Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:36:41 AM
திங்கள் | 9 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1957, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0012:1315:3318:0419:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:21Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:52
மறைவு17:59மறைவு00:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0605:3205:58
உச்சி
12:10
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2118:4819:14
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 219
#KOTWEM219
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 26, 2017
பேழைக்குள் அடைபடாத காற்று!

இந்த பக்கம் 4422 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நாகர்கூடல் ஒரு அழகிய குக்கிராமம்! நண்பர்கள் சாம் மேத்யூ & ரஞ்சித்துடன் அண்மையில் அங்கு செல்லும் வாய்ப்பினைப் பெற்றேன்.

சேலம்-தர்மபுரி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, அந்த கிராமத்தை நோக்கி செல்லும் மரம் செறிந்த பாதையானது, இரு புறமும் கட்டிடங்களே இல்லாத அப்பகுதியின் ஒட்டுமொத்த வனப்பினை சற்றும் மறைக்காமல் காட்டிற்று.

ஒரு அமைதியான பள்ளி வளாகத்திற்குள் விதவிதமான நாட்டு மரங்கள். சில மரங்களின் கிளைகளிலோ, பல வண்ணங்களில் கண்ணாடிக் குடுவைகள் உல்லாசமாக ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தன.

இதமான காற்று எங்களை ஆரத்தழுவி முத்தமிட்டுத் திரும்புகிறது!

ஒரு மரக்கிளையில் தொங்கவிடப்பட்டுள்ள உலோகக் கம்பிகளை அந்தக் காற்று சீண்டியபோது; அந்த கம்பிகளுக்கிடையே ஏற்பட்ட செல்லப் பிணக்கினால், ஒரு நுண்ணிய வாள் வீச்சு போன்று எழும்பிய மெல்லிய இசை, அவ்வளாகத்தின் அமைதியை தோற்கடித்துக் கொண்டிருந்தது.



(இந்த வலுவற்ற ஓசையை தவிர்த்து) "பள்ளி வளாகத்தில் ஏன் இத்தனை அமைதி?" – மூளையின் ஒரு ஓரத்தில் தோன்றிய அய்யமானது குரல்வளையை வந்தடைவதற்குள், அந்தப் புதிருக்கு விடையளித்தார் பள்ளியின் தாளாளர் திருமதி மீனாட்சி உமேஷ், "களப்பணிக்காக மாணவர்கள் கிராமத்திற்கு குப்பை அள்ள சென்றுள்ளனர்".

"பள்ளி மாணவர்கள் குப்பை பொறுக்குகிறார்களா? ஆரம்பமே அசத்தலாக இருக்கிறதே!" என வியப்புற்ற எங்களுக்கு, அடுத்த சில மணி நேரங்கள் அற்புதங்கள் நிறைந்த வேறொரு உலகிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது போன்று இருந்தது.

புவிதம் கல்வி மையத்தின் 12 ஏக்கர் வளாகம் பரந்து விரிந்தது; அதைவிட விசாலமானது இப்பள்ளியின் கல்விமுறை!

மாண்டசோரி (Montessori), நயீ தஃலீம் (Nayi Ta’leem; புதிய கல்வி), அங்கக வேளாண்மை (Organic Farming) & அங்கக கட்டிடவியல் (Organic Architecture) ஆகியன முறையே ஒருங்கிணைந்த அழகிய கல்வித் திட்டம் அது!

இப்பள்ளியைப் பற்றிய மேலதிக விபரங்களை அறியும் முன்னர், அதன் கல்விமுறையின் கூறுகளை சுருக்கமாக உள்வாங்கிக் கொள்வோமா?

மாண்டசோரி

தாய்மொழி வழிக் கல்வி, கலப்பு வயது மாணவர்களைக் கொண்ட வகுப்பறைகள், குறிப்பிட்ட வரையறைக்குள் விரும்பியவற்றை கற்கும் விருப்பேற்பு & சிறப்பு உபகரணங்களைக் கொண்டு பயிற்றுவிப்பது என மாணவர்களுக்கு மிக இலகுவான ஒன்றாய் அமைவது மாண்டசோரி கல்விமுறை.

இதனை வடிவமைத்த இத்தாலிய கல்வி சீர்திருத்தவாதி மரியா மாண்டசோரி, நோபல் பரிசுக்காக ஆறு முறை பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நயீ தஃலீம்

நம் தேசப் பிதாவின் கல்விக் கனவு இது. ஆசானுக்கும் மாணவனுக்குமான உள்ளார்ந்த புரிதலின் அவசியத்தை இக்கொள்கை வலியுறுத்துகிறது.

மாணவர்களை ஆக்கப்பூர்வமான உடல் உழைப்பில் ஈடுபடுத்துதல், அந்த உழைப்பைக் கொண்டு பள்ளியும், மாணவர்களுமே பயன்பெறுதல் என தற்சார்பு வாழ்விற்கான விதையை அவர்களின் இதயத்தில் முளையிடச் செய்வது இதன் மைய அச்சாக அமைகிறது.

அங்கக வேளாண்மை

மரபீனி மாற்று விதைகளுக்கும் & செயற்கை இரசாயன உரங்களுக்கும் எதிராக தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி; அதற்கு மாற்றாக, பல இயற்கை வழி உழவாண்மை முறைகளை நமக்கு கற்பித்தவர் கோ.நம்மாழ்வார்.

அவரின் வழிகாட்டுதல்கள் அனைத்தும் இன்று அங்கக வேளாண்மை குறித்த அறிவை வளர்க்கும் கள ஆய்வுக் கல்வியாக கருதப்படுவதில் வியப்பொன்றும் இல்லை.

அங்கக கட்டிடவியல்

கட்டிடங்களும் மூச்சுவிடும் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்தியவர் லாரி பேக்கர். அங்ககக் கட்டிடவியல் என அழைக்கப்படும் ஒரு மரபார்ந்த கட்டிடக்கலையை அவர் அறிமுகம் செய்தார்.

அருகாமையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, சூழலுக்கேற்ப உருவாக்கப்படும் லாரி பேக்கர் பாணி வீடுகள், மாறுபட்ட காட்சியழகோடு திகழ்வது அதன் தனித்தன்மையை பறை சாற்றுகிறது.

--- இந்த நான்கு வலுவான கோட்பாடுகளை அரண்களாக கொண்டு கட்டமைக்கப்பட்டதே புவிதம் கல்வி மையம். ஆனால், கற்றலானது இங்கு வீசும் காற்றிலும் கலந்துள்ளதற்கு இவைகள் மாத்திரம் காரணமல்ல, இப்பள்ளியின் தாளாளரும் அவரின் தாராள மனதும்தான்!

காட்டுப் பள்ளியாக மாறிய வீட்டுப் பள்ளி...

மீனாட்சி உமேஷ் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர். அமைதியைத் தேடியவராய், 1992-ஆம் ஆண்டு தனது பெருநகர சுக வாழ்வைத் துறந்து, குடும்பத்துடன் நாகர்கூடலுக்கு புலம்பெயர்ந்தார்.

தேர்வுகள் மூலம் உண்டாகும் இறுக்கம், பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்த்தும் வகுப்பறை வன்செயல் & கட்டாய மனப்பாடம் ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து தன் பிள்ளைகளை விடுவிப்பதற்காக, அவர்களை சிறு பிராயத்திலிருந்தே பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே நல்லறிவை புகட்டலானார்.

காலப்போக்கில், அக்கிராமத்தின் ஏனைய சிறுவர்கள் பலரும் அங்கே வந்துசேர, தனது பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட வீட்டுப் பள்ளி, 2000-ஆம் ஆண்டில் புவிதமாக உருவெடுத்தது.

கற்றலுக்கான சூழல் சுவர்களுக்கு வெளியேதான் உள்ளது என்பதை அன்று முதல் புவிதம் இப்புவிக்கு உணர்த்த துவங்கியது.

இப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள், முதல் தலைமுறையாகக் கல்வி பெறுவோர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் படையெடுப்பதைக் கண்டு மனம் வருந்துகிறார் மீனாட்சி. இவரின் இந்த கல்விச் சேவையோ - தன்னிறைவடைந்த கிராமங்களை உருவாக்கும் ஒரு மட்டுமீறிய முயற்சியே அன்றி வேறில்லை.

தேர்வெழுதாமல்... தரம் பிரிக்காமல்...

அடவி போன்று காட்சியளித்த அந்த வளாகத்தை பொடிநடையாக வலம் வந்தபடியே, பள்ளியைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்தும் நாங்கள் அறிந்துகொண்டோம்.

பள்ளிக்கூடம் என்றதும் குழந்தைகளில் பலருக்கு தேர்வுகளும், மதிப்பெண்களும்தான் நினைவுக்கு வரும்; ஆனால், களிப்பூட்டிக் கற்பிக்கப்படும் இப்பள்ளியில், இவ்விரண்டிற்குமே இடமில்லாமல் போயிற்று!

தேர்வுகளே இல்லாததால், இங்கு பயிலும் சுமார் 90 மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை; கற்றலுக்கான வாய்ப்பை மாத்திரமே ஏற்படுத்துகின்றனர் ஆசிரியர்கள்.

வேலைக்குச் செல்வதற்கு மட்டும்தான் கல்வி உதவும் என்பதும், தேர்வுக்கு மட்டும்தான் வாசிப்பு அவசியம் என்பதும் நம் பொதுப்புத்தியாக மாறிவிட்ட இன்றைய சூழலில், வாழ்தலின் மெய்ம்மையை மாணாக்கருக்குப் படிப்பிக்கின்றது இந்தச் சிறப்புப் பள்ளி.

வழமையான பள்ளி போன்று மதிப்பெண்கள் மூலம் அவர்களை தரம் பிரிக்காமல், கூட்டு களப் பயிற்சிகளின் மூலம் மனிதத்தன்மையின் பண்புக்கூறுகளைப் பரிசாக அளிக்கின்றனர்.

கதைகளும் கலைகளும்…

கதை சொல்லல், வழக்காடு மன்றம், நாடகம் & பாடல்கள் போன்றவைகளின் மூலம் பள்ளிக் கல்வியை இயல்பானதாகவும், எளிதானதாகவும் மாணவர்களிடம் சேர்க்கின்றனர்.

கதைகளும், பாடல்களும் சிறார்களின் கல்விச் சுமையைப் பெரிதும் எடையிழக்கச் செய்கின்றன. அவை மாணவர்களை கற்பனை வெளிக்கு அழைத்துச் சென்று, வாழ்வின் எதார்த்த விதிகளை மனதிலிறுத்தி, அவர்களின் அறிவுத் தாகத்திற்கு விருந்தாக அமைகிறது.

உதாரணமாக, தாவரத்தையும் கதிரவனையும் கதைக்குள்ளும் பாடல்களிலும் கொண்டுவந்து, ஒளி இயைபாக்கம் (photosynthesis) போன்ற அறிவியல் படிப்பினைகளை அவர்களுக்கு இலகுற அளித்து, தாவர வளர்ச்சிக்கும் மனித வாழ்விற்கும் உள்ள தொடர்பினை மறைசெய்தியாய் வழங்குகின்றனர்.



கைவினைப் பொருட்களை உருவாக்குதல், மீள் சுழற்சி முறையில் காகிதம் உற்பத்தி செய்தல், களிமண் மாதிரிகளை உண்டாக்குதல், தச்சுவேலை, பூத்தையல், ஓவியக்கலை, நெசவு & நூற்பு என பல தற்சார்பு கலைகளை மாணவர்களுக்கு படிப்படியாக அறிமுகம் செய்கின்றனர்.

கற்றலும், கேளிக்கையும் இங்கு இரண்டறக் கலந்திருப்பதை காண்கையில், என்னுள் இருக்கும் குழந்தைக்குப் புத்தார்வம் கிடைத்தது போன்று இருந்தது.

தேங்காய் சிரட்டை & மூங்கிலினால் ஆன அகப்பை, களிமண் பம்பரம், காகித பொம்மை, இலை-தழைகள் & மலர்களில் கிடைக்கும் இயற்கையான வண்ணங்களினால் நிறமேற்றப்பட்ட சித்திரம் என மாணவர்களின் கைவண்ணத்திலே பலவகை பொருட்களும் இங்கு உருவாக்கப்படுகிறது.

அவர்களின் உழைப்பில் உருவான ஒரு கதர் ஆடையை எனது கரங்களில் ஏந்திய பொழுது, காந்திய சிந்தனையான நயீ தஃலீம் இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்ந்தேன். மாணவர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களை பள்ளியே விற்பனை செய்வது, இதற்கு மற்றுமொரு சான்றாக விளங்குகிறது.

உலக பண்பாடுகள் பலவற்றின் அடையாளமாக விளங்கும் நெசவும், நூற்பும், சிறாரின் "மூளை-கண்கள்-கைகள்" ஒருதரப்படுத்துதலை மேம்படுத்துகிறது.

புலன்களின் வாயிலாகப் பயில்வதை ஊக்குவிக்கும் மாண்டசோரி தத்துவமும் இந்த ஒருங்கிணைப்பையே செம்மையாக்குவதால், இது போன்ற கலைகள் யாவும் இந்த (மாண்டசோரி & நயீ தஃலீம் ஆகிய) இரு கல்விக் கோட்பாடுகளை இணைக்கும் பாலமாக திகழ்கின்றன.



வயலும் வாழ்வும்

“தனி மனித விடுதலை தற்சார்பில் இருந்தே துவங்குகிறது,” என அய்யா நம்மாழ்வார் சூழுரைத்தார். தற்சார்பின் உச்சாணிக்கொம்பில் உழவாண்மையே இருப்பதால், உணவின் சாயலில் வேதிப்பொருட்களை உண்பதை வழமையாக்கிய சமூகம் நம்மோடு போகட்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் மீனாட்சி.

மண்புழு உர உற்பத்தி, மண்-நீர்-தாவர பாதுகாப்பு, பாசனம் & மூடாக்கு போன்ற பல வேளாண் யுக்திகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்ட இயற்கைத் தோட்டத்தில், பலவகை தாவரங்களையும், உணவுப்பயிர்களையும் மாணவர்களே நட்டுப் பராமரிக்கின்றனர்.

அவர்களுக்கான உணவை அவர்களின் உழைப்பின் மூலமே பெறுவது, உணவு உற்பத்தியின் மீதான பற்றை மாணவர்களுக்கு வளர்ப்பதோடு, உழவாண்மை எனும் ஒற்றைச் சொல்லிற்குள் ஒளிந்திருக்கும் அறநெறிகளையும் அவர்களுக்கு போதிக்கின்றது.



கட்டிடச் சிற்பி லாரி பேக்கரின் நேரடி சீடர் இந்த மீனாட்சி. பள்ளி வளாகத்திலுள்ள அனைத்துக் கட்டிடங்களும் லாரி பேக்கர் பாணியிலேயே வடிவமைக்கபட்டுள்ளது. குவிமாடத்துடன் கூடிய ஒரு வகுப்பறையிலுள்ள ஒலி அதிர்வுத்தன்மை (reverberation), அக்கட்டிடத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.

மனித வாழ்விடம் இயற்கையோடு இயைந்து இருத்தலை வலியுறுத்தும் இந்தக் கலையை, பயிற்சிகளுடன் கூடிய எளிய கல்வியின் மூலம் அடுத்த சந்ததியினருக்கு எத்தி வைக்கிறார் திருமதி உமேஷ்.

வேண்டாம் எலிப்பந்தயம்!

அவரே வழிகாட்டியாய் மாறிய எங்களின் வளாக உலாவில், இப்பள்ளிக் குறித்த தகவல்களையும் தாண்டி, கல்வி குறித்த அவரின் பரந்த அறிவையும் எங்களிடம் பகிர்ந்துகொண்டார் மீனாட்சி.

"இன்று நடைமுறையிலுள்ள மெக்காலே (Macaulay) கல்விமுறை புத்திசாலிகளை உருவாக்குகிறது. குரங்குகள்கூட புத்திக்கூர்மையுடன்தான் இருக்கின்றன. கல்வியானது சக மனிதர்களையும் இப்புவியையும் நேசிக்கும் நல்லவர்களை உருவாக்க வேண்டும்", என்பது இவரின் தலையாய கூற்று. ஃபின்லாந்தின் கல்விமுறையை உலகின் தலைசிறந்த ஒன்றாக கல்வி ஆர்வலர்கள் பலரும் பாராட்டுகின்றனர். அங்குள்ள ஆயத்த பள்ளிகளில் (preschools), 6 அல்லது 7-ஆம் அகவையில்தான் குழந்தைகள் சேர்க்கப்பட்டு, 12 அல்லது 13-ஆம் அகவையில்தான் (ஆறாம் வகுப்பில்) தேர்வுகளை அறிமுகம் செய்கின்றனர்.

ஆனால் நம் தேசத்திலோ, பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் முன்பே, பிற்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்பதை முடிவெடுத்து, அந்த ஆசையை இரக்கமின்றி அக்குழந்தையிடம் திணித்து, இரண்டரை வயது முதலே எலிப்பந்தயத்திற்கு ஆயத்தமாக்கும் பெற்றோர்களை நாம் பரவலாகக் காண்கிறோம்.

தங்களுக்கே உரித்தான மழலைத்தனம் மழுங்கடிக்கப்பட்டு, சிறு வயதிலேயே அதிகளவு பொதியை முதுகில் சுமக்கும் கழுதைகளாக ஆக்கப்படுகின்றனர்.

பெற்றோர்களின் விருப்பத்திற்காக அடிமைப்படும் குழந்தைகள் ஒரு புறமிருக்க, அவர்களின் சிந்தனைக் கதவை தாழிடும் பணியை இன்றைய பள்ளிகள் பெருமளவு செய்கின்றன.

நூறு விழுக்காடு தேர்ச்சி எனும் இலக்கோடு இயங்கும் இவையோ, அடுத்த ஆண்டின் பாடங்களை முந்தைய ஆண்டிலேயே அறிமுகம் செய்து, அவர்களை இறைச்சிக் கோழிகளாகவே மாற்றுகின்றன.

காற்றைப் போல் கற்றலும் விடுதலையானது; பெருநிறுவனங்களுக்கு வேலையாட்களை சேர்க்க உதவும் இன்றைய கல்விமுறையோ, அதனை பேழைக்குள் அடைத்து சிறைப்பிடிக்க ஆசைப்படுகிறது!

பயணம் எனும் சிறந்த ஆசான்!

சக மனிதர்களது வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும் அறிந்திட முனையும் வழிகளை பயணங்கள் திறக்கின்றன.

மனிதர்களை அறிவதோடு மட்டுப்பட்டுவிடாமல், ஒப்பில்லா இறைவனின் ஒப்பற்ற ஏனைய படைப்புகளையும் அணுஅணுவாய் ரசிக்கும் வாய்ப்பை அளித்து, ஒரு மானுடப் பிறவி தனக்குள் தேங்கிக்கிடக்கும் உள்ளுணர்வுகளை வெளிக்கொணரும் கருவிகளாகவும் பயணங்கள் விளங்குகின்றன.

அவ்வகையில் எனக்கு அமைந்திட்ட ஒரு சிறப்பான பயணத்தைப் பற்றிய எளிய பதிவாகவே இவ்வாக்கம் அமைகிறது!

நம் விழிகளின் முன்னே, புவிதம் நிச்சயமாக ஒரு முன்மாதிரி பள்ளியாய் மிளிர்கின்றது; அதனை உருவாக்கிய மீனாட்சியோ, ஒரு எழுச்சிமிகு கல்விப் போராளியாய் கம்பீரமாகத் தோற்றமளிக்கிறார்.

கட்டற்ற சிந்தனை, தற்சார்பு வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு & மனிதத்தன்மையுடன் கூடிய சமூக அக்கறை ஆகியவற்றை இளவல்களின் நெஞ்சங்களில் மலரச் செய்வதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ள இவரின் தொடர்பு விபரம் கீழே:

திருமதி மீனாட்சி உமேஷ்
புவிதம் கல்வி மையம்
நாகர்கூடல் கிராமம்
தர்மபுரி மாவட்டம்
அஞ்சல் குறியீடு: 636803
இனையதள முகவரி: http://puvidham.in/
மின்னஞ்சல்: puvidham@gmail.com
முகநூல் பக்கம்: https://www.facebook.com/meenakshi.puvidham


பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே புரட்சியை ஏற்படுத்திய இந்த புவிதம் கல்வி மையம் போன்று, நமதூரிலும் ஒரு மாற்றுப் பள்ளி உருவாகிட வேண்டும்தான்; ஆனால், அந்த மாற்றம் ஒற்றை இரவிலே சாத்தியமில்லை என்றாலும், குறைந்தது பாடப் புத்தகங்களுக்குள் சிக்குண்டு - புழுக்களாய்க் கிடக்கும் நம் பிள்ளைகளை மீட்கும் சிற்சிறு பணிகளையாவது இன்றே செய்திடல் வேண்டும்.

மாணவர்களின் மனதிற்குப் புத்துணர்ச்சியூட்டும் வகையில், பல மாற்றுக் கல்வி சார்ந்த முகாம்களை நகரில் நடத்தி, தற்சார்புக் கலைகளை அறிமுகம் செய்து, வாழ்தலுக்கும் - பிழைத்தலுக்குமான வேறுபாடுகளை உணரச் செய்வோமாக!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஆஹா!
posted by: Raiz (Sydney) on 27 February 2017
IP: 121.*.*.* Australia | Comment Reference Number: 45254

ஆஹா ஒவ்வொரு வரிகளை படிக்கும் போதும் உம்மை தீண்டிய அதே தென்றல் எம்மையும் மெல்ல வருடி செல்லுகின்றது!நாமும் உம்மோடு இணைய வேண்டும் என்ற ஆவல் எழுகின்றது!

தொடர்ந்து எழுதுங்கள் , பர பரப்பான Machine போன்ற வாழ்க்கையில் உழன்று , சிக்கி கிடக்கும் எங்களுக்கு இயற்கையை ,அதன் மாண்பை அடிக்கடி நினைவு கூறுங்கள் , நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: முத்துவாப்பா (அல் கோபர்) on 27 February 2017
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45256

மண்ணறை செல்லும் வரை
மண் அறையிலேயே
மின்சாரத்தோடு
சம்சாரம் நடத்தும்
எம் போன்றோருக்கு
நிம் போன்றோரின்
ஆக்கங்கள் எம் மனதின்
தேக்கங்கள் - தொடரட்டும்
மண்வாசனை .......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...கனவுக் கல்வி
posted by: சித்தி லரீஃபா (Chennai) on 27 February 2017
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45258

மா ஷா அல்லாஹ்... கூடவே கல்விச் சுற்றுலா சென்றது போன்றதொரு உணர்வைத் தந்தது எழுத்தும், படங்களும்.

அனைத்தையும் அறுத்தெறிந்து விட்டு இது போன்ற கல்விச் சூழலில் அடைக்கலமாகி விடலாமா என்று மனம் ஆசைப் படுகிறதுதான். ஆனால் ஊறிப் போன பொதுப்புத்தி கால்களைக் கட்டிப்போடுகிறதே...

பூனைக்கு யாராவது மணி கட்ட மாட்டார்களா...? என்று மனம் ஏங்குகிறது.

இன் ஷா அல்லாஹ்... மாற்றங்கள் வரும்... மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதது.

கல்வியில் மாற்று வழிகளைத் தேடும் உங்கள் சிந்தனைகளின் செயலாக்கத்திற்கான முயற்சிகளை எதிர்காலத்தில் நீங்களே முன்னெடுத்துச் செய்யுங்கள்...

உங்களின் அழகிய எழுத்தும், எண்ணங்களும் செயலாக்கங்களை நோக்கி நகரட்டும். இன் ஷா அல்லாஹ். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பின்னூட்டம்
posted by: கவுஸ் முஹம்மது (ஐக்கிய அரபு அமீரகம்) on 28 February 2017
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45259

மாற்றம் என்பது சொல் அல்ல, செயல்

புத்திக்கூர்மையை மட்டுமே போதிக்கும் தற்போதைய கல்விமுறை, பொருளாதார தேடலுக்காக மட்டுமே பிள்ளைகளை படிக்க வைக்கும் என் போன்றோர்கள் மாற்றத்தை எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

உண்மையில் இப்படி ஒரு பாடத்திட்டம் உள்ளது என்பதே நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை (அறிமுகம் செய்த என் நண்பனுக்கு நன்றி),

பொருளாதார பலமும், மனித வளமும், பயிற்ச்சியும் இந்த உன்னத மாற்றத்தை முன்னெடுக்க தேவை, அது வரும் பட்சத்தில் நான் என் பிள்ளையை சேரக்கத் தயாராக உள்ளேன். அதற்கு தேவையான எல்லா உதவிகளையும் என்னால் இயன்ற அளவு செய்யவும் (இறைவன் நாடினால்) தயார்.

நமது ஊரில் கல்லூரி படிப்பை முடித்த பெண்கள் பெரும்பாலும் அதன் பின் மேற்படிப்பை தொடராத நிலையில் திருமணம் ஆவதும் அதன் பின் அவர்களின் சிந்தனை குறுகிய வட்டத்தினுள் சுருங்கி விடுவதும் இயல்பே, அவர்களில் விருப்பமுள்ள பெண்களுக்கு பயிற்சியை வழங்கி இதனை செய்யலாம்,

அனைத்து சமுதாய மக்களுக்குமான பள்ளியாக அது செயல்படவேண்டும்.

மாற்றத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் கல்விக்கு மாற்று ஏதும் இல்லை.

இதை பற்றிய ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு அதனை ஊர் பள்ளிவாயில்கள், சங்கங்கள் மற்றும் இணையத்தின் வாயிலாக அறிமுகம் செய்யலாம்.

முடியும் பட்சத்தில் திருமதி. மீனாட்சி அவர்களை விருந்தினராக கொண்டு விளக்க பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யலாம்.

மாற்று கருத்து ஏதுமின்றி நிச்சயமாக இது நல்ல திட்டம்தான் ஆனால் கல்வியை வியாபாரம் செய்வோர் இதனை எதிர்ப்பார்கள், வலுவான மற்றும் நேரடி சாட்சியங்களுடன் பரப்புரையை முன்னெடுக்க வேண்டும்.

10 குழந்தைகள் மட்டுமே சேர்ந்தாலும் தளரக்கூடாது. (அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோர் நிச்சயமாக இதனை ஆதரிப்பர்).

புள்ளியில் இருந்து தொடங்க வேண்டிய நிலையில் உள்ளோம். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. காலத்திற்கேற்ற கட்டுரை!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 28 February 2017
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45260

கட்டுரை மிக மிக அருமை! இதுகுறித்து நாம் நேரில் பேசிக்கொண்டபோது கூட இந்தளவுக்கு என்னை ஈர்க்கவில்லை. தற்போது உன் எழுத்துக்கள் அதைச் செய்துள்ளன.

இப்படியொரு பள்ளி நமதூரில் அமையுமானால்...

அரசுப் பள்ளியைப் போன்று அதில் சேர்க்கையும், கல்வியும் இலகுவானால்...

எனக்கு எத்தனை குழந்தைகளை இறைவன் தந்தாலும், அவையனைத்தும் இப்பள்ளியின் முன்னாள் - இந்நாள் - வருங்கால மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பர் - இன்ஷாஅல்லாஹ்!

இதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை! இதுபோன்று சொல்லவும் நானறிய எவருமில்லை!!

(ஒருவேளை யாரும் இருந்தால், இப்போதே அட்மிஷன் போட்டுக்கொள்ளலாம்!!!)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இலகுவான கல்வியென்பது இயற்கையான கல்வியே
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 28 February 2017
IP: 37.*.*.* | Comment Reference Number: 45262

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

இலகுவான கல்வியென்பது இயற்கையான கல்வியே அதைக்கொண்டுவரவேண்டுமென்றால் இருகி,இயந்திரமயமாகிவிட்ட மனதை எண்ணெய்கொண்டு ஓவராயிலிங் செய்துதான் மீட்டெடுக்கவேண்டும் மென்மையான அணுகுமுறையே மேன்மையானது என்பதை தான்கற்றதை திருமதி மீனாட்சி உமேஷ் அவர்கள் தீர்க்கமாக நிரூபித்துவருகிறார்கள் அதில்வெற்றியும் கண்டுள்ளார்

ஒரு சகோதரர் அந்த மீனாட்சி அம்மையாரை நமது ஊருக்கு அழைத்துவந்து தெளிவுதரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் வரவேற்கத்தக்க ஒருபின்னூட்டம் வாழ்த்துக்கள் சகோ கவுஸ் முஹம்மது அவர்களே

நீங்கள் இப்படி ஒருபள்ளியை விரைவித்துவாக்கினால் அநேகர்கள் தந்துள்ள வரவேற்பைக்கொடுப்பதோடு இன்ஷா அல்லாஹ் எனது மக்களை முதலாவதாக இணைத்துக்கொள்ளுங்கள் அல்லாஹ் துணைவருவான்

இன்னுமொரு அணுகுமுறையை எடுத்துவைக்க விரும்புகிறேன் அதாவது முகநூலில் இன்று அதிகமாக சிறார்கள் வாட்சாப் முகம்புதைத்துவருகிறார்கள் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் அவர்களுக்கும் நட்பு விடுப்பு கொடுத்து அவர்களோடு நண்பராகி உங்கள் கருத்தை எளிமையாக எடுத்துக்கூறி இக்கல்விமுறைக்கு எழுச்சித்தரலாம் உந்துகோலாக இம்முயற்சியைச்செய்யலாம் இன்ஷா அல்லாஹ்

நன்றி ஆசிரியர் வர்களே வாழ்த்துக்கள் மாஷா அல்லாஹ் மிக,மிக அருமையான மனிதத்தோடு தொடர்புதரும் கட்டுரை பலவார்த்தைகள் அழகாக பொருளுடன் புரியத்தந்திருக்கிறீர்கள் ஜஃஜாக்கல்லாஹ் ஹைர் உங்களது முயற்சியில் பசுமைமேலோங்கிப்படர்ந்து மனதின் சுமைகள் குறைய வாழ்த்திப்பிரார்த்திக்கிறேன்

இறைவன் மிகப்பெரியவன்

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...மத்ரஸாவிலும்
posted by: Bukhary (Abu dhabi) on 28 February 2017
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45264

ஜஸாக்கல்லாஹூ ஹைர் நீங்கள் இப்படியும் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது அறியப்படுத்தியதற்கு. என்னால் படிக்க முடியவில்லை அதற்கு நமதூரில் வாய்ப்பும் இல்லை ஆனால் என் மகனுக்கேனும் வாய்க்கும் என நம்புகிறேன் இன்ஷாஅல்லாஹ்

இது போன்ற தற்சார்பு பள்ளி நல்நம்மார்க்க போதனையோடு கூடி இருந்தால் மிக சிறப்பு. ஆலிம்கள் இமாம்களாகி(இமாம் என்றால் தலைவர் ஆனால் இன்று நிலைமையோ) கை நீட்டி ஹதியா வாங்கும் நிலைதான் இதைமாற்ற ஆலிம் மத்ரஸாக்கள் இக்கல்வி முறையை கொண்டால் தற்சார்பு பொருளாதாரத்தில் உயர்ந்து நிமிர்ந்து நேர்மையான முறையில் ஷரீஅத்தை சொல்ல முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இப்பள்ளி எப்ப வரும்
posted by: Bukhary (Abu dhabi) on 01 March 2017
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45268

மேலே எல்லோரும் தன் மக்களை சேர்க்க இசைந்துள்ளோம். இனியும் பலர் இதே எண்ணத்திலிருப்பார்கள் பள்ளி மட்டும் தான் பாக்கி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: Shahul Hameed BS (Hong Kong) on 29 March 2017
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 45389

Masha Allaah amazing article, well written with fluent style. Certainly we should put out steps forward to make this dream come true. Insha Allaah we support this effort certainly. May Allaah accept and help in this.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved