Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:09:50 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
காயல் வரலாறு
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous Article
ஆக்கம் எண் (ID #) 9
#KOTWART079
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 15, 2020
வேர்களுக்கு மீள்தல் – கொச்சி, காயல்பட்டினம்
இந்த பக்கம் 3345 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வழக்கறிஞரும் நண்பருமாகிய அஹ்மத் ஸாஹிப் வழியாக திருநெல்வேலியிலிருந்து இர்ஷாத் சேட் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சேட் கொச்சியில் பிறந்தவர். அவரது முன்னோர்கள் குஜராத்தின் கட்ச்சை சேர்ந்தவர்கள். வணிகத்தின் நிமித்தம் கொச்சியில் குடியேறியவர்கள்.

கொச்சியிலுள்ள இர்ஷாத் சேட்டின் சிறுபருவ கால நண்பர்களுக்கு காயல்பட்டினத்தைப் பார்க்க வேண்டும் என்ற அவா. காரணம், அவர்கள் நெய்னார் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வேர்கள் காயல்பட்டினத்திலிருந்துதான் புறப்பட்டுள்ளதாம்.

நான் சொன்னேன், “காக்காமாரே! இது பழைமையான நகரம்தான். தமிழக கேரள இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டுத் தலைநகரமும் கூடத்தான். அதில் ஐயமில்லை. ஆனால் அவையெல்லாம் நினைவுகளிலும் வரலாற்றின் ஏடுகளிலும் மட்டுமேதான் புதைந்து கிடக்கின்றன. எல்லா ஊர்களையும் போலவே இந்த ஊரும் சராசரியான ஊர்தான் என்ற நிலையை தக்க வைப்பதற்காகவே எந்த ஒரு வரலாற்று தடயத்தையும் எங்களூர் மக்கள் மிகக் கவனமாக காக்கத்தவறியிருக்கின்றனர். எனவே நீங்கள் வந்து ஏமாந்தால் நான் அதற்கு பொறுப்பில்லை என்றேன். கோரிக்கை குளிர்ந்து விட்டது.

இர்ஷாத் சேட்டிடமிருந்து மீண்டும் ஒரு மாதம் கழித்து தொலைபேசியழைப்பு. உங்களூரில் எங்களுக்கு வேறெதையும் எங்களுக்கு பார்க்க வேண்டாம். நெய்னார் தெருவை மட்டும் பார்த்து விட்டு சென்று விடுகின்றோம் என நாணலின் தலை போல கோரிக்கை எழுந்தது.

சூடற்ற ஒரு நண்பகல் வேளையில் கொச்சியிலிருந்து மூவர் குழு வந்திறங்கியது. நெய்னார் தெருவைக் காட்டினோம். மொத்த தெருவையும் அள்ள முயன்று தோற்றார்கள். காது வரை சிரித்தனர். வாப்பிச்சா வீட்டு அப்பாவை கண்ட நிறைவு. கூடுதல் தகவல்களுக்காக எனது தமிழாசிரியரும் வரலாற்று ஆர்வலருமான அபுல் பரக்காத் அவர்களிடம் அழைத்து சென்றேன்.

காயல்பதியின் பேரக்குட்டிகள்தான் கொச்சியின் நெய்னாமார் என்பது தெளிந்தது. மூதாதையரின் சங்கிலித்தொடரை துலக்கிக் கொடுத்தார் ஆசிரியர். காயல்பட்டினம் சதுக்கைத்தெருவிலுள்ள அஹ்மது நெய்னார் பள்ளியை மையமாக வைத்து நீதி பரிபாலனம் செய்து வந்த காழி அலாவுத்தீன், காழி நூருத்தீன், அஹ்மது நெய்னார் ஆகியோரின் குடும்ப கிளையினர் கொச்சிக்கு பதிநான்காம் நூற்றாண்டில் குடிபெயர்ந்துள்ளனர் என்பது தொன்ம வழிச்செய்தி. அவர்களின் இன்றைய தலைமுறையினர்தான் இவர்கள்.

ஐந்நூறு வருடங்களுக்கு பிறகு மரம் தன் வேரைப்பார்த்திருக்கின்றது. காலமெனும் பெருங்குன்றின் அடிவாரத்தில் கிடக்கும் மலைப்பிஞ்சு தன் முடியை தன் தொன்மையை தன் மீது கிடக்கும் வருடங்களின் கனதியை அறிந்துணர்ந்த வேளை.

கேரள தமிழக அரபு வரலாற்றறிஞர்களை தேடிப்போய் தேவையான தரவுகளையும் வரலாற்று சான்றுகளையும் திரட்டி அதை மலையாளத்தில் நூலாக்கியுள்ளனர். 21 ஜனவரி 2020 இல் நூல் வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது. என் குடும்பத்துடன் வழக்கறிஞர் அஹ்மத் ஸாஹிப், பாடகர் ஷாஹூல் ஹமீத் ஆகியோரின் குடும்பங்களும் நிகழ்ச்சியில் பங்கெடுத்தோம்.

கொச்சியின் கொச்சங்காடி பகுதியில் செம்பிட்ட பள்ளி (செம்பு கூரை வேயப்பட்ட பள்ளி) யின் சுற்று வட்டாரத்தில்தான் நெய்னாமார்களின் தறவாட்டு பகுதி அமைந்திருந்திருக்கின்றது. காலத்தின் சுழற்சியில் நெய்னாமார்களின் கையை விட்டு நிறைய மாறிவிட்டிருக்கின்றன. செம்பிட்ட பள்ளியின் கல்வெட்டில் அரபியோடு பழைய தமிழும் இருக்கின்றது. சூழலமைவை பார்க்கும்போது இந்தப்பள்ளியின் நிறுவனர்களாக காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.





டச்சுக்கோட்டைக்கும் சென்றோம். நன்கு ஆண்டு சுவைத்திருப்பார்கள் போலும். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலன்கள், அகன்ற கொட்டார நடைவழிகள், காம ஓவியங்கள் என களை கட்டியது. படகுலா கிளம்பினோம். படகின் உரிமையாளரின் ஓட்டை உடைசல் ஹிந்தியில் இட விளக்கம். எங்களைக் கண்டவுடன் தமிழிலும் முயன்றார். அது பாதி மலையாளமாகவே இருந்தது.



படகுத்துறையை விட்டு வெளியேறினால் யூத நகரம். கொச்சியின் மட்டாஞ்சேரியில் பன்னாட்டு வணிகம் கொழித்த காலத்தில் யூத தெருவில் உணவு நறுமணமூட்டி வணிக கிட்டங்கிகளும் கடைகளுமாக நிறைய யூதர்கள் இருந்திருக்கின்றனர். இஸ்ராயீலின் உருவாக்கத்திற்குப்பிறகு பெரும்பாலானவர்கள் வாழ்வின் பசுமை வளங்களைத் தேடி அங்கு சென்று விட்டனர். அந்தி சரிந்தபின் தெறித்திருக்கும் செவ்வொளி போல இன்று யூதர்கள் என ஐம்பது பேர்கள் மட்டில்தான் மீதமிருக்கின்றனர்.



நீல வெள்ளை பலகையில் ஹீப்ரூ எழுத்துக்களுடன் கூடிய கடை ஒன்று இருக்கின்றது. யூத வழிபாட்டு பொருட்களை விற்கும் கடை. இது போக ஆடை, பழங்கால பொருட்கள், நறுமண மூட்டி உணவுப்பொருட்கள் கடைகள் நிறைந்திருந்தன. பரதேசி சைனகோக்கிற்கு சென்றோம். கடுமையான பாதுகாப்பு சோதனைகள். நூற்றாண்டுகளின் நினைவிற்குள் யாவேஹூம் சைனகோக்குமே எஞ்சியிருக்கின்றன.



கொச்சி கோட்டை, கொச்சங்காடி, மட்டாஞ்சேரியின் வீதிகளில் நடந்தால் சில நூறு வருடங்கள் பின்னகர்ந்து சென்று ஐரோப்பியாவிற்குள் விழுந்தது போல இருக்கின்றது. போர்த்துக்கல், டச்சு, ஆங்கிலேயர்கள் என மூன்று காலனியாதிக்கங்களும் முகத்துக்கு முகம் பார்த்து நடந்த மண்.

மலையாளிகளுடன் தமிழர்கள், கன்னடர்கள், குஜராத்திகள், மார்வாடிகள், யூதர்கள், அரபிகள் என்ற மானுடக்கலவைகளின் சங்கமமாக கொச்சி திகழுகின்றது. கொச்சியின் பன்மயத்தன்மையை மனதில் கொள்ள வேண்டுமென்றால் அதன் வீதிகளில் காலாற நடக்க வேண்டும். ஊர்திகளை ஓரங்கட்டி விட வேண்டும். எந்த ஊருக்கு சென்றாலும் சரி. இதுதான் விதி. நிலத்து நீரை செடியின் உச்சிக்கு வேர் கடத்துவது போல கை கால் புலன்களின் வழியாக நாம் பார்க்க விழையும் நகரமும் அது சார்ந்த சமூக பண்பாட்டு கூறுகளும் நம் அறிவுக்குள்ளும் மனதுக்குள்ளும் துளித்துளியாக வந்து நிறையும்.

ஃபோர்ட் கொச்சி என்றழைக்கப்படும் கோட்டை கொச்சியின் கடற்கரைக்கு சென்றோம். அந்தி கதிரவன் கடலின் தொடுவானில் பொன்னிற திரவத்துடன் காத்திருந்தான். மிகக் கொஞ்சமேயுள்ள மணற் பரப்பு. அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தபோது தற்செயலாய் திரும்பிப் பார்த்தேன். மிக அண்மையில் ஒற்றை மதம் வழியும் கரிய யானையின் முகப்படாமை கண்ட திகைப்பு. சிவப்பும் கறுப்புமாய் எண்ணெய் துரப்பண கப்பல். கனவாட்டிகளின் ஒய்யாரக் கொண்டைகளாய் தொங்கிக் கொண்டிருந்த சீன வலைகளின் இருப்பில் திகைப்பு கரைந்து கப்பல்கள் அனைத்தும் படகுகள் போல சிறுத்து விட்டிருந்தன.





முதலாவது வந்த துரப்பண கப்பலின் நங்கூரம், கொதிகலன் ஆகியனவற்றை கடற்கரையில் காட்சிக்கு வைத்திருந்தனர். வரலாற்றின் துருவேறி பழுப்பேறியிருந்தன. அவை வைக்கப்பட்டிருந்த திண்டுகளில் பழங்கதைகளுடன் மனிதர்கள் சாவகசமாய் கால்களைத் தொங்கவிட்டவாறு அமர்ந்திருந்தனர்.

மஞ்சள் கோதுமை வெண்மை நிற மனிதர்களின் கலவை மொழிகளில் கொந்தளித்த வணிக பேரங்கள், ஒளிவு முயக்கங்கள், நாடு பிடிக்கும் போர்க்கூச்சல்கள் என எல்லாம் வருடங்களின் கனத்தில் அமிழ்ந்து கோட்டை கொச்சியின் கடலிலும் கரையிலுமாக உருண்டு கிடக்கக் கூடும்.

கடற்கரையை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கும்போது கத்தோலிக்க சபையின் புனித ஃபிரான்ஸிஸ் சேவியர் தேவாலயம் தென்பட்டது. பொ.ஆ. (பொது ஆண்டு) 1503இல் போர்த்துக்கீசிய அட்மிரல் பெட்ரோ அல்வரெஸ் டி ப்ரால் என்பவரின் தலைமையில் கட்டப்பட்டது. இந்தியாவிலேயே மிகப்பழைமையான தேவாலயம்.

பொ.ஆ. 1524 டிசம்பர் 24இல் இறந்த வாஸ்கோடகாமாவின் உடல் இந்த தேவாலயத்தில்தான் புதைக்கப்பட்டிருந்திருக்கின்றது. பொ.ஆ.1539 இல் போர்த்துக்கீசியர்கள் வாஸ்கோடகாமாவின் உடலை தோண்டியெடுத்து லிஸ்பனுக்கு கொண்டு போய் மறு அடக்கம் செய்து விட்டனர்.





வாஸ்கோடகாமாவின் முன்னாள் புதைகுழியைப் பார்த்தவுடன் தேவாலயத்திற்குள் ரத்த வீச்சத்துடனும் தீய்ந்த தசை நெடியுமாக ஐந்நூறு வருடங்களின் தொலைவிலிருந்து காலம் புரண்டெழுந்தது.

இலங்கையில் தொடங்கி காயல்பட்டினம் கொடுங்கல்லூர் கொச்சி பொன்னானி கொல்லம் கோழிக்கோடு பட்கல் கொங்கண் கோவா சூரத் அரபு தீபகற்பம் நடுவண் தரைக்கடல் சீனம் ரோம் ஐரோப்பா என விரிந்த கடல் வணிகத்தடம்.

வாசனைத்திரவியம் பந்தயப்புறா குதிரை பீங்கான் பட்டு பருத்தி உணவு நறுமணமூட்டிகள் சந்தனம் முத்து உள்ளிட்ட ஆபரண கற்கள் தங்கம் வெள்ளி செம்பு தோல் பொருட்கள் அவுரி ஆமையோடு என வகை வகையான வணிகப்பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்று வந்துள்ளது.

ரோமப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு கோழிக்கோட்டை தலைமையகமாகக் கொண்டு முஸ்லிம்களின் செல்வாக்கு உயரத்தொடங்கிற்று. பொ.ஆ. 12 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டுகள் வரை கடல் வணிகத்தில் முஸ்லிம்கள்தான் முழுக்க முழுக்க கோலோச்சினர். உணவு நறுமணமூட்டி வணிகத்தில் மேற்கு ஐரோப்பாவுடனான முஸ்லிம்களின் வணிகம் வலுவடைந்தது.

இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னரே கடல் வாணிகத்தொழில் நிமித்தமாக அரபுகள் இங்கெல்லாம் வந்து போய் இருந்திருக்கின்றனர். இஸ்லாத்தின் செய்தியும் பின்னாட்களில் வந்து இணையவே கடல் வணிகத்தில் முஸ்லிம்கள் அடைந்த வெற்றி உள் நாட்டு வணிகத்திலும் பெருகியது. வணிகத்துக்கப்பாலும் உறவுகள் விரிவு பெற்றன. அரபு மணமகன்கள் உள்ளூர் பெண்களை மண முடித்தனர்.

இந்த தலைமுறையினருக்கு தமிழ் மலையாளத்துடன் அரபும் தெரிந்திருந்தபடியால் அரபு வணிகர்களுக்கும் உள்ளூர் அரசர்களுக்கும் இணைப்பு பாலமாக விளங்கினர். இதனால் ஆட்சியாளர்கள் இவர்களுக்கு நெய்னார் பிரபு முதலியார் உள்ளிட்ட இன்ன பிற பட்டங்களை வழங்கினர். அன்றைய ஆட்சியில் இவர்கள் கண்ணியமாகவும் சமூக உயர் அந்தஸ்துடனும் வாழ்ந்து வந்தனர்.

அப்படி எமன் நாட்டிலிருந்து காயல்பட்டினத்தில் குடியேறி வாழ்ந்திருந்த அரபு முஸ்லிம்களின் தலைமுறையிலுள்ள ஷேஹ் அலீ அஹ்மத் அல் மஃபரி என்பவர் தனது சகோதரர் ஷேஹ் இப்றாஹீம் இப்னு அஹ்மத் மஃபரியுடன் பொ.ஆ. பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் கடல் வழியாக கொச்சியிலுள்ள கொச்சங்காடியில் குடியேறுகின்றார்.



அங்குள்ள கேரளியருக்கு நெறிக்கல்வியை போதித்து வரும் ஷேஹ் அலீ அஹ்மத் அல் மஃபரிக்கு பொ.ஆ. 1465 இல் ஜைனுத்தீன் மக்தூம் என்ற மகன் பிறக்கின்றார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் இவர் மக்களால் அன்பாக மக்தூம் தங்ஙள், முதலாம் ஜைனுத்தீன், அபூ யஹ்யா என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றார்.

இந்த காலகட்டத்தில் இந்திய கடல் வணிகத்திற்கு பெரும் சோதனை வந்து சேருகின்றது. பதினைந்தாம் நூற்றாண்டில், உணவு நறுமணமூட்டி வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த போர்த்துக்கல், ஐரோப்பிய கடல் வாணிபத்தில் வலிமையைப்பெருக்கிக் கொண்டிருந்த நேரம்.

ஆசியாவில் கிடைக்கும் உணவு நறுமணமூட்டிகளுக்கு ஐரோப்பாவில் கடும் விலை. அதிலும் இந்திய உணவு நறுமணமூட்டிகள் பெயர் பெற்றவை. காரணம் உயர்ந்த மருத்துவ குணங்கள் நிறைந்த இவற்றிற்கு அறுசுவை உணவிலுள்ள இடம் தலையாயது.

இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கான வணிகத்தடமென்பது சுற்று வழியாக இருந்தது. அத்துடன் உணவு நறுமணமூட்டி சரக்கு பொதிகள் பல கைகள் மாறி ஐரோப்பாவை வந்தடையும்போது செலவேறிய ஒன்றாகி விடுகின்றது. இதை தவிர்க்கவும் உணவு நறுமணமூட்டி வணிகத்தில் கொள்ளை ஆதாயமடையவுமான போர்த்துக்கல்லின் நேட்ட தேட்டங்கள்தான் இந்தியாவின் கிழக்கு மேற்கு கடற்கரையை மூன்று நூற்றாண்டுகள் வரை சீரழித்தது.

பொ.ஆ 1495 இல் போர்த்துக்கலின் அரசனாக மனுவேல் பட்டமேற்றார். அதிகார மையத்தின் சாய்மானம் போர்த்துக்கல்லின் செல்வாக்கு மிக்க ட காமா குடும்பத்தின் பக்கம் நெருங்கியது. இந்தக் குடும்பத்தில்தான் வாஸ்கோடகாமா, பொ.ஆ 1460 இல் பிறந்தார்.

கடல் வணிகத்தில் முஸ்லிம்களின் முதுகெலும்பை முறிக்கவும் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே நேரடி கடல் வழியை பிடிக்கவுமான போர்த்துக்கல்லின் நீண்ட கால ஏக்கம் வாஸ்கோடகாமா மூலம் சாத்தியமாயிற்று. வாஸ்கோடகாமாவிற்கும் கடலோட்டத்திற்கும் எந்த தொடர்புமில்லை. வரலாற்றில் அறியப்படாதக் காரணங்களுக்காக இந்த கடற் பயணத் திட்டமானது அவர் வசமே வந்து சேர்ந்தது என வரலாற்றாசிரியர்கள் எழுதுகின்றனர். போர்த்துக்கீசியரின் ஆதாய வெறியின் தர்க்க தொடர்ச்சிதான் வாஸ்கோடகாமா என்ற காலனியோடியாய் திரண்டிருக்கின்றது.

ஸ்பெயின் முஸ்லிம்களை சிலுவை யுத்தத்தின் தொடர்ச்சியாக அங்குள்ள அதிகார கிறிஸ்தவம் அழித்தொழித்த ஆண்டு 1492 பொ.ஆ. இதை ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் தொடக்கம் எனவும் கூறலாம். போர்த்துக்கல்லின் காலனியாதிக்க மனத்தின் உள்ளுறை வெடி பொருளாக சந்தை ஆதாய வெறியும் சிலுவை யுத்த வைராக்கியங்களும் கனன்று கிடந்தன. ஸ்பெயின் வெற்றி தந்த ஊக்கமானது போர்த்துக்கல்லின் பொது அறிவில் மினுங்கிக் கொண்டிருந்த காலனியாதிக்க நெருப்பை விசிறி விட்டது.

பொ.ஆ 1497 ஜுலை 08 இல் வாஸ்கோடகாமாவின் தலைமையில் போர்த்துக்கல்லிலிருந்து 170 பேர்களும் நான்கு கப்பல்களுமாய் புறப்பட்ட அணியானது நன்னம்பிக்கை முனையை கடந்து 1498 மே 20 இல் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் காப்பாடு கடற்கரையில் வந்திறங்கியது. பயணத்தின் நிறைவில் உடன் வந்தவர்கள் பட்டினியாலும் ஸ்கர்வி நோயாலும் இறந்தது போக எஞ்சியது 55 பேர்களும் 2 கப்பல்களும்தான். இவ்வளவு இடர்ப்பாடுகளையும் தாக்குப் பிடிக்குமளவிற்கு உரமேறிய வாஸ்கோடகாமாதான் கடல் வழியாக ஐரோப்பாவை முதலில் இணைத்த ஐரோப்பியன்.







இவர்களை சாமுத்திரி மன்னர் வரவேற்கின்றார். வணிகங்கள் நடைபெறுகின்றன. முஸ்லிம் வணிகர்களும் இந்த கொடுக்கல் வாங்கல்களை இயல்பாகவே எடுத்துக் கொண்டனர். நாட்கள் செல்ல செல்ல போர்த்துக்கீசியரின் உண்மை நோக்கத்தை முஸ்லிம் வணிகர்கள் புரியத் தொடங்கினர்.தங்களின் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

கோழிக்கோடு முஸ்லிம் வணிகர்களின் தீவிர எதிர்ப்பும் சாமுத்திரி மன்னருடன் வணிக உடன்படிக்கை ஏற்படுத்த இயலாமல் போனதும் போர்த்துக்கீசியர்களின் ஆக்கிரமிப்பு வெறியை கொடூரத்தின் உச்சத்திற்கு நகர்த்தின. பொ.ஆ. 1499 ஆகஸ்ட் 29இல் ஏழு கப்பல் நிறைய நறுமணமூட்டி பொதிகளுடனும் லிஸ்பன் திரும்பினார் வாஸ்கோடகாமா.

அவரின் அணியினரால் போர்த்துக்கல்லின் வணிக நிலைகளை இந்தியாவில் ஏற்படுத்த இயலாவிட்டாலும் புதிய கடல் பாதையை குறித்த அறிவுடனும் கேரள முஸ்லிம்களின் வணிக நிலவரங்கள், உள் நாட்டு அரசியல் ராணுவ வலிமை பற்றிய போதிய தரவுகளுடனும் கொள்முதலில் கிடைத்த கொள்ளை ஆதாயத்துடனும் நாடு திரும்பினர்.

பொ.ஆ. 1502 இல் போர்த்துக்கீசிய சிப்பாய்களுடன் தன்னை வலுவேற்றிக் கொண்டு மீளவும் கேரளம் வந்த வாஸ்கோடகாமா முஸ்லிம் வணிகர்களையும் சாமுத்திரி மன்னரையும் பணிய வைப்பதற்காக மனித இனம் சிந்தித்தேயிராத கொடூரங்களை அரங்கேற்றினார்.

இந்திய வணிக கப்பல்கள், போர்த்துக்கீசியரின் ஒப்புதல் சீட்டை பெற்ற பிறகே கடலில் பயணிக்க முடியும். அப்படி ஒப்புதல் சீட்டு பெற்ற கப்பல்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. சரக்குகளை கொள்ளையடித்து ஆட்களை கொன்று கப்பலுக்கு தீயும் வைத்தனர்.

ஹஜ் புனித பயணத்திற்கு புறப்பட்ட முஸ்லிம்களின் கப்பலை வழிமறித்து ஹாஜிகள் அனைவரையும் வாளுக்கு இரையாக்கியதோடு கப்பலையும் தீயிட்டுக் கொளுத்தினர். முஸ்லிம் வணிகர்களின் காதுகளை அரிந்து அந்த இடத்தில் நாயின் காதுகளை வைத்து தைத்தார்கள்.

சித்திரவதை, கொலை, கொள்ளை, வன்புணர்வு, வாள் முனை மதமாற்றம், பள்ளிவாசல்கள் அழிப்பு என போர்த்துக்கீசியரின் ஊழி நடனம் கேரள தீரங்களை அடுத்த எண்பதாண்டுகளுக்கு உதிரத்தால் சிவக்க வைத்தது. கேரளத்தின் வலதும் இடதுமாக கொங்கண் தொடங்கி காயல்பட்டினம், வேதாளை, இலங்கை வரை போர்த்துக்கீசியரின் கொடுங்கரங்கள் நீண்டன. இந்திய நாட்டின் மீதான தன் முதல் காலனியாதிக்கவாதத்தின் முன்னுரையை மனித குருதியினாலும் நிணத்தினாலும் தசையினாலும் போர்த்துக்கல் எழுதியது.

ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கங்களை முழுமையாக புரிந்து கொண்ட அறிஞரான முதலாம் ஜைனுத்தீன் மக்தூம், அன்னிய போர்த்துக்கீசியர்களுக்கெதிராக போராடுவது கட்டாய அறக்கடமையாகும் என்ற ஃபத்வா பிரகடனத்தை வெளியிட்டார்.

சாமுத்திரி மன்னரின் நாயர் படைகளுக்கு கடல் போர் பட்டறிவு இல்லாததினால் தமிழகத்தை வேராகக் கொண்ட அரிசி வணிகர்களும் கடலோடிகளுமான குஞ்ஞாலி மரைக்காயர்களையும் இணைத்து ஐக்கிய போரணிப்படையை கட்டினார் இரண்டாம் ஜைனுத்தீன் மக்தூம். உலகில் முஸ்லிமல்லாத ஒரு ஆட்சியாளனின் தலைமையின் கீழ் நடந்த ஒரே ஜிஹாத் என்றால் அது சாமுத்திரி மன்னனின் கீழ் நடைபெற்ற போர்த்துக்கீசிய எதிர்ப்பு போராகத்தான் இருக்கும். ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையின் மகத்தான கூட்டணியாகவும் இது விளங்கியது.

போர்த்துக்கீசிய கொடுங்கோன்மையையும், அவர்களோடு பொருதிய கேரளியரின் வீரம் தோய்ந்த போராட்டங்களையும் ‘துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் ‘ (புகழுக்குரிய போராளிகள்) என்ற தலைப்பில் விவரணை நூலை இரண்டாம் ஜைனுத்தீன் மக்தூம் தொகுத்திருக்கின்றார். போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பு பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நீடித்திருந்தது. இந்நூலில் பொ.ஆ. 1583 வரையுள்ள விவரணைகள் பதியப்பட்டுள்ளன. இதன் தமிழாக்கத்தை அடையாளம் பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

வாஸ்கோடகாமாவின் முதல் படையெடுப்பை தொடக்கமாகக் கொண்டு அதன் பிறகு வரிசையாக போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனிலிருந்து போர்த்துக்கீசிய சிப்பாய்கள் இங்கு படையெடுத்து வந்தனர். கொச்சியை தங்களின் தலைமையகமாக ஆக்கினர். சாமுத்திரி மன்னருக்கும் கண்ணூரின் கோலத்திரி மன்னருக்குமிடையே உள்ள பகை முரண்களை பயன்படுத்தி தங்களின் செல்வாக்கை கேரளத்தில் ஆழ ஊன்றினர்.

போர்த்துக்கீசியர்களின் வசம் வெடிமருந்துகளும் பீரங்கிகளும் இருந்தன. ஆனால் இந்தியப்படை வசம் மரபு வழி ஆயுதங்கள் மட்டுமே இருந்தன. எனினும் சாமுத்திரி மன்னரின் தலைமையில் குஞ்ஞாலி மரைக்காயர்கள் தொடுத்த தீரமிக்க தற்கொடை தாக்குதல்களை தாக்குபிடிக்கவியலாமல் தங்களின் காலனிய தலைநகரை கோவாவிற்கு போர்த்துக்கீசியர்கள் மாற்றினர். டாமன் டையூ வரை பரவியிருந்த போர்த்துக்கீசியர் நடத்திய மத விசாரணையில் ஏராளமான கிறிஸ்தவரல்லாதோர் சிறை பிடிக்கப்பட்டு வாளுக்கும் நெருப்புக்கும் இரையாக்கப்பட்டனர். நிபந்தனையற்ற அன்புதான் இயேசுநாதர் கொண்டு வந்த கிறிஸ்தவத்தின் ஆன்மாவாக இருந்தது. ஆனால் அந்த அன்பின் மையவிசை நீக்கப்பட்டதாக, ஆதிக்க வெறியின் பண்பாட்டு படைக்கலனாகவே போர்த்துக்கீசியர்கள் இங்கு கொண்டு வந்த கிறிஸ்தவம் பரிணமித்தது.

கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுகள் வரை புகைந்த இந்த காலனிய நெருப்பிற்கு எதிராக கேரள முஸ்லிம்கள் கொடுத்த விலை அளப்பரியது. டச்சுக்காரர்களின் காலனியாதிக்க தொடக்கத்தோடு போர்த்துக்கீசிய இருண்ட யுகம் முடிவிற்கு வந்தது. தலைமுறைகள் நீண்ட இந்த நெடுஞ்சமரில் கேரள முஸ்லிம் சமூகமானது அரசியல் சமூக பொருளாதர தளங்களில் பெரும் இழப்பை சந்தித்து ஓட்டாண்டியாகி விட்டிருந்தது. தாய் நாட்டின் முதல் விடுதலை வீரர்கள் என்ற பெருமை மட்டுமே அவர்களுக்கு மிச்சமிருந்தது.

கடற் கொள்ளையன், சிலுவை யுத்தக்காரன், காலனியாதிக்க முன்னோடி என்ற வரலாற்றின் ரத்த கிரீடங்களை தன் மேல் நிரந்தரமாக அணிந்திருக்கும் வாஸ்கோடகாமாவை, கண்டங்களை கண்டறிந்த கடலோடி புதிய உலகத்தை கண்டறிந்தவர் என இன்றளவும் விதந்தோதுகின்றனர். அன்றைய ஆக்கிரமிப்பு தீயின் பொறியை அணைய விடாமல் பொத்தி வளர்ப்பதோடு தங்களின் நோக்கங்களுக்கேற்ப வரலாற்றை வெட்டித் திருத்தும் காலனிய வரலாற்றாதரவாளர்கள் என இவர்களை அழைப்பதே பொருத்தம்.

புத்தன் இந்தியாவின் காலம் மீண்டும் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தூக்கி எறியப்பட்டுள்ளது அந்நிய காலனியாதிக்கவாதிகளின் பாதம் சுவைத்த அடிமைகளே இன்று நவ காலனியாதிக்கவாதிகளாக அதிகாரத்தின் பீடத்தில் அமர்ந்திருக்கும் இருள் வேளை.

ஆள்பவர்கள் போர்த்துக்கீசியர்களாக இருக்கும்போது மக்களும் ஜைனுத்தீன் மக்தூம் சாமுத்திரி குஞ்ஞாலி மரைக்காயர்களாகத்தான் இருப்பர். இது தர்க்க விதி.

தேவாலயத்தின் அரையிருளை விட்டு வெளியேறும்போது வெளியே வெளிச்சம் அமைதி மேவ நிரம்பியிருந்தது.

Previous Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved