Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:19:50 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 216
#KOTWEM216
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 29, 2017
தமிழால் ஒன்றிணைந்தோம்!

இந்த பக்கம் 3167 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தென்பொதிகை பிறந்த மொழி...
தென்பாண்டி வளர்த்த மொழி...
வடமொழியடைத்த மாபெரும் கதவினை
திடமுடன் உடைத்த எம்மொழி செந்தமிழ்...

மும்மையை உணர்த்தி முப்பொருள் காட்டும்...
செம்மை வாய்ந்த செம்மொழி என் தமிழ்...
தத்துவம் யாவும் தமிழ் மொழி உணர்த்தலால்.
.. சத்தியம் செய்வேன் என் தாய்மொழி காப்பேன்.

பள்ளிப்பருவ காலங்களில் நடந்த பேச்சுப் போட்டிகளுக்காக ஏற்ற இறக்கங்களோடும், உணர்ச்சிப் பெருக்கோடும், இப்பாடலைக் கொண்டு என்னுரையை ஆரம்பித்தபோது, உடல் சிலிர்க்க, உள்ளம் உருக என்னையறியாமல் ஒரு தமிழுணர்வு என்னுள் ஊடுருவியது, உற்சாகத்தைத் தந்தது.... அதே உணர்வை என் பிள்ளைகளின் உரையில் இன்றும் நான் உணர முடிவதற்குக் காரணம் ஊட்டி வளர்த்த தமிழ்ப்பால் என்பதுதான் உண்மை.

தமிழார்வலர்கள் எல்லோரையும் போல பாரதியை நேசித்தேன்... பாரதிதாசனை நேசித்தேன் என்று கூறப் போவதில்லை. ஆனால் பாரதியும், பாரதிதாசனும் சொன்ன சில வரிகளை வெகுவாக நேசித்தேன். கலைஞர் முதல் வைரமுத்து வரை தமிழை இரசித்துப் படித்தேன். பெண்ணடிமைத் தனத்தைப் போட்டுத் தாக்கிய பாரதியை இஸ்லாமின் பெண்ணுரிமை பேசும்போதெல்லாம் வழித்துணைக்கு அழைத்துக் கொண்டேன்....

அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் புசிப்பவன் உண்மையான இறை நம்பிக்கையாளன் அல்ல...” என்று மாநபியின் மனிதநேயத்தைப் பேசும்போதெல்லாம் “தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியின் வரிகளையும் கடன் வாங்கிக் கொண்டேன்.

“மனிதர்களே...! நீங்கள் அனைவரும் ஆதமிடமிருந்து தோன்றியவர்களே...! என்று இஸ்லாம் கூறும் சமத்துவத்திற்கு சாட்சியாக...
“தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்...
தொல்லுலக மாந்தரெல்லாம் ஒன்றேஎன்னும்...
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் ஆங்கே...
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே...
என்ற பாரதிதாசனை என் எழுத்துக்களில் எடுத்துக் கொண்டேன்.

கண்ணனையும், மீராவையும் காதலர்களாக வரித்துக் கொண்ட பாரதியைக் கண்டுக் கொள்ளவில்லை என்றாலும்...
“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே... வெள்ளப்
பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே...”
என்ற பாரதி நம் தேசப்பற்றுக்கு வித்திட்டான்.

வேதியராயினுமொன்றே- அன்றி
வேறு குலத்தவராயினும்- ஒன்றே
ஈனப் பறையர்களேனும்-
அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவரன்றோ....

என்ற பாரதியின் தமிழ் பள்ளிப்பருவங்களிலேயே எங்களை பரவசப்படுத்தியது.

இப்படி முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்கும் தொண்மைத் தமிழ்... எங்கள் ஊரோடும், உணர்வோடும், ஒன்றாய்க் கலந்ததற்குக் காரணம்... காலங்காலமாய் எம்முள் ஊடுருவி நிற்கும் தமிழ் வழி மரபா... அல்லது எங்களயுமறியாமலே எம்முடன் ஒன்றிவிட்ட திராவிட உணர்வா என்பது எந்த இஸ்லாமியனும் அறியாத ஒன்று...

‘ஜலம்’ என்று சொல்லி தமிழைக் கொல்லும் ஆரியர்களின் முன்னே ‘தண்ணீர்’ என்று அழகு தமிழ் பேசியவன் தமிழ் முஸ்லிம். தமிழ்நாடே சாதம் என்று தமிழ் பேசும்போது, ‘சோழநாடு சோறுடைத்து’ என்று தெள்ளுத் தமிழில் சோறு என்றவன் முஸ்லிம் தமிழன். வலந்து, வட்டி, கிண்ணம், ஆணம், பசியாறுதல், என்று தனித்தமிழ்ச் சொற்கள் இன்றும் காயல்பட்டினத்தில் பிறந்த முஸ்லிம்களான எங்கள் வாழ்வின் புழக்கத்திலும், வழக்கத்திலும் உள்ளது பிரிக்க முடியாதது... தமிழும், தமிழக முஸ்லிம்களும் என்பதற்கான அடையாளம்.

தமிழ் வளர்த்த எங்கள் புலவர்களையும், அவர்கள் இயற்றிய காவியங்களையும், வரலாறு இன்றும் தம் கரங்களில் ஏந்தியுள்ளது. அந்நியர்களை எதிர்க்கிறோம் என்ற பெயரிலே ஆங்கிலத்தை எதிர்த்த எங்கள் அப்பாவித்தனத்தால்தான் அரசாங்க உயர் பதவிகளையெல்லாம் ஆசையாசையாக ஆரியர்களுக்கே தாரை வார்த்தோம்.

ஆங்கிலம் பேசத் தெரியாது அவமானப்பட்ட தருணங்களிலெல்லாம் அழகு தமிழ் பேசியே அனைவரையும் அசர வைத்தோம்.

அரபும், தமிழும் கலந்த ‘உம்மா’ என்ற வார்த்தையால் தாயை அழைத்தோமேயன்றி, ‘மம்மி’ என்றழைத்து எங்கள் மொழியை நாங்கள் ‘டம்மி’யாக்கிடவில்லை...

தோழி என்றழைக்கும் சங்ககாலத் தமிழ் இன்றும் எம் பிள்ளைகளிடம் பேச்சு வழக்கில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்.... தாயின் தோழியை ‘தோழிமா’ என்றும், தந்தையின் தோழனை ‘தோழாப்பா’ என்றும் அழைக்கும் அழகு தமிழ் முஸ்லிம்களிடம் அல்லாது வேறு எங்கேனுமுள்ளதென்று யாராலும் சுட்டிக்காட்டிட முடியுமா...?

தமிழ் உணர்வால் நாங்கள் செய்த மிகப் பெரிய தவறு - அரபு மொழியை நன்றாக வாசிக்கவும், எழுதவும் தெரிந்த நாங்கள் அதன் பொருளை அறியாமலேயே வளர்ந்துவிட்டோம். அ’, ஆ,வைப் படிக்கும் போதே அரபு எழுத்தான ‘அலிப்; பா’ வையும் அறிந்தாலும், இடையில் வந்த ஆங்கிலம் எங்களை ஆட்கொண்ட அளவுக்குக் கூட அரபு எங்களை ஆட்கொள்ளவில்லை என்பதே உண்மை... ஆமாம்... அரபியிலே சேர்ந்தாற்போல இரண்டு வாக்கியங்கள் பேசவும் எங்களால் முடியாது என்பதுதான் எங்கள் தாய்மொழிக்காக நாங்கள் கொடுத்த மிகப்பெரிய விலை...

எல்லை தாண்டி எந்த மாநிலம் சென்றாலும், தலையில் முக்காடும், குல்லாவும் போட்டுக் கொண்டு எத்தனை இஸ்லாமியர்கள் எங்களைக் கடந்துச் சென்றாலும்... அந்நியக் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட ஆடுகள் போலத்தான் மலங்க மலங்க விழிப்போமே தவிர... ஓடிவந்து ஒட்டி உறவாட முடியவில்லை என்பதுதான் எதார்த்தம். அதேநேரம் இன்பத் தமிழ் எங்கிருந்தேனும் எங்கள் காதுகளில் பாய்ந்தால் தாயைக் கண்ட சேயாய் முகம் மலரத் திரும்புகிறோமே...? அங்கே நாங்கள் தமிழால்தானே ஒன்றிணைகிறோம்.

எல்லை தாண்டிய நாடுகள் என்றால் கேட்கவே வேண்டாம்.... தமிழ்க் குரல் கேட்கும் திசைகள் நோக்கி அகம் மலர, உறவு வளர... அங்கே எங்கள் தமிழுணர்வின் அழுத்தத்தை அயல்நாடுகளிலே அன்பால் ஒன்றிணைந்த தமிழ் நெஞ்சங்களிடம் கேளுங்கள்... அவர்களின் அனுபவங்கள் ஆயிரம் கதைகள் சொல்லும்.

இங்கு மட்டும் என்ன... சென்னையில் எத்தனை பெரிய பெரிய கடைகள் இருந்தாலும், ஆறுமுகநேரி நாடாரும், உடன்குடி அண்ணாச்சியும் வைத்திருக்கும் கடைகளை நோக்கி நம் கால்களை நகர்த்தும் உணர்வுக்கு என்ன பெயர்...?

அந்த உணர்வுதான் இஸ்லாமியர்களான எங்களை மெரினாவை நோக்கிக் கடத்திச் சென்றது. ‘ஜல்லிக்கட்டை’ நாங்கள் இதுவரை நேரில் கண்டது கூட கிடையாது என்றாலும், ‘தமிழண்டா...’ என்ற ஒற்றைச் சொல் எங்களை ஒன்றிணைத்தது...



ஜல்லிக்கட்டை ஒரு குறியீடாகக் கொண்டு, ஒடுக்கப்பட்ட தமிழர்களின் ஒட்டுமொத்த உள்ளக் குமுறல்களையும், ‘அல்லாஹு அக்பர்’ என்ற ஒருமித்த குரலால் வலுப்படுத்தினோம். கடல் புரட்சியின்போது அலைகளை மீறியும் ஒலித்த எங்கள் தமிழ்க் காளைகளின் உறுதிமிக்கக் குரல் எங்கள் உள்ளத்தை உருக்கியதில் வியப்பேதுமில்லை... எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு தோள்கொடுக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிட நாங்கள் தயாராக இல்லை.

“இமயம் வாழும் ஒருவன் இருமினால்...
குமரி வாழ்வோன் மருந்து கொண்டோடுவான்...”
என்ற உணர்வோடு எம் தமிழினத்திற்கு உணவு கொண்டோடினோம். ஏன் உணவளித்தாய்...? என்று இன்று எம் தாய்ப்பாலை சந்தேகிக்கிறார்கள் உணவிலும் அரசியல் செய்யும் அறமற்றவர்கள்...,

“கால் வயிற்றுக் கஞ்சிக்கு இவன்
காலமெல்லாம் போராட்டம்...
இவனிங்கு இல்லையென்றால்
காணி நிலமெல்லாம் நின்று போகும் ஏரோட்டம்...”
என்று எங்களின் சோற்றுக்காக சேற்றில் நிற்கும் உழைப்பாளிகளின் உயர்வுக்காக உணர்வோடு ஒன்றிணைந்தோம்....

உசாமா பின் லேடன் என்று முடிந்து போன கதையை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். கூலிக்கு மாரடிக்கும் கூட்டமல்ல இவர்கள்... பயிரை மேயும் வேலிகளுக்கு தாங்கள் யார் என்று காட்ட வந்தவர்கள்.... இவர்களது வேள்வித் தீயில் எழுப்பப்பட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் எங்களுக்காகவும் சேர்த்துத்தான் என்பதால் தோளோடு தோள் நின்று போராடினோம்...

தொழுகை நேரம் வந்ததும், எம் தொப்புள்கொடி உறவுகள் சூழ நிற்க நிம்மதியாய் நின்று தொழுதோம்... இன்று... தோல்வி பயத்தில்.... தொழுகை ஏன் நடத்தினீர்கள்...? என்று தங்களையே துகிலுரித்துக் கொண்டு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளுகிறார்கள்.

கோக்குக்கும், பெப்சிக்கும் எதிராக குரல் எழுப்பினால்... அவன் பாகிஸ்தான் ஆதரவாளனாம்!

ஆளுங்கட்சியின் கையாலாகத்தனத்தைச் சுட்டிக்காட்டினால்... அவர்கள் கைக்கூலிகளாம்....

குனியக் குனியக் குட்டும் மத்திய அரசின் கொட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கினால்.... அவர்கள் தேசத்துரோகிகளாம்...

சமுக விரோதிகளாம். எட்டப்பர்கள் கூட்டத்திற்கு தன்னைப் போல்தான் பிறரையும் நினைக்கத் தோன்றுகிறது.

இருண்டு கிடக்கும் நீண்ட இரவு விடியாதா... என்று ஏங்கிக் கிடந்த இலட்சோப இலட்சம் உள்ளங்களுக்குள் அக்கினிக் குஞ்சாய் அமிழ்ந்துக் கிடந்த ஓர் ஆத்திரம்...சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு மக்களின் போராட்ட உணர்வுகள் மழுங்கி விட்டதா என்ற ஆதங்கம்... இவற்றுக்கெல்லாம் முடிவுரையாக பாரதியின் ரெளத்திரம் பழகி வெளிப்பட்ட இளைஞர்களின் தன்னெழுச்சியால் அடங்கிக் கிடந்த அக்கினிக்குஞ்சுகள் ஆங்கோர் பொந்திடை வைக்கப்பட்டது.

“ஒளி படைத்த கண்ணினாய் வா..! வா...!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா..! வா...!”
என்று கடல் ஆர்ப்பரித்து வரவேற்றது.

“இதோ என் தமிழன் விழித்தெழுந்தான்...”
எனத் தமிழ்க்கடல் உச்சி முகர்ந்து வாழ்த்தியது....

“நான் பெற்ற பிள்ளைகள்...
என் உடன் பிறவா சகோதரர்கள்...”
என்ற தாய்க்கடல்....

“வாடப்பலப் புரிந்து வாழ்வை விழலாக்கும்
மூடப்பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும்....
மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
ஈடற்ற தோளா... இளந்தோளா...”
என்று தோள்தட்டி வரவேற்றது.

அகிம்சை வழியில் அறப்போராட்டமா...?
அகிலமே உற்றுக் கவனிக்கிறதே...??
அதுவும் அடங்க மறுக்கும் இந்த வயதிலா...???

ஆகாது... நம் ஆட்சிக்கு ஆகாது... என்று நினைத்த ஆட்சியாளர்கள்... கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்க அந்நியர்களிடம் துடியாய்த் துடித்தவர்கள்... மண்ணிலன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை இழந்தவர்கள்...

அஞ்சாது... கண் துஞ்சாது... அறவழியில் போராடிய அக்கினிக் குஞ்சுகளை... அடக்குகிறோம் என்ற பெயரிலே... ஏவல்துறையை ஏவியதன் விளைவு... வெந்து தழன்றது காடு... தமிழ் நாடு... இதில் குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லை... மாணவர்களுக்கும், மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும், சமூகவிரோதப் பட்டம் கட்டப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள். அடித்து நொறுக்கப்பட்டார்கள். வழக்கம்போல் இஸ்லாமியர்கள் கொச்சைப் படுத்தப்பட்டார்கள்.

ஆட்சியாளர்கள் வைத்த தீ வேண்டுமானால் அணைந்திருக்கலாம்.... ஆனால் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் மூண்ட தமிழ்த்தீ நீறு பூத்த நெருப்பாக இன்னமும் அதிகமாக கனன்றுக் கொண்டிருக்கிறது...

வீணர்களைக் கண்டு பயந்து வீழ்வோமென்று நினைத்தாயோ....?

அடக்குமுறைகளைக் கண்டு அடுத்த எழுச்சி அணிதிரளாது என்று எண்ணினாயோ....??

இனி அநியாயங்களைக் கண்டால் அடங்க மறுப்போம்...
ரெளத்திரம் பழகுவோம்...

இந்துவாக இருந்தாலும்
கிறிஸ்துவனாக இருந்தாலும்
முஸ்லிமாக இருந்தாலும்
மனிதனாக இருப்போம்...

தமிழனாய் நம் இருப்பை உணர்த்துவோம்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அருமையிலும் அருமை!
posted by: mymoon (kayalpatnam) on 30 January 2017
IP: 27.*.*.* India | Comment Reference Number: 45173

கட்டுரை அருமையிலும் அருமை!

அன்பின் சகோதரி ஒட்டுமொத்த பேரின் மனதி் உள்ளதை எழுதியது போல் உள்ளது. வார்த்தைகள் ஒவ்வொன்றும் உணர்வூட்டும் விதமாக இருக்கிறது. எங்கு சென்றாலும் முஸ்லிம் என்றாலும் தமிழனே! தாய்மொழி பாசத்தினால் ஆங்கிலம் கற்க மறந்தோம் என்பது எவ்வளவோ உண்மை!

இந்த அக்கறை அரபி மீதும் இல்லாமல் போச்சுதான்! யார் என்ன சொன்னாலும் நம் உணர்வு தமிழ்தான்னு ஆணித்தரமா சொல்லிட்டீங்க! வாழ்த்துக்கள்!!

இதுபோல நிறைய அழகிய பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வல்ல இறைவன் துணை புரிவானாக, ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சொற்பொங்கல்!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 30 January 2017
IP: 180.*.*.* India | Comment Reference Number: 45174

பொங்கும் பெருவெள்ளமாய், தங்குதடையின்றி தமிழ் உணர்வு மழையாய்ப் பொழிந்துள்ளது!

சகோதரியின் வழமையான கட்டுரைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டுள்ளதாகவே நான் உணர்கிறேன். மற்ற கட்டுரைகளெல்லாம் - அந்தந்தக் காலச் சூழலுக்கேற்ப உருவான சிந்தனைகளின் வெளிப்பாடாக இருந்திருக்க, இதுவோ உணர்வுப் பெருக்கால் தானாக தட்டச்சானது போல் தெரிகிறது.

பேச்சுப் போட்டியில் முதற்பரிசுக்குத் தகுதியான எட்டாம் வகுப்பு மாணவி ஓங்கி ஒலிப்பது போலுள்ளது வாசகங்கள்!

முந்தைய கருத்தில் ஒரு சகோதரி சொன்னது போல, பலரது எண்ணங்களில் உள்ளதை அனைவர் சார்பாகவும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!

தொடரட்டும் தங்கள் எழுத்துச் சேவை!

இதே உணர்வின் வெளிப்பாட்டால்தான், காயல்பட்டினத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த போராட்டப் பந்தலில் (எனக்குள்ள சில அலுவல்களுக்கிடையிலும்) 4 நாட்களிலும் என்னால் இயன்றளவுக்கு மாணவர்கள் - இளைஞர்களுடன் அமர முடிந்தது.

நிறைவு நாள் போராட்டத்தின் நிறைவில் நள்ளிரவின் விளிம்பில் - அனைவரும் கருத்துரையாற்றிய வரிசையில் எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“அன்பார்ந்த சகோதரர்களே...!

ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று இருந்துவிட்டால் இந்தப் போராட்டம் பொருளற்றதாகிவிடும். எனவே, இந்த சங்கமத்தை தமிழர் என்ற அடிப்படையில் நமது - நமதூரினது - நம் நாட்டினது மேம்பாட்டிற்காக ஏதோ ஒரு வகையில் சிந்தித்தவர்களாக - தெளிவான முடிவோடு இங்கிருந்து நாம் கலைந்திட வேண்டும்.

அந்த வகையில், இப்பந்தலில் இருப்பவர்களேனும் இனி வருங்காலங்களில் பன்னாட்டுக் குளிர்பானங்கள், உள்நாட்டு உணவுப் பொருட்களின் சந்தையை நாசமாக்கும் வகையிலான பன்னாட்டு வரவுகள் அனைத்தையும் முற்றிலுமாகத் தவிர்த்திட உறுதி எடுப்போம்!

யாரும் அழைக்காத நிலையில் - உணர்வு மேலீட்டால் கடந்த 4 நாட்களாக நாம் இப்பந்தலில் இரண்டறக் கலந்துள்ளோம். நம்மில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், மதங்களை நம்பாதோர் என அனைவரும் உள்ளோம். இத்தனை மத - ஜாதி வேறுபாடுகளுக்கிடையில் நம்மை இணைத்துள்ளது தமிழன் என்ற உணர்வு ஒன்றுதான்!

இந்த உணர்வு போராட்டம் முடிந்த பின்பும் தொடர வேண்டும்.

குறிப்பாக, (இறைவன் காப்பாற்ற வேண்டும்!) இந்த ஊரில் இரு சாராருக்கிடையில் ஒரு பிரச்சினை உருவாகிறது என்றால் - அதைத் தூண்டுபவர் ஒருபோதும் களத்தில் நிற்க மாட்டார். மாறாக, உங்களுக்கெதிராக எம்மையும், எங்களுக்கெதிராக உங்களையும்தான் தூண்டி விடுவார்கள். நாமும் அறிவுக்கு வேலை கொடுக்காமல், உணர்ச்சிக்கு அடிமையாகி நமக்குள் பகைத்துக்கொள்வோம். நமதூரில் இது அடிக்கடி இல்லை என்றாலும், ஓரிரு முறை இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க இயலாது.

இனி இந்நிலை தொடரக் கூடாது. அநியாயமாக நம்மில் ஒரு சாரார் பாதிக்கப்பட்டால், மறு சாரார் திரண்டு வந்து பாதுகாப்பு அரணாக நிற்க வேண்டும். அவ்வாறு நாம் இருந்துவிட்டால், நம்மை எந்தத் தீய சக்திகளும் பிரிக்க இயலாது...

மற்றொன்று: எந்த ஒரு பொருளையும் - அது நமக்குத் தேவையா என்று முதலில் சிந்தித்து முடிவெடுத்த பின்னரே அதைப் பயன்படுத்த முயல வேண்டும். பார்ப்பது எல்லாம் வேண்டும் என்று ஆசைப்பட்டவன் வாழ்க்கையில் தோற்றுப் போவான்.

இயன்ற வரை நமக்குத் தேவையான பொருட்களை - எடுத்த எடுப்பிலேயே கடைக்குச் சென்று வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, நம் உழைப்பைக் கொண்டே அவற்றைப் பெற இயலுமா என்று சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக, ஒரு தக்காளியோ அல்லது கத்தரிக்காயோ வேண்டுமென்றால், அதை ஏன் நம் வீட்டு மாடியிலேனும் பயிரிடக் கூடாது என்று நாம் சிந்திக்க வேண்டும்.

இதுபோன்ற சிந்தனைகள் நம்மை ஆட்கொண்டால், நம் வாழ்வு சிறக்கும்! நம் பொருளாதாரம் தேவையற்ற செலவுகளிலிருந்து பாதுகாக்கப்படும். நம் விருப்பப் படி வாழ முடியும்! எந்தவொரு சூழலும் நம் வாழ்வைக் கடுகளவும் பாதிக்க முடியாது!”

இவ்வாறு பேசினேன். அதை, பந்தலிலிருந்த அனைத்து சமயத்து இளைஞர்களும், மாணவர்களும் மனதார ஏற்று, அதை வழிமொழிந்தும் பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:... தமிழுக்கே பெருமை
posted by: சுமையா (சென்னை) on 30 January 2017
IP: 168.*.*.* | Comment Reference Number: 45175

உங்கள் எழுத்து தமிழச்சி என்ற உணர்வை மேலும் மேலும் தூண்டுகிறது. தமிழன் என்பதில் பெருமைக் கொள்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: சாளை எஸ். ஐ . ஜியாவுத்தீன் (அல்கோபர் ) on 30 January 2017
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45177

மாஷா அல்லாஹ்.

கட்டுரையாளரின் மீண்டும் ஒரு வாள் வீச்சு.
அருமையான கட்டுரை.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்த ஆக்கத்தில் நவரசங்கள் கொட்டிக்கிடப்பதை காணமுடிகின்றது.

கோபம், சந்தோசம், இயலாமை, சாடல். ஊர் மணம், தமிழ் கெத்து.... போன்ற பல...!!

கூடவே ஒரு ஜாக்கிரதையையும் காண முடிகின்றது.. பாரதியாரை தூக்கிப் பிடிப்பதால், வாசகர்கள் யாராவது பாரதியாரின் மற்ற செயல்களை கட்டுரையாளர் ஆமோதிக்கின்றாரா என்று கேட்டு விடுவார்களோ என்பதால்

"கண்ணனையும், மீராவையும் காதலர்களாக வரித்துக் கொண்ட பாரதியைக் கண்டுக் கொள்ளவில்லை...." என்ற வரிகளை கவனமாக இணைத்துக்கொண்டு தப்பித்துக் கொண்டார். சபாஷ்.

நாளுக்கு நாள் இவர்களுடைய கட்டுரையில் மிகப்பெரிய மாற்றங்களும், புரஃபஷனல் டச்ச்சும் தெரிகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

சரிங்க, தோழி, தோழிமா, வாப்பா, தோலப்பா ... எல்லாம் சரிதான். மனைவியின் தோழியை எப்படி அழைப்பது?

சாளை எஸ். ஐ . ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சிறப்பான பதிவு
posted by: அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) on 30 January 2017
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45178

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரி உம்மு நுமைரா அவர்களின் ஆக சிறந்த ஆக்கம் இது!

நம் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு உணர்வின் (collective consciousness) வெளிப்பாடு, முதல் வரியிலிருந்து இறுதி வரி வரை, ஒரு புள்ளி கூட குறையாமல் ஓங்கி ஒலிக்கிறது.

தன்னெழுச்சியாக துவங்கிய இளையவர்களின் இந்த போராட்டம், ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாளத்தையும் தாண்டி, பன்முக நோக்கோடு விரிவடைந்தது உண்மையில் ஒரு வரலாற்று சிறப்புதான்!!!

வரலாற்றை திருத்தியே வயிற்றை நிரப்பும் கூட்டம் இந்த அமைதியான எழுச்சியை களங்கப்படுத்தி, வழமை போல் முஸ்லிம்களின் சேவைகளை மழுங்கடிக்க முயற்சித்ததை இதைவிட சிறப்பாக கேட்டுவிட முடியாது. வாழ்த்துகள் சகோதரி!

முந்தைய கருத்துகளில் மொழிந்ததுபோல், போராட்டக்களத்தோடு இந்த உணர்வு காணாமல் போய் விடாமல், நமது அன்றாட வாழ்விலும் பயன்படுத்திட வேண்டும்.

இன்னும் பற்பல நல்ல ஆக்கங்களை வழங்கிட இறைவன் பேருதவி புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ...தமிழர் ஒற்றுமை கண்டு மெரினா வியந்தாள்
posted by: A.R.Refaye (ABUDHABI) on 31 January 2017
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45180

கட்டுரையாளருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்,

FB- யில் என் பதிவு

144 தடை உத்தரவால் வெறிச்சோடிய மெரினாவை பற்றி

ஒரு சிறிய கருத்துக்கவிதை,இந்தியாவில் அறவழியில் எந்தப் போராட்டம் நடந்தாலும் காந்தி அங்கே தொடர்புபடுத்தப்படுகிறார், காந்தி கட்டியெழுப்பிய நம்பகத்தன்மையை உருவாக்கிய கூறுகள்தான் இந்தத் கருத்தின் மையம், “இன்றும் காந்தி” என தலைப்பிட்டு எழுதி உள்ளேன்

இன்றும் காந்தி

அறவழி என்றால் நீ தானே,இந்தியாவின் அடையாளமும் நீ தானே!! மெரினா கரை கூட களங்காமல் ஓர் போர், உலகோர்!!

மெச்சும் படி காளைகளுக்காய் காளைகள் ஒன்று கூடி!! முறைப்படி நடந்தோம் ,நீ சிலையாய் நிற்க ,உன் நிழலில்!!

உன் அறவழி சிந்தனையை சிந்தையில் ஏகி நின்றோம்!! மீண்டும் ஒரு சுதந்திரத்தை மீண்டெடுத்தோம் அஹிம்சையால்!!

காவி கொடிபிடிப்போர் ,சாதி தீயை தீட்டுவோர், மேல்தட்டு!! மேதாவி என மார்பில் வேல் குத்தி குருதி குடித்தோர்!!

காந்தியின் பதாகையை ஏந்தியிருக்கவில்லை கையில்!! தானும் மகாத்மா என மகத்தான வரலாற்றை தந்த தமிழர்கள்!!

தமிழர் ஒற்றுமை கண்டு மெரினா வியந்தாள் ,மக்களின்!! உள்ளத்தில் மெமரியாய் உறைந்தாள்!!

மோடி வாசலுக்கு போகாது வாடி வாசலை திறக்க செய்த!! கோடி தமிழர்களின் புகழ் தரணியாவும் தடம் பதிந்தது!! .

அன்று இந்தி மொழி வென்ற தமிழர்களுக்கு இல்லை 144

இன்று ஆள்வோரே கடல் அலைகளுக்கு தருவீரோ 144

அலையாடும் மெரினா பரந்த மணற்பரப்பில்!! விளையாடும் பிள்ளைகளை தடுத்தீரோ!!

காளைகளால் "களை" எடுக்கும் காலம் வெகுதூரமில்லை!!

காந்தியத்துக்குள்ளே காந்தியாய் அஹிம்சையாய் வெல்வோம்!!

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 31 January 2017
IP: 37.*.*.* | Comment Reference Number: 45181

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பார்க்காத்துஹு. இறையருள் நிறைக.

இந்த ஏறு தழுவல் அகிம்சையான எழுச்சிப்போரின் எம்போன்ற புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மனதில் நாமும் இந்த அறப்போரில் பங்கெடுக்கமுடியவில்லையே நம்மாலான உதவியை நாம் இறங்கிச்செய்யமுடியவில்லையே என்ற ஒரு தாங்கமுடியாத வலியிருந்தது இருந்தபோதும் வலைத்தளங்களால் முடிந்த அளவு பின்னியெடுக்கமுடிந்ததை நினைக்கும்போது மனதிற்கு சற்று ஆறுதல் இறைவனுக்கே எல்லாப்புகழும்

தமிழகத்திலும்,உலகெங்கிலும் காளைகளுக்கு இணையாக பெண்சிங்கங்களும் எப்படிகர்ஜித்தன!மாஷா அல்லாஹ் இவள் நிச்சயமாக முறத்தால் புலிகளை விரட்டியவள்தான் அன்று இன்று அவள் அறத்தால் அதிரவைத்தால் அந்தவீரமும் விவேகமும் அவள்கண்களிலும்,குரலிலும் ஆக்ரோஷத்திலும் ஆயிரமாயிர அக்னி வேள்விகளைவளர்த்தன.

அதுபோலவே இந்தக்கட்டுரையிலும் என்தமிழச்சிதான் கர்ஜித்திருக்கிறாள்

கொம்புசீவப்பட்டதென்னவோ காளைகளுக்குத்தான் அனால் முதலைகளும்,திமிங்கிலங்கள் கருச்சிதைந்துவருகின்றன.

இந்தவேளைகளில் தம்மை சைவமென்று சொல்லிக்கொள்பவர்களை அவர்கள் தமது நெறிஇழந்த பேச்சுக்களால் நரமாமிச உண்ணிகளென்று தம்மை ஊடக, உலகரீதியா வெளிச்சம்போட்டுக்காட்டிவிட்டார்கள் பாவம் சிலவாலறுந்த நரிகள்

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

இது தமிழனின் சொல் அதனால் அந்த மக்கள் வெள்ளத்திற்கு தமிழன் சோறும்,நீரும் வழங்கினான் இதிலும் உனது குறுக்குப்புத்தி அது எப்படி முடிந்ததென்று கணக்குக்கேட்கிறாய் வள்ளுவனின் இந்தக்குறளுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்

""உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்வர் ""

என்றுசொன்ன வள்ளுவனுக்கு உங்களைப்போல் ஒரு பக்கம்சிலையும் மறுபக்கம் அவன் இனத்தவனுக்கு உலையுயென்று வாழ்பவர்களல்ல தமிழர்கள்.

ஆழிப்பேரலையிலும்,மழைவெள்ளத்திலும்,புயலிலும் தமிழன் தன்னுடைய அடையாளத்தை மேலோங்கச்செய்தான் அதற்கு பலமைல்கற்களாக மேலாக ஒன்றுசேர்ந்து அவனே ஆழிப்பேரலையாகவும்,மழைவெள்ளமாகவும்,புயலாகவும் சீறிக்கிளம்பியிருக்கிறான்

தமிழனின் அடையாளம் காணவேண்டுமா குமரிக்கண்டத்தில் சிந்துவிலும் பாருங்கள் அவன் பாடிய நாகரிக சித்துக்கள் சிந்தும் சீர்களை உலகவரைபடம் உங்கள் கைகளில்

சிலதலைமுறைகளுக்குமுன் நமது தமிழ்ச்சமுதாய ஒருவருடைய செல்வத்தை அளவிட அவர்களிடம் எத்தனை மாடுகளிருக்கின்றன என்று கணக்குப்பார்த்தே செல்வத்தை அளவிடுவார்கள்.

அதாவது மாடு என்றால் செல்வமென்று பொருள் அதனால்தான் மணமுடித்துவரும் பெண்ணை மாட்டுபெண்ணென்று அழைக்கிறார்கள் செல்வப்பெண் மாடு என்பது எங்களுக்கு இப்பொழுதுவந்த சொந்தமில்லையடா மடையர்களே அது எங்கள் உணர்வோடு உடமையானதடா தென்னம்பிள்ளையும்,இளங்கன்றையும் இனம்கண்டுசொன்னவனடா தமிழன் எந்தமொழியில் பிள்ளையென்றும்,கன்று என்றும் மனித உறவான சொல் உள்ளது அப்படியிருக்குமானால் அதற்கு அடிப்படை தமிழாகத்தானிருக்கும்

மாஷா அல்லாஹ் கட்டுரையின் ஆசிரியர் அழகியமுறையில் சிதையாத இலக்கிய,இலக்கண வழியில் தமிழ்த்தொடர்புகளைத்தந்திருக்கிறீர்கள் அதற்கு ஒருத்தமிழனாக நன்றியுடன்,வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் மப்ரூக்

குடியேறியதைக்களைவோம் குடியுரிமையோடு வாழ்வோம் நல்ல விதைகளை ஊன்றுவோம், நல்ல உணவுகளை உண்போம் ஒற்றுமையோடுவாழ்வோம்

இணையட்டும் எழுதுகோல் முனையும்,ஏர்முனையும் பிறக்கட்டும் உலகும் புதியதோர் உலகம் என்றும் தலைநிமிர்ந்து வாழும் தமிழனும்,தமிழுமாக.

ஒன்றே குலம்
ஒருவனே இறைவன்
அவனுக்கே எல்லாப்புகழும்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: Mirshadhunnisa (Adiyakkamangalam,thiruvarur) on 01 February 2017
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45182

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ)

மா ஷா அல்லாஹ், கட்டுரையின் ஒவ்வொரு வரியும்,இடம்பெறும் வார்த்தைகளும் தமிழால் என்னைக் கட்டிப்போட்டது போலவே உணர்ந்தேன்.

தமிழுக்கும்,தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கும் இடையேயான நெருக்கம் யாரை விடவும் சளத்ததல்ல.தமிழ் மக்களின் மனங்களில் நஞ்சூட்டி முஸ்லிம்களை அந்நியப்படுத்திவிட முடியுமென எண்ணுவோர்வெற்றி பெற முடியாது. அழகிய மொழிநடை,அறிவார்ந்த கருத்துரை,மென்மேலும் தங்கள் எழுத்துப்போர் வீரியமடைய அல்லாஹ் அருள்புரிவானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: Asma Sharfudeen (France ) on 02 February 2017
IP: 212.*.*.* France | Comment Reference Number: 45188

மாஷா அல்லாஹ்..! தமிழ் முஸ்லிம்கள் தமிழோடு பின்னிப் பிணைந்தவர்கள் என்பதை உணர்த்தும் அருமையான கட்டுரை என்னருமை தோழியின் கரங்களால்..!

ஜல்லிக்கட்டினால் ஏற்படும் தீங்குகளும் உயிர்வதைகளும், புதிய சட்டத் திருத்தங்களின் அடிப்படையில் சீர்திருத்தப்பட்டு நடத்தப்படாதவரை இஸ்லாமிய அடிப்படையில் அது தவறென்றாலும், அதை தடை செய்யப்பட்டதின் உள்நோக்கத்தை அறிந்த தமிழ் மக்கள், மத வேறுபாடின்றி மொழி உணர்வால் ஒரு தாய் மக்களாக ஒருமித்து குரல் கொடுத்தது, தமிழக வரலாற்றில் ஒரு சாதனையாகவும், மனிதம் அறியா "மாக்கள்" செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு சாவு மணியாகவும் அமைந்தது, அல்ஹம்துலில்லாஹ்.

சொல்ல மறந்தது: குட்டிப்பய is so cute..!! :) மாஷா அல்லாஹ்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:.
posted by: binth misbahi (kayalpatnam) on 05 February 2017
IP: 107.*.*.* | Comment Reference Number: 45195

என் அன்புச் சகோதரியின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் எம் உள்ளத்தில் விதைத்த வித்துக்கள் மட்டுமல்ல,எழுத்துக்களால் எம்மை ஈர்தெழுத்து காயல் இணையதளத்தில் கைகோர்த்து விட்டன.

தமிழ் பேச சிரமப்படும் இன்றைய சூழலில் சகோதரியவர்கள் எழுத்துநடையும்,இலக்கணமும் கலந்து தமிழுணர்வை வெளிப்படுத்திய விதம் சாலச்சிறந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved