது அதிகபட்சம் இரண்டு அடி அகலத்திற்குள் இருக்குமாறும் , தரை தளத்திற்கு மேல் அந்த தொட்டி வெளியே தெரியாமல் அமையுமாறும், உறுதியான கான்கிரீட் மூடியோடு அமைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் பாதசாரிகளுக்கும், வாகனங்களுக்கும் இடையூறை ஏற்படுத்தாது.

ஆனால் இன்று தெருக்களில் தாராளமாக 4 அடி அகலம் வரை கழிவுநீர் தொட்டியைக் கட்டுகிறார்கள். தரைத் தளத்திலிருந்து அரை அடி அல்லது முக்கால் அடி உயரம் வரை உயர்த்திக் கட்டி இருக்கிறார்கள். இப்படி உயர்த்திக் கட்டுவதால் பாதசாரிகள் நடப்பதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன. தரையோடு, தரையாக கட்டுவதால் பெரிய வாகனங்கள் அதன் மேல் ஏறி, அது உடைந்து வாகனமும் விழுந்து, பல விபத்துகள் ஏற்படுகிறது – உயிர் பலியும் ஏற்படுகிறது. ஆகவே 3, 4 அடிகள்வரை கழிவுநீர் தொட்டிகளின் அகலத்தை தெருவின் பக்கம் இழுத்து வராமல் ஒன்றரை அடி அல்லது இரண்டு அடிக்குள் உங்கள் சுவரோடு சேர்த்துக் கட்டி தரையோடு தரையாக அமைத்துக் கொண்டால் நல்லது. உங்கள் சுவரை ஒட்டியவாறு எந்த கனரக வாகனமும் வராது அதனால் வாகன விபத்துகள் ஏற்படாது, தரையோடு தரையாக இருப்பதால் பாதசாரிகளுக்கும் இடையூறு இருக்காது.

இப்படி தெருக்களுக்கும் நடைபாதைக்கும், ஏதோ பொதுமக்களின் வீடுகளில் மட்டும்தான் இடையூறை ஏற்படுத்துகிறார்கள் என்றில்லை. வணக்க வழிப்பாடு நடைபெறுகிற இடங்களில்கூட கழிவுநீர் தொட்டிகளை ரோட்டின் பாதைக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணமாக அமைத்திருக்கிறார்கள் – தெருவை ஆக்கிரமிப்பு செய்யும்வண்ணம் கூரைகளையும் அமைத்திருக்கிறார்கள் – இது மிகவும் வருந்தத்தக்கது. அவர்கள் கழிவுநீர் தொட்டிகளை உள் வளாகத்தில் அல்லது திறந்தவெளி இடங்களில் சில சிரமங்களையும், செலவுகளையும் பாராமல் அமைத்துக்கொள்வது நல்லது. பொது ஸ்தலங்களும், வழிபாட்டு ஸ்தலங்களும்தான் மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் தனக்காகவோ அல்லது தன் பிள்ளைகளுக்காகவோ சொந்தமாக ஒரு வீட்டை கட்டும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக தொடங்குகிறோம். அது பெரிய பங்களாவானாலும் சரி, சாதாரண வீடானாலும் சரி ஏன் அது ஒரு குடிசை வீடாக இருந்தாலும் சரியே!, பல எதிர்பார்ப்புகளுடன், தேவையான வசதிகளை அமைத்துக்கட்டி மகிழ்ச்சியோடு குடியேறுகிறோம்.

சொந்தமாக வீடு கட்டி குடியேறும்போது ஏற்படுகிற மகிழ்ச்சியை அளவிட முடியாது – அவரவர் வசதிக்கு தக்கப்படி விருந்து உபசாரங்கள் நடைபெறுகிறது. வீடும், வீட்டில் உள்ளோரும் எப்போதும் சந்தோசமாக , மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக புதிதாக கட்டிய வீட்டில் திக்ர், ஸலவாத் போன்ற வைபவங்களுக்கு ஏற்பாடு செய்து குடிபுகுகின்றோம். திக்ர், ஸலவாத் போன்ற வைபவங்களை வைப்பதற்கு கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடு உள்ளவர்கள்கூட திக்ர், ஸலவாத் போன்ற வைபவங்கள் வைக்காது போனாலும் உற்றார், உறவினர்களுக்கு விருந்து கொடுத்தும், ஆடு அறுத்து ஏழைகளுக்கு (குர்பானி) கொடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டுதான் புதிய வீட்டிலே குடியேறுகிறார்கள். அப்படி மகிழ்வோடு அந்த புதிய வீட்டிலே குடியேறுவதிலே மிகப்பெரும் சந்தோசத்தை காண்கின்றார்கள். இவ்வாறு செய்வதிலே ஊர்களுக்கு இடையிலோ, கொள்கைகளுக்கு மத்தியிலோ வித்தியாசம் இல்லை.

நம் ஊரிலே அவர்கள் வீடு கட்டினாலும் சரி அல்லது அவர்கள் வியாபாரம் செய்யும் பெரிய,பெரிய நகரங்களிலே சொந்தமாக வீடு கட்டினாலும் சரி இந்த மகிழ்ச்சியை கொண்டாட விருந்து உபசாரங்கள் இருக்கும். இப்படி நாம் புதிய வீட்டில் குடியேறுகிற அன்று மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டு பலருடைய ‘துஆ’ வை ( வாழ்த்துக்களை ) யும் பெறுகின்ற நாம், அந்த வீட்டில் குடியிருக்கின்ற காலமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் ஆக்கிரமிப்பு இல்லாது, பிறருக்கு இடையூறு இல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும்.

குடியேறுகின்ற அன்று நம் வீட்டுக்கு வந்த உற்றார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லாம் நம்மிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்வதிலே இருப்பார்களே தவிர, நம்மிடம் உள்ள குறையை சுட்டிக் காட்டமாட்டார்கள். ஆனால் நம் வீட்டின் மூலம் ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பினால், தெருப் பாதைக்கு ஏற்படும் இடையூறுகளினால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் காலமெல்லாம் நம்மை சபிப்பார்கள் , கடும் சொல்லை உதிர்ப்பார்கள். இன்னும் அந்த ஆக்கிரமிப்புகளை காணுகின்ற பாதிக்கப்படாத மக்களும் , இது பலருக்கும் இடையூறை ஏற்படுத்தும் என்பதால் சபிப்பார்கள் , என்பதை உணருங்கள். வீட்டுக்கு அழகும், அந்தஸ்தும் கிடைக்க வேண்டும் என்றால் தெருபாதைக்குரிய அந்தஸ்தையும், அழகையும் அந்த வீட்டின் மூலம் நாம் ஏற்படுத்த வேண்டும்.

எனவே, மகிழ்ச்சியாக வீடுகளை கட்டக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அந்த வீட்டிலே மகிழ்ச்சியாக எப்போதும் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும். நம்முடைய மனம் விசாலமாக இருந்து தெருக்களையும் , நடைபாதையையும் விசாலப்படுத்தினால் இன்ஷா அல்லாஹ்! நம்முடைய கப்றும் விசாலமாகும் என்பதை மறவாதீர்.

மேலும் தெருப்பாதையை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் இன்னயின்ன கொள்கை, கோட்பாடை சார்ந்தவர்கள் என்றோ, பணக்காரர், ஏழை, அதிகார வர்க்கத்தில் உள்ளவர், அரசியல்வாதி என்றோ, ஏன் அறிஞர் என்றோகூட பிரித்து சொல்வற்கு இல்லை, எல்லா தரப்பினர்களும் இதில் பங்குக் கொண்டுள்ளனர் இறைவனை பயந்தவர்களைத் தவிர. மற்ற எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

முன்பு எப்போதும் இல்லாத அளவில் இன்றையக் காலத்தில்தான் இந்த ஆக்கிரமிப்பும் , இடையூறும் நடைபெறுகிறது. மரணிக்கும்போது யாரும் , எதையும் கொண்டுபோவதில்லை , எதுவும், எவருக்கும் சொந்தமில்லை ஆறு அடி நிலத்தைத் தவிர என்பார்கள் – அது அந்த காலம் – ஆனால் இன்று அந்த ஆறு அடி நிலம் கூட எவருக்கும் சொந்தமில்லை. ஒருவரை அடக்கம் செய்த அதே குழியில் சில வருடங்கள் கழிந்த பின் இன்னொருவரை அடக்கம் செய்கிறோம் என்பது தெளிவு. அதனால் அந்த ஆறடி நிலத்தைக் கூட யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

இப்படி ஊரார் நிலத்தை ஆக்கிரமித்தும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்திலும் வீடுகளை கட்டுகிறார்களே! அவர்கள் யாராவது நிம்மதியாக, மனம் அமைதியாக வாழ்கிறார்களா! என்றால் இல்லை என்றே சொல்லலாம். அவர்களுக்கு வரும் நோய், நொடிகளைப் பற்றி சொல்லவில்லை – நோய் , நொடிகள் எல்லோருக்கும் வரும். ஆனால் மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் எவ்வளவுதான் நல்லவர்களாக வாழ்ந்தாலும் , தானம், தருமங்கள் செய்து வந்தாலும் , தொழுகை, இபாதத்களை முறையாக செய்பவர்களாக இருந்தாலும்கூட, அடுத்தவர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததன் காரணமாக அவர்களுக்கு இனம் புரியாத மனக் குழப்பமும், மன அமைதியின்மையும் அவர்களை இந்த உலகத்தில் ஆட்கொள்கிறது – மறு உலகிலோ இறைவனால் கொடுக்கப்படும் தண்டனை கடுமையாக இருக்கும். மக்கள் இந்த சிரமங்களை, தண்டனைகளை உணர்ந்தார்களானால் இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளை செய்யமாட்டார்கள்.

இந்த கட்டுரையின் நோக்கம் தவறுகளை செய்திருப்பவர்கள் , செய்யப்போகிறவர்கள் மக்களின் சாபத்திற்கும், இறைவனின் கோபத்திற்கும் ஆளாகக்கூடாது என்பதே!. ஆகவே, புதிதாக வீட்டைக் கட்டக்கூடியவர்கள் தங்கள் வீட்டுப் படிகளையும், கார் ஷெட்’ களின் சரிவு (ஸ்லோப்) களையும் மற்றும் கழிவுநீர் தொட்டிகளையும் தெருவின் நடைபாதைகளுக்கு இடையூறு இல்லாது அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே, மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறமாதிரி தவறுதலாக அமைத்திருப்பவர்கள் அவைகளை அகற்றிக்கொள்ளுங்கள். இறைவனின் அருள் அவர்கள் மீது உண்டாகும். இப்போது தவறுதலாக இருப்பதை அகற்றுவதில் எந்த கெளரவமும் பார்க்க வேண்டியதில்லை – அப்படி அகற்றுவதால் சில செலவுகளும் , அசெளகரியமும் ஏற்படத்தான் செய்யும் அதை நீங்கள் இன்று சிந்தித்து அதை சரிப்படுத்தாது விட்டால், நாளை அல்லாஹ்வின் தண்டனையை சந்திக்க வேண்டியது வரும். ஆகவே அவைகளை அகற்றி , தெருக்களை தெருக்களாக ஒளிரச்செய்யுங்கள்.

வல்ல அல்லாஹ்! நம் மக்களை நேரான பாதையில் நடக்க செய்து , மனமும் ஒடுங்காது – தெருவும் ஒடுங்காது காத்தருள்வானாக ஆமீன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒரு ஜான் எடுத்தாலும் தவறு... தவறு தான்...
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) on 31 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25297

ஆசிரியர் - N.S.E..மஹ்மூது மாமா அவர்கள் நகரில் நடக்கும் உண்மை சம்பவத்தை மிக தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்கள்... அரசு நிலமாகட்டும் - தனியார் நிலமாகட்டும் அதில் அருகில் உள்ளவர்கள் ஒரு ஜான் எடுத்தாலும் தவறு... தவறு தான்... அதை நியாய படுத்த முடியாது...

சமீபத்தில் நம் நகரில் ஒரு மிக பெரிய வர்த்தக வளாகம் அரசு அதிகாரிகளால் ஆக்கிரமிப்பு என்று நீதி மன்ற ஆணையுடன் அந்த கட்டிடம் தரை மட்டமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Abdul Cader S.H. (Jeddah) on 31 January 2013
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25299

N.S.E. மாமாவின் இந்த கட்டுரை நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. ஒரு அடி நிலத்திற்காகவும், முடுக்கை அடைத்து வாழவும் தான் ஆசை படுகிறார்கள். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை அறிய முடியாத சூழலில் இருக்கும் நாம், இறைவனை மறந்து, நான் அந்த கொள்கை, நீ இந்த கொள்கை என்று மார் தட்டிக்கொள்ளும் சிலர், இரத்த பந்தங்களை நிலத்திற்காகவும், முடுக்கிற்காகவும், கடும் வன்சொற்களால் வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை வீசியெறிந்து பேச, பாதிக்கப்பட்டவரின் அடிமனதிலிருந்து கொதிப்புடன் வெளிவரும் 'பதுவா' அவர்களை வாழவிடுமா? என்ற அச்சம் சிறிதளவும் இல்லை என்பதே உண்மை, காரணம் படைத்தவனின் பயம் இல்லாது போய்விட்டது. அழிந்து போகும் அற்ப உலகத்தில் வாழ்வதில் பெருமை கொள்ளும் நாம், நாளை மறு உலகிற்கு பாவச்சுமைகளை சுமந்து செல்ல வேணுமா, என்ற சிந்தனைவும் அறவே மங்கிவிட்டது.

“மகிழ்ச்சியாக வீடுகளை கட்டக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அந்த வீட்டிலே மகிழ்ச்சியாக எப்போதும் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும். நம்முடைய மனம் விசாலமாக இருந்து தெருக்களையும் , நடைபாதையையும் விசாலப்படுத்தினால் இன்ஷா அல்லாஹ்! நம்முடைய கப்றும் விசாலமாகும் என்பதை மறவாதீர்.”

மாமாவின் இந்த வரிகள் நம் எல்லோருக்கும் மனதில் ஆழ பதிந்து, வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நடக்க செய்வானாக !! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இங்கே எடுத்தால் அங்கே தொங்க விடுவான்...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) on 01 February 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25300

நமதூரில் முடுக்குச் சண்டை என்பது குழாயடிச் சண்டை போல வாழையடி வாழையாக வம்சாவழி தலைவலி போல் தொடர்ந்து வருவது வழக்கமான ஒன்றாகிப்போயிற்று. பிறர் நிலத்தில் தனக்கும் கேவலம் ஒரு சில அடிகள் பங்கு உண்டு என பலாய் பிடிப்பதும், தம் சொந்த நிலத்தில் வீடு கட்ட நினைப்பவர்கள் சற்று வெள்ளந்தியாக (வெகுளியாக) இருப்பின் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அழைக்கழிக்கச் செய்து இல்லாத முடுக்கையும், இடம்பெறாத சில அடிகளையும் தன் வருங்கால சந்ததியினரின் சௌகரியத்திற்காக பாத்தியப்பட்டவரிடமிருந்து அநியாயமாக அபகரித்து தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் கீழ்த்தரமான மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் பெண்கள் தாம் முண்டியடித்துக் கொண்டு சண்டையிடுவதும், தன் கணவரிடம் இல்லாததைதும் பொல்லாததையும் சொல்லி அண்டை வீட்டுக்காரரோடு புகைமூட்டம் போல பகையை மூட்டி வருகின்றனர். அதுவே பின்னர் கொளுந்து விட்டு எரியும் விரோத நெருப்பாகமாறி மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையும் பொசுக்கி விடுகின்றது. கட்டுரையாளர் எச்சரித்திருப்பது போல இது போன்ற ஈனச்செயல்களைச் செய்வர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்து நிம்மதி என்பதே கிடைக்காகது. மாறாக இவ்வுலகில் இழிவும், வேதனையும் தான் மிஞ்சும். நாளை நியாயதீர்ப்பு நாளில் அபகரிக்கப்பட்ட நிலத்தை அல்லாஹ் அவர்கள் கழுத்தில் கட்டி சுமக்கச் சொல்லும் போது அட! என் கை சேதமே தவறு இழைத்துவிட்டோமே எனக் கதறுவார்கள்.

காலமெல்லாம் வாய் பொத்தி கைகட்டி நின்று விட்டு நிலம் கைமாறிய உடன் வாங்கினவன் இளிச்சவாயன் என்றதும் பக்கத்து வீட்டுக்காரரோடு மல்லுக்கட்ட நினைப்பது ஒருவகை கோழைத்தனமே! சாதக பாதகங்களை மனம் விட்டு பேசி ஒருவருக்கொருவர் அனுசரித்து இரு தரப்பினருக்கும் பயன்படும் விதத்தில் முடிவுகளை எடுப்பது தான் நல்ல முஃமின்களுக்கு அடையாளம். எனவே சில பொறுப்பற்ற பெண்களின் சுய விருப்பு வெறுப்பால் சொல்லித்தரும் கோள்களை குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்புள்ள ஆண்கள் நம்பக்கூடாது. இன்று அக்காள் தங்கைகளுக்குள் நடக்கும் வளைகுடா போர் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்து நாளைக்கே சீர் சினத்தி எனக் கை கோர்த்துக் கொள்வார்கள். இனி ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் சஞ்சலப்படப் போவது ஆண்களாகிய நாம் மட்டுமே! அல்லாஹ் ஃபஸாதுகளில் இருந்து நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்.

ஊர் நடப்புகளை உள்ளதை உள்ளபடி உறுதியான மனதோடு எடுத்துரைத்த N.S.E.மஹ்மூது மாமா அவர்களின் துணிச்சலைப் பாராட்டியே ஆகவேண்டும். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: Koos Aboobacker (Riyadh) on 04 February 2013
IP: 195.*.*.* Germany | Comment Reference Number: 25357

அஸ்ஸலாமு அலைக்கும்...

சமூக நலன் கருதி எழுதப்படும் இது போன்ற பல கட்டுரைகளை, இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டுமே படிக்கும் நிலை இன்னமும் தொடர்கிறது. மற்ற பொது ஜனங்களுக்கு இது போன்ற சமூக சிந்தனை உள்ள கருத்துக்கள் தெரியாமலேயே பொய்விடுகிறது...

பல நபர்கள், இது போன்ற விசயங்கள் தவறு என்று அறியாமலேயே நடந்து கொள்கிறார்கள்.

சமூக நலன் சார்ந்த நல்ல விசயங்களை ஒரு சிலராவது புரிந்து நடந்து கொண்டாலும் அதுவும் நன்மை பயக்கும்தானே? மற்றவர்கள் தங்களை மாற்றிகொள்ளாவிட்டாலும், அவர்களது மனசாட்சியாவது அவர்களை உறுத்துமே?

இது போன்ற கட்டுரைகளை, எழுத்தாளர் ஒப்புதலுடன் நோட்டீஸ் அடித்து ஜும்மா-விலும், பொது மக்கள் கூடும் இடம்களாகிய கடற்கரை போன்ற பகுதிகளிலும் விநியோகித்தால் என்ன?

இதற்கான செலவுகளை பகிர்ந்து கொள்ள நான் தயார், இன்ஷா அல்லாஹ்... மேலும் பல நபர்கள் இந்த எண்ணத்திற்கு துணை வர தயாராக இருப்பார்கள், இன்ஷா அல்லாஹ்....

இதனை ஊரில் செயல்படுத்த என்ன வழி இருக்கிறது?

அன்புடன்... கூஸ். அபூபக்கர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...உயர்ந்த கோபுரங்கள் தாழ்ந்த உள்ளங்கள்
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 16 February 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25546

மஹ்மூத் மாமா அவர்கள் கட்டுரை காலத்தால் அழியாதது என்றாலும் காலம் கடந்தது.

நமதூரில் முடுக்கு பிரச்சினைக்காக கோர்ட்டு படியேறி சொத்து சுகங்களை இழந்தவர்கள், குடும்ப உறவை முறித்தவர்கள். நட்பு வட்டத்தை இழந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் இன்னும் அது தொடர்கதயாகதான் இருக்கிறது. காயல்பட்டணம் முடுக்கு சட்டம் என்று ஒன்று ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் இருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன். அந்த காலத்தில் முடுக்கு விடும்போது இருவீட்டார்களும் மனம் விட்டு பேசி அதை செய்தார்கள். கால போக்கில் வீடுகள் மாளிகைகள் போலவும் தாஜ் மகால்கள் போலவும் அவரவர் வசதிக்கு ஏற்ப கட்ட ஆரம்பித்தபோது, அடுத்தவன் நிலம், நகரமன்ற நிலம் என்ற பாகு பாடுகள் இல்லாமல் கேட்பார் கேள்வி இல்லாமல், இறை அச்சம் இல்லாமல் இப்படி ரோடுகள் ஒடுங்கி போய்விட்டன. இதற்கு மாற்று மருந்து சட்டங்கள் போட்டு தடுக்க முடியாது.

நபிகள் நாயகம் அவர்கள் பேரில் அதிக அன்பு வைத்திருப்பவர்கள் அவர்கள் வழிமுறைகளை பொன்மொழிகளை நடை முறைபடுத்த வேண்டும். அடுத்த வீட்டுக்காரர்களுக்கு வரும் காற்றை தடுக்கும் அளவுக்கு உங்கள் மதில்களை உயரமாக கட்டாதீர்கள் என்ற ஒரு நபிமொழி மட்டும் போதும். நம்மை நெறிப்படுத்த. எனவே நாம் அல்லாஹ்விடம் இப்படிப் பட்டவர்களுக்காக து ஆ செய்வதைவிட வேறுவழி இல்லை.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனபது தான் நிதர்சன உண்மை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved