விடுமுறை என்றதும் விடுதலை பெற்ற சந்தோஷ உணர்வு குழந்தைகளுக்கு. இவர்களை எவ்வாறு கையாளப் போகிறோம் என்ற திகைப்பும், மலைப்பும் பெற்றோர்களுக்கு.
இரு வேறு மன நிலைக்கு மத்தியில் துவங்கி விட்டது குழந்தைகளுக்கான விடுமுறை. இந்த அருமையான ஓய்வு காலத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது, அதற்கான திட்டமிடல் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை சுருக்கமாக நோக்குவோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
முதுமை வருமுன் இளமையை
நோய் வருமுன் ஆரோக்கியத்தை
வறுமை வருமுன் செலவச்செழிப்பை
பணிக்குச் செல்லும் முன் ஓய்வை
மரணத்திற்கு முன் வாழ்வினை
சிறப்பானதாகக் கருதும்படி அறிவுரை வழங்கினார்கள்.
போட்டிமிக்க பரப்பரப்பான இன்றைய காலச் சூழலில் நமக்கு கிடைப்பதற்குரிய ஓய்வு நேரத்தை வீனாக்கிடாமல் சரியான வழியில் பயன்படுத்திட நம்மை நாம் பழக்கிக் கொளலாமே!
வருடம் முழுவதும் பாடங்களையும், பரீட்சைகளையும், படித்தும், எழுதியும், கலைத்து விட்ட நம் அருமை குழந்தைகள் புத்துணர்வு பெற்றிட அவர்தம் மனம் மகிழும் வண்ணம் அவர்களின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப பூமியில் பரந்து விரிந்து காண்பதற்குரிய, உள்ளம் கொள்ளை கொள்ளும், இயற்கை வனப்புகளையும், பூமியின் சுவாரசியங்களையும், அரசர்களும், அமைச்சர்களும் காலஞ்சென்று விட்ட போதும், நம் கண்முன்னே ஆட்சி, அதிகாரத்தின், எச்சங்களாக நிமிர்ந்து நிற்கும் கோட்டை, கொத்தளங்களின் வரலாற்று சுவடுகளை கண்டு மகிழும் அதே நேரம், சிறந்த பாடங்களையும், படிப்பினைகளையும் கற்றுக் கொள்ளலாம்.
இது போன்ற பயணங்களில் வெறுமனே இயற்கையை ரசித்து மெய் சிலிர்ப்பதொடு நின்றிடாமல் நாம் காணும் காட்சிகள் அனைத்தும் நம்மை படைத்த இரட்சகனின் அருட் கொடிகள், அத்தாட்சிகள், இவை நம் இரட்சகனின் வல்லமையை, படைத்தது பரிபாலிக்கும் ஆற்றலை, நமக்கு கற்றுத் தருகின்றன. எனவே அந்த இறைவனை புகழ்ந்து துதி செய்திடவும், நன்றி செலுத்திடவும், பாவங்களை நினைத்து வருந்தி பாவ மன்னிப்பு கோரிடவும் அவ்விடத்திலேயே நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திட வேண்டும்.
உலகெங்கும் மனிதர்கள் நிம்மதி தேடி அலையும் இந்த நவீன காலத்தில் "அல்லாஹ்வை நினைவு கூறுவதின் மூலமாக உள்ளங்கள் நிம்மதி அடைகின்றன" என்கின்ற தீர்வினை முன் வைக்கும் அல் குர்ஆனின் அறைகூவலை சற்றே பிஞ்சு மனங்களில் பதிய செய்திடுங்கள்.
சூரிய ஒளிப்படும் சிறந்த புள் வெளியில் தனது மனதை இஷ்டபடி உலவ விடும் வேளையில், ஒரு பாரிய விருட்சத்தின் அடியில் குழந்தைகளை நிறுத்தி
அம்மரத்தின் கிளைகளும் இலைகளும் ஒருங்கினைதுள்ள விதத்தையும் -
தென்றல் காற்றில் அவை சுயாதீனமாக ஆடியசைவதையும் -
இலைகள், வீசும் காற்றின் வேகத்திற்கேற்ப அங்கும் இங்கும் அசைந்தாடுவதையும் -
விபரித்து அனுபவிக்க செய்யுங்கள்
தண்டுகளுக்கும், கிளைகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும்
கிளைகளுக்கும் இலைகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும்
அதனுள் மறைந்துள்ள பொறியியல் தொழில் நுட்பத்தையும்
மகரந்தச் சேர்க்கையெனும் அறிவியல் அற்புதத்தையும்
அவர்களுக்கு விளக்கிடுங்கள்.
வானத்தின் விசாலத்தையும், காற்றின் மென்மையையும், கடுமையையும் மட்டுமின்றி நதிகளைய்ம், அந்நதியில் பாயும் நீரின் அழகினையும், வேகத்தையும், விவேகத்தையும், நீரின் ஓட்டத்தில் ஏற்படும் நெளிவு சுளிவுகளையும், பூமியில் இறைவனால் நட்டப்பட்டுள்ள மலைகளின் உறுதியையும், வலிமையையும், பிரமாண்டத்தையும் கண்டு களிக்கச் செய்யுங்கள். இவை அனைத்தையும் படைத்தவன் யார் என குழந்தைகளிடம் வினா எழுப்பி, இந்த பூமியை அழகுற ஒழுங்கமைத்தவன் - இறைவன் ஒருவனே! என்ற விடையையும் கற்றுக் கொடுத்திடுங்கள். இதுப்போன்ற எண்ணிலடங்கா இறைவனின் அத்தாட்சிகளை வாழ்வின் அன்றாட நிகழ்வுகளாய் காண்பதும், கடந்து செல்வதுமில்லையா? இது போன்ற தருணங்களில் தவறாமல் இறைவனை நினைவு கூர்ந்து மனம் நிம்மதி அடைந்திட வழி காட்டிடுங்கள்.
இன்னும் கற்றலுக்கான ஏராளமான வாய்ப்புகள் பூமி எங்கும் பரந்து விரிந்து வியாபித்துள்ளது. கற்றலுக்கு எல்லை என்பது இல்லை. வானமே எல்லை. நாமோ கற்றலுக்கு எல்லை விதித்து, அவற்றை வகுப்பரையோடும், கரும்பலகையோடும், மட்டுப்படுத்திக் கொண்டோம்.
கல்விக்கூடங்களுக்கு வெளியிலே நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆசிரியராகவும், ஒவ்வொரு நிமிடமும் வகுப்பறையாகவும் பயன்படுத்திட சொல்லிக் கொடுத்திடுங்கள்.
தேர்வு காலங்களில் பெற்றோர் குழந்தைகள் அளவளாவிக் கொள்வதில் ஒரு பாரிய இடைவெளி ஏற்பட்டிருக்கும். எனவே இந்த விடுமுறை காலத்தை குழந்தைகளுக்கிடையிலேயான உறவை, நெருக்கத்தை, பாசப்பிணைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் வைப்பாக பயன்படுத்திடல் வேண்டும்.
குழந்தைகளுடன் அளவளாவிட கூடுதலான நேரத்தை ஒதுக்கிடுங்கள். அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் எனபதனையும், மிகுந்த அன்புக்கும் நேசத்துக்கும் உரியவர்கள் என்பதனையும், உங்களின் வார்த்தைகளால் அவர்களிடம் வெளிப்படுத்த தவறாதீர்கள். பாசத்தை மனதிலே பூட்டி சிறை வைத்திடாதீர்கள். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் இது போன்ற வார்த்தைகளை வெளிப்படுத்த வெட்கமும், தயக்கமும் கொள்கின்றன.
சந்தர்ப்பம் கிட்டும் பொழுதெல்லாம் உங்கள் கரங்களால், குழந்தைகளுக்கு உணவூட்டி மகிழுங்கள். உணவுண்ணும் நேரம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து உண்டு மகிழுங்கள். இராணுவத் தளபதி போல் கட்டளை பிறப்பிப்பதையே வழமையாக்கி கொள்ளாமல் - அவர்களின் கனவுகளையும், விருப்பங்களையும், எதிர்ப்பார்ப்புகளையும் காது கொடுத்து கேளுங்கள்.
அன்றாட நிகழ்வுகளை ஒரு நண்பனாக / நண்பியாக நெருங்கின் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவைகளுக்கு தகுந்த தீர்வினையும், ஆலோசனைகளையும் வழங்கிடுங்கள். இதன் மூலம் அந்த பிஞ்சுகளின் பிரச்சனைகளுக்கு காது கொடுத்திட, ஆறுதல் கூறி அரவணைத்திட நம் பெற்றோர்கள் துணை இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஆழமாக விதைத்திடுங்கள். தங்களது எண்ணங்களை, அபிலாசங்களை பகிர்ந்து கொள்ள எக்காலத்திலும், தடைகளை ஏற்படுத்தி தனிமைபடுத்திடாதீர்கள்.
சின்னஞ்சிறியதாய் இருந்தாலும் குழந்தைகள் செய்யும் நல விடயங்களுக்காக அவர்களை மனம் திறந்து பாராட்டி உற்சாகப்படுத்துங்கள்.
கடல் கடந்து வசிக்கும் தந்தையர், தம் துணைவியரோடு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தும் போதெல்லாம் - தவறிடாமல் குழந்தைகளுடன் அளவளாவிட நேரத்தை ஒதுக்குங்கள். அவர்கள் உங்களுக்கு விசேடமானவர்கள் என்பதை உணர்த்துங்கள். இறை வேத வரிகளையும், மாநபி மொழிகளையும் தினமும் கற்றிட செய்யுங்கள். இறை இல்லத்தோடு அதிகமான தொடர்பை ஏற்படுத்தி ஐங்காலத் தொழுகையை ஜமாஅத்துடன், தொழுதுவர பழக்கப்படுத்துங்கள்.
இரத்த உறவுகளை அறிமுகப்படுத்துங்கள். அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். அண்டை வீட்டாரோடு அன்புடன் பழகச் செய்யுங்கள். துன்பத்திலிருப்பவருக்கும், நலிந்தோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும், தேவையான பொருளுதவிகளை குழந்தைகளின் ஊடாக வழங்கச் செய்து, அவர்களின் உள்ளத்திலே பிறருக்கு உதவிடும் எண்ணத்தை விதைத்திடுங்கள்.
நோயுற்றவர்களை சுகம் விசாரிக்கவும், அவர்களின் நல் வாழ்வுக்காக பிரார்த்தனை செய்திடவும், உறவுகளில் மரணம் சம்பவிக்கும் பொது, அவர்களின் கவலையில் பங்கேற்று ஜனாஸா தொழுகையிலும், நல்லடக்கதிலும் கலந்து கொள்ள பழக்கப்படுத்திட வேண்டும்.
பல்வேறு தேவைகள் நிமித்தம் திருநெல்வேலிக்கு அடிக்கடி சென்று வரும் நாம், அங்கே அமைந்துள்ள முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு நம் குழந்தைகளை அழைத்துப்போய், அங்கே அனாதரவான நிலையில் இருக்கும் பிஞ்சுக் குழந்தைகளுடன் ஒரு சில மணித்தியாலங்கள் செலவிட்டு அளவளாவி அவர்களின் கரங்களாலே இனிப்புகளையும் பரிமாரிடச் செய்திடுங்கள். இதன் மூலம் அவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியையும், சகோதரதத்துவத்தையும் விதைத்திடும் வேளை, பெற்றோரின் பாசத்திற்காக ஏங்கும் அக்குழந்தைகளின் தேவைகளையும், துயரங்களையும் உள்வாங்கிக்கொண்ட, சமூகத்தின் மீது கரிசனையும், அக்கறையும் கொண்ட சிறந்த தலைமுறையினராக உருவாக்கிடுங்கள்.
பணத்தை சேமிக்க சொல்லித்தரும் ஒவ்வொரு பெற்றோரும் - அதனை எவ்வாறு இறை திருப்தி நாடி அற வழியில் செலவழித்திடலாம் என்பதை இது போன்ற ஒன்று கூடலினால் கற்றுக்கொடுத்திடுங்கள்.
இது போன்ற, இங்கே சொல்லாமல் விடப்பட்ட இன்னும் ஏராளமான நற்குணங்களை, மனிதப் பண்புகளை நம் குழந்தைகளிடையே ஆழமாகவும், அறிவுப்பூர்வமாகவும், விதைத்து பயிற்சி அளித்திட இந்த அருமையான விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - மனிதன் இறந்து விட்டால் அவனுடைய செயல் முடிந்து விடுகிறது. ஆனால் மூன்று விதமான செயல்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன.
1. நீடித்த, நிலையான தருமங்கள்
2. பயன் அளிக்கும் சிறந்த கல்வி
3. அவனுக்காக பிரார்த்தனை புரிந்து வரும் நல்ல பிள்ளைகள்
இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது, நல்லொழுக்கமும் நற்பண்புகளுமிக்க சிறந்த மனிதனாக நம் குழந்தைகளை நமக்காகவும், நம் சமூகத்திற்காகவும், உருவாக்கிடுவது இன்றைய காலத்தின் கட்டாய கடமையாகும்.
இறுதியாக - வகுப்பிலே முதல் இடம் பெற வேண்டும் என ஓய்வில்லாமல் குழந்தைகளை உற்சாகமூட்டும் பெற்றோர்களே! அது போலவே, சிறந்த மனித நேயமிக்க, முன் மாதிரியான மானுடனாக வாழ்ந்திட வேண்டும் என, இதையும் கொஞ்சமாவது சொல்லிவையுங்கள். |